சமூக மேம்பாட்டுத் திட்டத்துக்கு 37% ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

2014-15-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் சமூக மேம்பாட்டுத் திட்டத்துக்கு 37 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறைச் செயலர் கே. சண்முகம் தெரிவித்தார்.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நிதி ஒதுக்கீடு விவரங்களை செய்தியாளர்களுக்கு விளக்கினார் நிதிச் செயலர் சண்முகம்.

சமூக மேம்பாடு

வரும் நிதி ஆண்டுக்கு ரூ. 1.62 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாகவும் இதில் 37 சதவீதம் சமூக மேம்பாட்டுத் திட்டங்களான விவசாயம், கட்டமைப்பு மேம்பாடு, சாலை வசதி, முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம், ஐசிடிஎஸ் போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வளர்ச்சியை ஊக்குவிக்கும் பட்ஜெட் என்று கூறினார். சமூக நல மேம்பாட்டுத் திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 47,968 கோடியாகும். ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியத்துக்கான ஒதுக்கீடு ரூ. 4,200 கோடியாகும்.

மின்துறைக்கு ரூ. 10,400 கோடி ஒதுக்கீடு

மின்துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ. 9,085 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் மானியமாக ரூ. 5,400 கோடி, கடன் ரூ. 2,000 கோடி, மூலதனம் ரூ. 2,000 கோடி, கடனுதவி ரூ. 1,000 கோடி என மொத்தம் ரூ. 10,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,000 கோடி கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்தது. அது இப்போது ரூ. 1,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் உதவி தொகை ரூ. 4,000மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூவம் மேம்பாடு

கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த ரூ. 3,800 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நதியை மாசுப்படுத்தும் 337 பகுதிகளைக் கண்டறிந்து அதைத் தூய்மைப்படுத்த வரும் நிதி ஆண்டில் ரூ. 500 கோடியிலான பணிகள் மேற்கொள்ளப்படும். ஐந்தாண்டுகளில் நதியை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடன் அளவு

மாநிலத்தின் கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 25.25 சதவீத அளவுக்கு இருக்கலாம். அதாவது ரூ. 28 ஆயிரம் கோடி வரை கடன் இருக்கலாம் என்றிருந்தபோதிலும் தமிழகத்தின் கடன் அளவு ரூ. 25 ஆயிரம் கோடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு 19.18 சதவீதமாக உள்ளது. இதை வரும் நிதி ஆண்டில் 18.91 சதவீதமாகக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவு மானியம்

இலவச அரிசி திட்டம் உள்ளிட் டவற்றுக்கு கடந்த ஆண்டு ரூ. 4,900 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில வரி வருவாய் குறைவு

மாநிலத்தின் விற்பனை வரி வருவாய், கலால் வரி மற்றும் முத்திரைத்தாள் விற்பனை மூலமான வருமானம் ரூ. 3,800 கோடியாகும். வரி வருவாய் இனத்தில் ரூ. 2,700 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட நிர்வாக செலவினங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரி வருவாய்

வரும் நிதி ஆண்டில் வணிக வரி வருவாய் 11 சதவீதம் கூடுதலாக கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ரூ. 68,724 கோடி கிடைக்கும். முத்திரைத்தாள் வருமானம் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கூடுதலாக ரூ. 10,470 கோடி கிடைக்கும். கலால் வரி 13.5 சதவீதம் கூடுதலாக அதாவது ரூ. 6,482 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மது

மதுபான உற்பத்தி, விற்பனை வரி மூலமான வருமானம் கடந்த நிதி ஆண்டில் ரூ. 23,401 கோடி. வரும் நிதி ஆண்டில் இது ரூ. 26,295 கோடியாக உயரும்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம்

அரசு ஊழியர் ஓய்வூதியம் கடந்த நிதி ஆண்டில் ரூ. 14,505 கோடியாக இருந்தது. வரும் நிதி ஆண்டில் இது ரூ. 16,020 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 7-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் பணியாளர் களுக்கான ஊதிய செலவு 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகளை ஈர்க்க

தமிழகத்தில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க சர்வதேச முதலீட்டு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் அக்டோபரில் நடைபெறும். இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மதுரை, தூத்துக்குடி இடையிலான மேம்பாட்டுக்கு சிறப்பு மேம்பாட்டு அமைப்பு (எஸ்பிவி) அமைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கு தனியான ஊக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார் சண்முகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்