கோவையின் வளர்ச்சிக்கு தொழில்துறை முதுகெலும்பாக இருந்து வருகிறது. பம்ப் மற்றும் மோட்டார் எந்திரங்கள், ஜவுளி, பொறியியல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஆகியன முக்கியத் தொழிலாக இருந்து வருகின்றன. மாநிலத்தின் தொழில் வளர்ச்சியே கோவையை வைத்து கணக்கிடப்படும் நிலையில், தொழில் விருத்தியை பெருக்கிக் கொள்வதற்கு வரும் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் தொழில் அமைப்புகள் எதிர்ப்பார்ப்பது என்ன என்பது குறித்த ஒரு பார்வை
தென்னிந்திய பஞ்சாலைக் கூட்டமைப்பு (சைமா):
தற்போதைய நிலையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் 47 சதவீத பின்னலாடை உற்பத்தியைக் கொண்டுள்ளது. தென்னிந்திய பஞ்சாலைக் கூட்டமைப்பு மூலம் ஆண்டிற்கு 50 லட்சம் பேல் பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
மாநிலத்தின் பருத்தி தேவை ஆண்டிற்கு சுமார் 120 லட்சம் பேலாக உள்ளது. ஆனால், நமது மாநிலத்தில் 7 லட்சம் பேல் பருத்தி மட்டுமே உற்பத்தி மூலம் கிடைக்கிறது. பருத்தி உற்பத்தியை அதிகரித்து ஜவுளித்தொழிலை ஊக்குவிக்க புதிய ஜவுளிக் கொள்கை அறிவிக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே மற்ற மாநிலங்களுடன் தமிழகம் போட்டியிட முடியும்.
புதிய ஜவுளிக் கொள்கை அறிவிப்பு மூலமாக மகாராஷ்ட்ரம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கடந்த காலத்தைவிட பல மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளன. நமக்கு என ஜவுளித்தொழில் கொள்கை இல்லாத போதும் அவர்களின் போட்டியைச் சமாளித்து வருகிறோம்.
முதலிடத்தை தக்க வைக்க வேண்டுமானால் புதிய ஜவுளிக் கொள்கை அவசியம். ஜவுளித் தொழில் நிறுவனங்களுக்கு தொடர் மின்சாரம் வழங்க வேண்டும். இல்லையெனில், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
கோன் நூலுக்கான வாட் வரியை 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க வேண்டும். எல்.இ.டி. பல்பிற்கான வாட் வரியை 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்கிறார் சைமா பொது செயலாளர் கே.செல்வராஜூ.
கோயமுத்தூர் திருப்பூர் மாவட்ட குறுதொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா):
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பொறியியல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், குறுந்தொழிலுக்கு என தொழில்பேட்டை இல்லை. இதனால், குறு தொழில் சாலைகள் குடியிருப்புகளுக்கு இடையே இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
குடியிருப்புதாரர்கள் இரைச்சல் குறித்து புகார் தெரிவித்தால் மாசுக்கட்டுப்பாடுவாரியத்தினர் நிறுவனத்திற்கு சீல் வைத்துவிடுகின்றனர். இதனால், எண்ணற்ற குறுந்தொழில் நிறுவனங்கள் சமீப காலத்தில் மூடப்பட்டுவிட்டன.
இந்த பிரச்சினையைப் போக்க குறைந்தபட்சம் கோவையில் மட்டும் 8 இடங்களில் குறுந்தொழில் பேட்டைகளை அமைக்க வேண்டும். தடையில்லா மின்சாரமும், மாவட்ட பதிவு மையங்களில் பதிவு செய்துள்ள குறு நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை தாய்கோ வங்கி மூலம் கடன் உதவியும் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் எந்திரங்கள் வாங்க 14.5 சதவீத வட்டியில் கடன் வழங்குகின்றனர். இதனை 8 சதவீத வட்டியில் வழங்க வேண்டும். மாநில அரசு போக்குவரத்து துறை, மின்வாரிய துறை, விவசாயத்துறை, பொதுப்பணித்துறை போன்றவற் றிற்குத் தேவையான பொறியியல் பொருள்கள் கொள்முதல் செய்கின்றன. இந்த பொருள்களை குறுதொழில்கூடங்களில் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் காட்மா தலைவர் எஸ்.ரவிக்குமார்.
தென்னிந்திய பொறியியல் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (சீமா):
வறட்சி காரணமாக, மாநிலத்தில் பம்ப் மற்றும் மோட்டார் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. பம்ப் மற்றும் மோட்டார் பொருள்களை அரசு கொள்முதல் செய்தால் மிகுந்த பயன் அளிக்கும். மேலும், பம்ப் செட் உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும். தற்போது, பம்ப் மோட்டாருக்கு வாட் வரி 5 சதவீதமாக உள்ளது. இதனை 2 சதவீதமாக குறைக்க வேண்டும்.
முக்கியமாக, இத்துறையின் வளர்ச்சிக்கு புது திட்டம் வகுத்து ஊக்குவிக்கவும், தடையற்ற மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சீமா துணைத் தலைவர் கிருஷ்ணகுமார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago