பொதுத்துறை நிறுவனங்களுக்கு சிதம்பரம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனங்கள் குறைந்த அளவிலான டிவிடெண்ட் அளித்தால் அதை ஏற்கமாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஐஓசி, கெயில், செயில், என்டிபிசி, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களை வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் (2013-14) அரசுக்கு ஏற்பட்டுள்ள பட்ஜெட் பற்றாக்குறையை ஜி.டி.பியில் 4.8 சதவீத அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. இதை ஈடுகட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் டிவிடெண்ட் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் திரட்ட உத்தேசித்திருந்த தொகையை ஓரளவு ஈடுகட்ட முடியும் என அரசு நம்புகிறது.

அரசு ஓரளவு அதிக ஈவுத் தொகையை எதிர்பார்க்கிறது. அதற்காக சிறப்பு ஈவுத் தொகை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த நிதிஆண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அரசுக்கு ரூ. 55,443 கோடி ஈவுத் தொகையாகக் கிடைத்தது. இந்த நிதிஆண்டில் ரூ. 73,666 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் அரசு தீவிரமாக உள்ளது.

டிவிடெண்ட் வழங்குவது தவிர, நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டப் பணிகள் குறித்தும் நிறுவனத் தலைவர்களுடன் சிதம்பரம் விவாதித்தார். விரிவாக்கப் பணிகளை முடுக்கிவிடுவதன் மூலம் கட்டமைப்பு பணிகள் வேகம் பெற்று பொருளாதார வளர்ச்சி வேகம் பிடிக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பாகும்.

12-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தன. 6-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் விரிவாக்கம் குறித்து எவ்வித நடவடிக்கையும் காணப்படவில்லை.

ஓஎன்ஜிசியின் செயல்பாடு நிதி அமைச்சருக்கு முழு திருப்தி அளித்ததாக கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி தலைவர் சுதீர் வாசுதேவா கூறினார். முதல் கட்டமாக ரூ. 14 ஆயிரம் கோடியை விரிவாக்க நடவடிக்கைகளுக்கு செலவிட்டுள்ளோம். நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் ரூ. 35 ஆயிரம் கோடி விரிவாக்க நடவடிக்கைகளுக்கு செலவிடத் திட்டமிட்டுள்ளோம். அது தவிர, ரொக்கக் கையிருப்பு ரூ. 13 ஆயிரம் கோடி உள்ளது என்றார்.

நடப்பு நிதி ஆண்டில் ரூ. 11,500 கோடி தொகையை விரிவாக்க நடவடிக்கைகளுக்குச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம் இதில் 87 சதவீதம் இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்று செயில் தலைவர் சி.எஸ். வர்மா கூறினார்.

கடந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச செலாவணி நிதியக் கூட்டத்தில் (ஐஎம்எப்) பேசிய சிதம்பரம், பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளதாகவும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக சிவப்புக் கோட்டைப் போட்டு, அதன்படி செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

எந்த சந்தர்ப்பத்திலும் சிவப்புக் கோட்டைத் தாண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் செலவுகள் அனைத்தும் வரம்புக்குள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அரசு வகுத்துள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு தயங்காது என்று குறிப்பிட்டார்.

நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் இதுவரை ரூ. 1,400 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகச் சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளாக 8 சதவீத வளர்ச்சியை எட்டி வந்த நிலையில் கடந்த நிதி ஆண்டில் சரிவு ஏற்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் 4.4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. முன்னர் இது 6.1 சதவீதம் என நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.75 சதவீத அளவுக்குச் சரியும் என கணித்துள்ளது.

ஆனாலும் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீத்துக்கு மேல் இருக்கும் என நிதியமைச்சர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

14 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்