வணிக நூலகம்: வளம் தரும் வாழ்க்கைப் பாடம்!

பணம் மகிழ்ச்சியானது, பணத்தை செலவளிப்பது பரவசமானது. ஆனால், பணம் தொடர்பான கல்வி சலிப்பூட்டக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நிதி தொடர்பான கல்வியறிவு இல்லாமல், நம்மால் நமது கனவு வாழ்க்கையை திறம்பட வாழமுடியாது. சேமிப்பு மற்றும் பெருக்கம் என அனைத்திற்கும் நிதி கல்வியே ஆதாரம். அவ்வளவு ஏன்? புத்திசாலித்தனமாக பணத்தை செலவு செய்வதற்கும் கூட நிதி கல்வியே பேருதவி புரிகின்றது.

பணம் இல்லா வாழ்க்கை பயனற்ற வாழ்க்கையாகவே மாறிவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், தேவையான அளவிற்கு பணபலம் உடையவர்கள் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிடுகிறார்களா என்பதும் கேள்விக்குறியே!. ஆம், பெரும்பாலானோரால் அவ்வாறு வாழமுடிவதில்லை என்கிறார் “யு ஒன்லி லிவ் ஒன்ஸ்” என்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் “ஜாசன் விடுக்”.

வாழ்க்கை மீதான தெளிவான பார்வை மற்றும் நிதி ஆரோக்கியத்திற்கான இலக்குகளை தீர்மானித்தல் போன்றவற்றில் கோட்டைவிட்டுவிடுவதால் பெரும்பாலானோரால் தங்கள் விருப்பப்படி தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடிவதில்லை என்கிறார் ஆசிரியர். பணம் தொடர்பான ஒருவரது மனநிலை மற்றும் அதை சரிவரக் கையாளுதல் ஆகியவற்றைபற்றி தெளிவாக கற்றுத்தருவதோடு, நமது கனவு வாழ்க்கையை வாழ்வதற்கான முழுமையான வழிமுறைகளைச் சொல்லும் வழிகாட்டியாகவும் உள்ளது இந்தப் புத்தகம்.

நிதி கல்வி!

பணம் மகிழ்ச்சியானது, பணத்தை செலவளிப்பது பரவசமானது. ஆனால், பணம் தொடர்பான கல்வி சலிப்பூட்டக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது அல்லவா!. நிதி தொடர்பான கல்வியறிவு இல்லாமல், நம்மால் நமது கனவு வாழ்க்கையை திறம்பட வாழமுடியாது என்கிறார் ஆசிரியர். மனித வாழ்க்கையின் பெரும்பகுதி நிதி சார்ந்தே இருப்பதால், அவை தொடர்பான சரியான முடிவுகளை மேற்கொள்வதற்கு நிதி கல்வியே பெரும்பங்காற்றுகிறது. நமது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான ஆற்றலைக் கொடுப்பதும் நிதி கல்வியே.

நிதியை கையாளுதல், நிதி ரீதியிலான முடிவுகளில் தவறுகளைக் குறைத்தல், நமது நிதியை திறம்பட நிர்வகித்தல், நிதி சேமிப்பு மற்றும் நிதி பெருக்கம் என அனைத்திற்கும் நிதி கல்வியே ஆதாரம். அவ்வளவு ஏன்? புத்திசாலித்தனமாக பணத்தை செலவு செய்வதற்கும் கூட நிதி கல்வியே பேருதவி புரிகின்றது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பதிவுசெய்துள்ளார் ஆசிரியர்.

எது மகிழ்ச்சி?

நமக்கு பிடித்தமான பொருள்களை வாங்குவது எப்போதுமே மகிழ்ச்சிதான். பொருள்களை வாங்குவதற்கு நாம் மேற்கொள்ளும் செலவுகளைவிட, மனதிற்கு இனிய அனுபவங்களைப் பெறுவதற்காக நாம் மேற்கொள்ளும் செலவுகளிலேயே நமது மகிழ்ச்சிக்கான தாக்கம் அதிகமாக இருப்பதாக சில ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

உதாரணமாக, நீங்கள் நீண்ட நாட்களாக விரும்பிய பொருள் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் வாங்கியதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொருளை வாங்கியபோது உங்களிடம் இருந்த மன மகிழ்ச்சி இப்போதும் அப்படியே இருக்கின்றதா? அல்லது குறைந்துள்ளதா?. நிச்சயமாக அதே அளவிற்கான மகிழ்ச்சியை இப்போது நீங்கள் உணரமாட்டீர்கள். அதுவே, உங்களுக்கு விருப்பமான ஒருவருடன் நீங்கள் ஏற்கெனவே பகிர்ந்துக்கொண்ட மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை நினைத்துப்பாருங்கள். இப்போது உங்கள் மனதில் அதீத மகிழ்ச்சி ஏற்படுவதை உணரலாம். ஏனெனில், இனிமையான அனுபவங்களை நினைவுகூர்தல் நம்மை மீண்டும் அதே காலகட்டத்தை உணரச்செய்கின்றன.

எது செல்வம்?

அதிகப்படியான பணத்தை செலவு செய்பவரே செல்வச் செழிப்பில் சிறந்து விளங்குபவரா என்றால் கண்டிப்பாக இல்லை என்கிறார் ஆசிரியர். ஒருவரது செல்வம் மதிப்பிடப்படுவது அவர் எவ்வளவு பணத்தை செலவு செய்கிறார் என்பதைப் பொறுத்ததல்ல. மாறாக அவர் எவ்வளவு பணத்தை சேமிக்கிறார் என்பதைப் பொறுத்தது. அவ்வளவு ஏன்? ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைக்கூட அவரது செல்வத்திற்கான அளவீடாக எடுத்துக்கொள்ள முடியாது.

மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர், மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சேமிக்கிறார். அதேசமயம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர், மாதத்திற்கு இருபதாயிரம் ரூபாய் சேமிக்கிறார் என்றால், நீண்டகால நோக்கில் இவர்களில் யார் பணக்காரர் என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆக ஒருவரது சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவைகளே அவரது எதிர்கால வளமான வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

நிதி கட்டுப்பாடு!

தற்போதைய உணர்வுகளுக்கான தேவைகள் மற்றும் உடனடி மனநிறைவு ஆகியவற்றிற்காக நாம் பெரும்பாலும் வரவிற்கு அதிகமாகவே செலவு செய்துக்கொண்டிருகிறோம். எதிர்கால தேவைகள் துல்லியமாகப் புலப்படாத நிலையில், இப்பழக்கம் நமது நிதி வாழ்க்கைக்கு சற்றும் உகந்ததல்ல என்கிறார் ஆசிரியர். மேலும், இது முழுக்க முழுக்க உடனடியாக சரிசெய்யப்படவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார். நீண்ட தொலைவிற்கான சாலை பயணத்திற்கு முன்னால் நமது காரின் பாகங்களை சரிசெய்துக்கொள்வதைப்போல நீண்ட வாழ்க்கைப் பயணத்திற்கான நமது நிதி கட்டுப்பாடும், அதற்குத் தேவையான மாற்றங்களும் அவசியமான ஒன்றே.

இதற்காக நமது தினசரி, வாராந்திர, மாத மற்றும் வருட நிதி நடைமுறைகளை தகுந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்த வேண்டும். இந்த மதிப்பீடு முக்கியமாக நாம் மேற்கொள்ளும் செலவுகளில் இருக்க வேண்டும். என்ன செலவு செய்கிறோம் மற்றும் எப்படி செலவு செய்கிறோம் என்கிற கேள்விகளை நமது ஒவ்வொரு செலவின்போதும் நமக்குநாமே கேட்டுக்கொள்ள வேண்டும். செலவைப் போலவே சேமிப்பிலும் நிதி கட்டுப்பாடு நமக்கு அவசியமாகின்றது. செலவிற்கு பிறகு கையிலிருக்கும் பணத்தை மட்டும் சேமிக்கிறோமா அல்லது கட்டாய சேமிப்பு பழக்கம் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். நமது முதல் செலவே சேமிப்பாக இருக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

தேவைகளும் விருப்பங்களும்!

நமக்கான தேவைகள் மற்றும் நமது விருப்பங்கள் ஆகியவற்றிற்கு இடையே நிறையவே குழப்பங்கள் இருப்பதாக கூறுகிறார் ஆசிரியர். இவற்றிற்கான வேறுபாட்டினை புரிந்து கொள்வது நிதி கல்வியில் மிகவும் அவசியமான ஒன்று. தேவைகள் என்பவை நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள். விருப்பங்கள் என்பவை நாம் ஆசைப்படுவது ஆனால் நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதாக கருதமுடியாதவை.

வீடு, உணவு, உடைகள் மற்றும் மருந்து ஆகியன நமக்கான தேவை களோடு தொடர்புடையவை. அதே சமயம் நமது போக்குவரத்திற்கான கார் நமக்கான தேவையாக இருந்தாலும், சேமிப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பைக் மற்றும் பொது போக்குவரத்துகள் போன்ற மாற்று வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஆகவே இதுபோன்ற விஷயங்கள் நமது விருப்பங்களோடு தொடர்புடையவை. நிச்சயமாக நாம் விரும்பியபடி எந்த வழியில் வேண்டுமானாலும் நமது பணத்தை செலவிட முடியும். ஆனால், நமது செலவுகள் சரியான குறிக்கோளுடன் கூடிய திட்டமிட்ட செலவினமாக இருந்தால் மட்டுமே, நம்மால் தேவைகளைப் பெறவும் அதேசமயம் விருப்பங்களுக்காக சேமிக்கவும் முடியும்.

நிதி இலக்கு!

இலக்கே இல்லாமல் செலவு செய்வது மட்டுமல்ல, சேமிப்பதும் நமது எதிர்கால வாழ்க்கைக்கு முழு பலனை அளிக்காது. அதற்காக நிதி தொடர்பான சில இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது அவசியம். ஆறு மாதத்திற்கான அன்றாட வாழ்க்கை செலவுகளுக்கான பணம் நம்மிடம் தயாராக இருக்க வேண்டும். வேலையிழப்பு மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்காக இவை பயன்படும். மேலும், குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால என ஓய்வுகாலம் வரைக்குமான தேவைகளைப் பட்டியலிட்டு அவற்றிற்கான இலக்குகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

ஆயிரமாயிரம் வழிகாட்டு முறைகள் இருந்தாலும், வாழ்க்கைப் பாதையில் வெற்றிகரமாக பயணப்படுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அணுகுமுறையிலும், செயல்பாட்டிலுமே உள்ளது என்பதையும் கவனித்து செயல்படுவதே சிறந்தது.

தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE