நம் நாட்டில் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவு. அதிலேயும் பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் பெண்ணாகவும் இருந்து தொடர் தொழில்முனைவோராகவும் (serial entrepreneur) இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சில நிறுவனங்களை ஆரம்பித்து அதை மற்ற நிறுவனங்களுடன் இணைத்து இப்போது போர்சியா மெடிக்கல் (Portea Medical) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீனா கணேஷ் சென்னை வந்திருந்தார். ஒரு காலை பொழுதில் பிஸினஸ் மற்றும் வாழ்க்கை குறித்து அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து..
உங்களின் ஆரம்ப காலம் பற்றி சொல்லுங்கள்?
அப்பா ரயில்வேயில் இருந்ததால் ஒரு நிலையான இடத்தில் இருந்தது கிடையாது. பத்தாவது வரை கொல்கத்தாவில் படித்தேன். அதன் பிறகு சென்னை டபிள்யூ.சி.சி. கல்லூரியில் இயற்பியல் படித்தேன். பிறகு கோல்கத்தாவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நிர்வாகப்படிப்பு படிக்கச் சென்றேன்.
இயற்பியல் படித்து எதற்காக நிர்வாகப்படிப்பு படித்தீர்கள்?
என்னுடைய அண்ணன் ஐ.ஐ.எம்.-கோல்கத்தாவில் படித்தார். அதனால் நானும் அங்கு படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதை தவிர பெரிதாக ஒன்றும் காரணம் இல்லை. இதுதான் படிக்க வேண்டும் என்ற இலக்கும் இல்லை. அண்ணன் படித்தார் நானும் படித்தேன். இத்தனைக்கும் எனக்கு ஐ.ஐ.எம். ஆமதாபாத், ஐ.ஐ.எம். பெங்களூரு, ஐ.ஐ.எம். கோல்கத்தா என மூன்று கல்லுரிகளிலும் எனக்கு இடம் கிடைத்து. கோல்கத்தாவில் அண்ணன் படித்தார், மேலும் கோல்கத்தாவில் என்னுடைய ஆரம்ப காலம் இருந்ததால் ஐ.ஐ.எம். கோல்கத்தாவில் படித்தேன்.
பெரும்பாலும் ஐ.ஐ.எம்.-ல் படிப்பவர்கள் என்ஜீனியரிங் பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். அவர்களுடன் எப்படி சமாளித்தீர்கள்?
முதலில் அங்கு அனைவரும் புதியவர்கள். எனக்கு சில விஷயம் தெரியாது அவர்களுக்கு சில விஷயம் தெரியாது. அப்படியே கற்றுக்கொள்ள வேண்டியதுதான். உதாரணத்துக்கு டெல்லியில் பொருளாதாரம் படித்துவிட்டு வருபவர்களுக்கு கணிதம் கடிமாக இருக்கும். எங்களுக்கு கணக்குப்பதிவியல் கடினமாக இருக்கும்.
ஐ.ஐ.எம்.க்கு பிறகு என்ன செய்தீர்கள்?
1985-ம் ஆண்டு முதல் 92-ம் ஆண்டுவரை என்.ஐ.ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் பிறகு பிரைஸ்வாட்டஹவுஸ் கூப்பர்ஸ் (PricewaterhouseCoopers) நிறுவனத்தில் இரண்டரை வருடங்களும் மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தில் 5 வருடங்களும் வேலை செய்தேன்.
என்.ஐ.ஐ.டியில் நான் சேரும்போது அது சிறிய நிறுவனம். அதனால் நான் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. மைக்ரோசாப்டில் சில புதிய பிஸினஸ் யூனிட்களை ஆரம்பித்தேன். அதன்பிறகு கஸ்டமர் அசெட் என்ற பி.பி.ஓ நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தில் இருந்து வேலையை விடும்போது, ஏன் வேலையை விடவேண்டும் என்கிற ரீதியில் கருத்து சொல்லி இருப்பார்களே?
சொன்னார்கள்தான். இருந்தாலும் மைக்ரோசாப்டில் நான் தனியாக சில பிஸினஸ் பிரிவுகளை உருவாக்கி இருந்தேன். அந்த நம்பிக்கையில்தான் புதிய நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய டெக்னாலஜி நிறுவனத்தில் வேலையில் இருந்து விட்டு டெக்னாலஜி சார்ந்த நிறுவனம் ஆரம்பிக்காமல் ஏன் பி.பி.ஒ நிறுவனம் ஆரம்பித்தீர்கள்?
நான் நிறுவனம் ஆரம்பிக்க இருந்த சமயத்தில் டெக்னாலஜி சேர்ந்த நிறைய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் ஒர் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டாம் என்று பி.பி.ஓ. நிறுவனம் ஆரம்பித்தேன்.
நிறுவனம் ஆரம்பிப்பதற்கான முதலீடு?
என்னிடம் பெரிய தொகை ஏதும் இல்லை. கிட்டத்தட்ட 100 சதவீத தொகையும் வென்ச்சர் கேப்பிட்டல் மூலமாகதான் திரட்டினேன். நிறுவனம் வளர்ந்த பிறகு ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்துக்கு விற்றுவிட்டேன்.
அதன் பிறகு?
இங்கிலாந்தின் முக்கிய ரீடெய்ல் நிறுவனமான டெஸ்கோ நிறுவனத்தின் ’பேக் ஆஃபிஸ்’ வேலைகளை இந்தியாவில் செய்வதற்கு என்னை அழைத்தார்கள். அதற்கு பொறுப்பேற்று அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே டியூடர் விஸ்டா (tutorvista) என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தேன். இது ஓரு ஆன்லைன் டியுஷன் நிறுவனம். இதுமட்டுமல்லாமல் கல்வி சம்பந்தமாக பல வேலைகளை இந்த நிறுவனம் மூலம் செய்துவந்தோம். பள்ளிகளுக்கு டெக்னாலஜி மூலம் தீர்வுகளை கொடுத்தோம்.
அதன்பிறகு 2011-ம் ஆண்டு அந்த நிறுவனத்தை விற்றுவிட்டோம். லாக்-இன் காலம் இருந்ததால் பிப்ரவரி 2013 வரை அங்கி இருந்தேன். அதன் பிறகு இப்போது போர்ஷியா மெடிக்கல் என்ற டெல்லியை சேர்ந்த நிறுவனத்தை வாங்கி அதை நடத்திக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு இடையில் நானும் 11 நிறுவனங்களில் (delyver, online prasad, must see india, bluestone உள்ளிட்ட 11 நிறுவனங்கள்) strategic முதலீடு செய்திருக்கிறேன்.
ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதும், விற்பதுமாக இருந்தால் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? இது உங்களுக்கு பாதகமாக இருக்காதா?
வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் இதை வேறு மாதிரி பார்ப்பர்கள். அவர்கள் முதலீடு செய்யும் போது குறிப்பிட்ட காலத்துக்குள் வெளியேறுவதுதான் அவர்களது திட்டமாக இருக்கும்.
இதுவரை நான் ஆரம்பித்த நிறுவனத்தில் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் எளிதாக வெளியேற முடிந்திருப்பதால், இது எனக்கு சாதகமே. அதாவது என் பிஸினஸ் வெற்றிகரமாக இருந்தால்தான், என்னுடைய பிஸினஸை இன்னொருவர் வாங்குவார்கள், அப்போதுதான் என் நிறுவனத்தில் முதலீடு செய்த வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் வெளியேற வாய்ப்பு கிடைக்கும்.
போர்ஷியா மெடிக்கல் என்ன மாதிரி நிறுவனம்?
360 டிகிரி மருத்துவ சேவை கொடுக்கும் நிறுவனம் இது. டாக்டர், பரிசோதனை மைய வசதி, வீட்டுக்கே மருத்துவர்களை அனுப்பவது, நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்களை பராமரிக்க நர்ஸ்களை அனுப்புவது, வயதானவர்களை பராமரிப்பது, சிகிச்சைக்கு பின் தேவையான பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை நாங்கள் கொடுக்கிறோம்.
இந்தியாவில் குடும்ப டாக்டர் அமைப்புதான் இருக்கிறது. வீட்டுக்கே மருத்துவர் வருவதை மக்கள் ஏற்பார்களா? மேலும், குடும்ப டாக்டர்களுக்கு தன்னுடைய நோயாளிகளை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பார்களே! நீங்கள் எப்படி இதை சரி செய்ய முடியும்?
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் குடும்ப மருத்துவர் என்ற அமைப்பு இப்போது நகரங்களில் குறைந்து கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெருக்கடியில், தரமான சிகிச்சை வீட்டிலே கிடைக்கும் என்றால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.
இரண்டாவது, குடும்ப மருத்துவருக்கு தன்னுடைய நோயாளியை, பற்றி எல்லாம் தெரியும்தான். அதேபோல தான் எங்களிடமும். டெக்னாலஜி மூலம் ஒரு நோயாளியின் அத்தனை தகவல்களையும் எங்களுடைய மருத்துவர் படித்துவிட்டுதான் நோயாளியை பார்க்கச்செல்வார்.
பெரும்பாலும் மருத்துவர்கள் ஒரு கார்னர் அறையில் இருந்துக்கொண்டு சிகிச்சை அளிக்கத்தானே விரும்புவார்கள்? தினமும் வெளியே செல்லவேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?
அவர்கள் எங்களிடம் பணிபுரியும் முழுநேர மருத்துவர்கள். மேலும் அவர்கள் வெளியே செல்வதற்கு ஏற்ப அதிகமான ஊதியம் கொடுக்கிறோம். அதனால் வெளியே செல்ல தயாராக இருக்கிறார்கள்.
பிஸினஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு?
ஆண் பெண் பேதம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பிஸினஸுக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. அவர்கள் என்ன சொல்லுவார்கள் இவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் தங்களிடம் இருக்கும் மனத்தடையையும் உடைத்துவிட்டு வந்தால், வெளியே பெரிய பிஸினஸ் உலகம் காத்திருக்கிறது.
மீனா கணேஷ், தலைமை செயல் அதிகாரி, போர்சியா மெடிக்கல்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago