சாம் வால்டன் சிலருக்கு சூப்பர் ஹீரோ, சிலருக்கு வில்லாதி வில்லன். நீங்கள் அவரை எப்படிப் பார்த்தாலும், அவர் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளம்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சுங்கள். அவர்கள் திரும்பத் திரும்ப வருவார்கள்.
- சாம் வால்டன்
இந்தியாவிலேயே மிகப் பெரும் கோடீஸ்வரர் யார்?
முகேஷ் அம்பானி.
இந்தியாவிலேயே மிகப் பெரிய கம்பெனி எது?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.
ரிலையன்ஸ் கம்பெனியின் ஆண்டு வருமானம் எவ்வளவு?
2,96,000 கோடி ரூபாய்.
அம்மாடியோவ்! ரிலையன்ஸ் பெரீய்ய கம்பெனி!
இதோ இன்னொரு கம்பெனி! 27 நாடுகளில் 11,695 கடைகள். ஆண்டு வருமானம் 32,56,200 கோடி ரூபாய். ஆமாம், பதினொரு ரிலையன்ஸ் கம்பெனிகளின் வருமானத்தைச் சேர்த்தால் இந்த கம்பெனியின் வருமானம் வரும்.
இந்தியாவின் மாபெரும் ரிலையன்ஸையே தன் பாக்கெட்டில் அசால்ட்டாய்ச் சொருகிக் கொள்ளும் இந்த ராட்சசன் யார்?
அமெரிக்காவின் வால்மார்ட்.
1945. அர்க்கன்ஸாஸ் என்னும் குட்டி ஊரில் 5000 சதுர அடியில் தொடங்கிய கடை உலக மகா சூப்பர் ஸ்டோர் ஆகியிருப்பது ஒரு தனி மனிதனின் கனவின் கதை. இவர் - சாமுவேல் மூர் வால்டன், சுருக்கமாக, சாம் வால்டன்.
சாம் வால்டனின் அப்பா தாமஸ் வால்டன் அமெரிக்க ஒக்லஹாமா மாகாணத்தின் கிங்ஃபிஷர் என்ற ஊரில் வசித்துவந்தார். சகலகலா வல்லவர். மாடுகள், குதிரைகள், பண்ணைகள், வீடுகள், கார்கள் என எல்லா சாமான்களையும் வாங்குவார், விற்பார், விவசாயம் செய்வார், வட்டிக்குக் கடன் கொடுப்பார், இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கும் ஏஜென்ட். மனைவி நான்சி. இருவருக்கும் மார்ச் 29, 1918 அன்று, முதல் குழந்தை பிறந்தது. சாம் வால்டன்.
சாம் வால்டன் பிறந்தபோது உலகப் பொருளாதாரம் சரிவைச் சந்திக்கத் தொடங்கி யிருந்தது. அவருடைய 15 வயதுவரை அமெரிக்கப் பொருளாதாரத்தின் இருண்ட காலம். எனவே, வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம். அம்மாவின் பண்ணையிலிருந்து வீட்டுக்கு வீடு பால் சப்ளை, பேப்பர் போடுவது ஆகிய பணிகள் ஏழு வயதிலேயே தொடங்கின. இவற்றுக்கு நடுவே, பேச்சாளர்கள் சங்கத்தில் ஜொலித்தான். பள்ளியின் மாணவர் தலைவ னாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பள்ளியின் மிகச் சிறந்த மாணவனாக மகுடம் சூட்டப்பட்டான்.
கல்லூரியில் சேர்ந்தான். வால்டன் பழகும் கலையில் மன்னன். கல்லூரியில் சந்திப்பவர்களின் பெயர்களை நினைவில் பதித்துக் கொள்வான். அடுத்த முறை சந்திக்கும்போது அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பான். வால்டன் ஒரு முறை சொன்னான், பல்கலைக் கழகத்தில் யாருக்கு அதிக மாணவர்களைத் தெரியும் என்று போட்டி வைத்திருந்தால் நிச்சயமாக நான்தான் ஜெயித்திருப்பேன்.’ இதனால், மாணவர் தலைவர் போட்டி நடந்தபோது, வால்டன் படுத்துக்கொண்டே ஜெயித்தான்.
கல்லூரிப் படிப்புக்காக ஒரு டாலர்கூட வால்டன் பெற்றோரிடம் வாங்கவில்லை. மாணவர் தலைவனாக இருக்கும்போதே, போலி கெளரவம் பார்க்காமல் வீடுகளுக்குப் பேப்பர் போட்டான், கல்லூரி வளாகத்தில் இருந்த ஹோட்டலில் பகுதி நேர வேலை பார்த்தான், பல்கலைக் கழக நீச்சல் குளத்தின் காப்பாளர் வேலை பார்த்தான். சொந்தச் சம்பாத்தியத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தான்.
வால்டனுக்கு இருபத்தி ஒரு வயது. படிப்பை முடித்தவுடன், சில்லறை வியாபாரத்தில் ஈடுபடிருந்த ஜே. சி. பென்னி கம்பெனியில் மேனேஜ்மெண்ட் பயிற்சி (Management Trainee) பெறுபவராக வேலைக்குச் சேர்ந்தார். சாப்பாட்டு இடைவெளி நேரத்தில் ஊழியர்கள் சாதாரணமாக, தம் அடிப்பார்கள், வம்பு பேசுவார்கள், அல்லது குட்டித் தூக்கம் போடுவார்கள். வால்டன் போட்டியாளர்களின் கடைக்குள் உலாத்துவார், அவர்கள் பொருட்களை எப்படி அடுக்கி வைத்திருக்கிறார்கள், கடைக்கு வருபவர்கள் கவனத்தை ஈர்க்க என்னென்ன செய்கிறார்கள், வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்.
வால்டன் பதினெட்டு மாதங்கள் ஜே. சி. பென்னியில் வேலை பார்த்தார். 1942. இரண்டாம் உலகப் போர் வந்தது. போர்க்களம் போக விரும்பிய வால்டன் வேலையை ராஜினாமா செய்தார். மிலிட்டரி தேர்வில் கடைசிக் கட்டமாக மருத்துவப் பரிசோதனை. வால்டனுக்கு ஒரு அதிர்ச்சி. அவர் இதயத்தில் சின்னக் கோளாறு, அதனால் அவர் போர்க்களம் போக முடியாது.
வேலை தேடத் தொடங்கினார்.வெடிமருந்துத் தொழிற்சாலையில் சேர்ந்தார். வேலை பிடிக்கவில்லை. சில்லறை வியாபாரம்தான் உன் வாழ்க்கைப் பாதை என்று உள்மனம் சொன்னது.
சிறிய ஊர்களில் ஜே.சி.பென்னி, கே மார்ட், ஸீயர்ஸ் போன்ற பிரம்மாண்டப் போட்டியாளர்கள் இல்லை. அங்கே கடை திறக்கத் தேவைப்படும் மூலதனமும் குறைவு. ஆகவே, 7000 பேர் வாழ்ந்த, அர்க்கன்ஸாஸ் மாநிலத்தின் நியூபோர்ட் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தார். அங்கே பென் ஃப்ராங்க்ளின் என்னும் சூப்பர் ஸ்டோரின் கிளையை ஃப்ரான்ச்சைஸ் முறையில் ஒருவர் நடத்திக்கொண்டிருந்தார். நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கடன் வாங்கி, 20,000 டாலர் புரட்டி, வால்டன் அந்தக் கடையை வாங்கினார். ஒரே வருடத்தில் லாபமாக்கினார். ஊரிலேயே குறைவான விலை தந்தார். அதே சமயம், செலவுகளைக் குறைத்து லாபமும் பார்த்தார்.
அதிக வாடிக்கையாளர்களை தன் கடைக்கு எப்படி வர வைப்பது? வருகிறவர்களைக் கூர்ந்து கவனித்தார். பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் குடும்பத்தோடு வந்தார்கள். நியுபோர்ட் சின்ன ஊர். அங்கே பொழுது போக்கு அம்சங்கள் மிகக் குறைவு. டைம் பாஸ் என்றால் பார்க், சினிமா மட்டுமே. குடும்பத்தோடு நேரம் செலவிட வித்தியாசமான வழிகளுக்காக அவர்களுடைய ஆழ்மனம் அலைந்து கொண்டிருந்தது. எனவே, அவர்கள் கடைகளுக்கு வந்தது சாமான்கள் வாங்க மட்டுமே அல்ல. ஷாப்பிங் அவர்களில் பலருக்கு ஜாலியான பொழுதுபோக்கு. அவர்கள் மீண்டும் மீண்டும் கடைக்கு வர விலை குறைவாக இருந்தால் மட்டும் போதாது. குடும்பத்தினர் சந்தோஷமாக நேரம் செலவிடத் தேவையான வேறு அம்சங்களும் இருக்க வேண்டும்.
இந்தப் புரிதலின் அடிப்படையில் வால்டன் தன் கடையில் புதுமைகள் செய்யத் தொடங்கினார். கடையில் பாப் கார்ன், ஐஸ்க்ரீம் மெஷின்கள் வைத்தார். குழந்தைகள், குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள், எனக் கூட்டம் அலை மோதியது. இப்படிப் பல புது ஐடியாக்கள். அடுத்த முறை கடைக்குப் போனால் இந்த ஆள் என்ன ஆச்சரியங்கள் வைத்திருப்போரோ என ஊர் முழுவதும் பேச்சுக்கள், எதிர்பார்ப்புகள். இதற்குமேல் விளம்பரத்தை எந்தப் புதிய கடையும் எதிர்பார்க்க முடியுமா?
இப்போது அடித்தது புயல். வால்டன் கடை வைத்திருந்த இடத்தை ஐந்து வருட ஒப்பந்த வாடகைக்கு எடுத்திருந்தார். இந்தக் கால வரையறை முடிந்தவுடன், வாடகைக் காலத்தை மறுபடியும் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது வால்டனுக்கும் அந்த இடத்தின் சொந்தக்காரருக்குமிடையே இருந்த எழுதாத உடன்பாடு. ஐந்து வருடம் முடிந்தது. கடையைக் கபளீகரம் செய்ய இடத்துச் சொந்தக்காரர் திட்டமிட்டார். வால்டனைக் காலி பண்ண வைத்தார். முப்பத்து இரண்டு வயது மனைவி, நான்கு குழந்தைகள். மயக்கம், கலக்கம், மனத்திலே குழப்பம். ஆனால், ஒரு உறுதி, வருங்காலம் சில்லறைக் கடைதான்.
மூவாயிரம் பேர் வசிக்கும் பென்ட்டன்வில்லி என்னும் ஊரில் புதுக்கடை திறந்தார். என்ன வித்தியாசம் காட்டலாம்? சுயசேவைக் கடையாக்கினார். அமெரிக்காவில் மூன்றாவது சுய சேவைக் கடை, அர்க்கன்ஸாஸ் சுற்றுப்புறத்தில் முதல் சுயசேவைக் கடை. கடைக்காரர் சாமான்களை எடுத்துத் தந்து வாங்கியே பழகிய வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய முறை ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. ஆனால், விரைவில் இந்த அனுபவம் பிடித்தது. வால்டன் சோதனை வெற்றி.
1960. வால்டன் கடை தொடங்கிப் பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. வருடத்துக்கு ஒரு கடையாகப் பதினைந்து கடைகளுக்கு அவர் முதலாளி. இவை அத்தனையும் ஃபரான்ச்சைஸ் முறையில் வால்டன் நடத்திய பென் ஃப்ராங்க்ளின் கடைகள். விற்பனையும், லாபமும் அமோகம். ஒரே ஒரு பிரச்சினை. முக்கிய முடிவுகளை பென் ஃப்ராங்க்ளின் தலைமையகம்தான் எடுத்தார்கள். வால்டன் சுதந்திரப் பறவை. பிறர் இடையீட்டை வெறுத்தார். என்ன செய்யலாம்? தன் பெயரில் சொந்தக் கடை தொடங்குவதுதான்.
வந்தது அந்த நாள்!
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago