ரூ.5,000 கோடி வாராக் கடன் மீதான சொத்துகளை விற்க எஸ்.பி.ஐ. முடிவு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., தன்னிடம் இருக்கும் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடன் மீதான சொத்துகளை, சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களிடம் (ஏ.ஆர்.சி. -asset reconstruction companies) விற்கப்போகிறது.

200 வருட பாரம்பரியம் மிக்க பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் அளவு முதன் முறையாக ஐந்து சதவீதத்துக்கு மேல் அதிகரித்துவிட்டது. நடந்து முடிந்த டிசம்பர் காலாண்டில் இவ்வங்கியின் வாராக்கடன் 5.73 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. இதனால் தன்னிடம் இருக்கும் ரூ.67,799 கோடி மதிப்பிலான வாராக்கடன்களில் 5,000 கோடி ரூபாய் வாராக்கடன் மீதான சொத்துகளை, இந்த மாத இறுதிக்குள் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களிடம் விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வாராக்கடன்களைக் கட்டுப்படுத் துவதற்காக கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகள்தான் எஸ்.பி.ஐ.யின் இந்த முடிவுக்குக் காரணம்.

இப்போதைக்கு இந்தியாவில் சொத்துக்களை மறுசீராய்வு செய்வதற்கு 14 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங் களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்திருக்கிறோம். யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ, அவர்களுக்கு இதை விற்கப்போவதாகவும் இந்த நடவடிக்கை மார்ச் மாத இறுதிக்குள் முடியும் என்றும் எஸ்.பி.ஐ.யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடன்கள் மீதான சொத்துகளை விற்பது குறித்து பரிசீலனை செய்துகொண்டிருக்கிறோம் என்று வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கொல்கத்தாவில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கி இப்போதுதான் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

பொதுவாக சொத்துகளை மறுசீராய்வு செய்யும் நிறுவனங்கள், 5 முதல் 10 சதவீதத் தொகையை ரொக்கமாகவும் மீதித் தொகையை செக்யூரெட்டி ரெசிப்ட்களாகவும் (security receipts) கொடுப்பார்கள் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடந்து முடிந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.11,400 கோடி அளவுக்கு புதிய வாராக்கடன்கள் உருவாகி இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 67,799 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. இதன் காரணமாக வங்கியின் நிகர லாபம் 34 சதவீதம் சரிந்து 2,234 கோடி ரூபாயாக இருக்கிறது.

வாராக்கடனுக்காக ஒதுக்கப் பட்ட தொகையும் கூட 2,766 கோடி ரூபாயிலிருந்து ரூ.3,428 கோடியாக அதிகரித்திருக்கிறது.

இதில் 9,500 கோடி ரூபாய் வாராக்கடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்து உருவாகி இருக்கிறது. வாராக்கடனாக இல்லாமல் 6165 கோடி ரூபாய் கடனை நிறுவனங்கள் மறு சீரமைப்பு செய்திருக்கின்றன. இதற்காக 5,000 கோடி ரூபாயை மூன்றாம் காலாண்டில் வங்கி ஒதுக்கியது. இந்த ஒதுக்கீடு தொகை நான்காம் காலாண்டில் 9,500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியா அறிக்கையின்படி பொதுத்துறை வங்கிகள் 43,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இந்த மாத இறுதிக்குள் மறு சீரமைப்பு செய்யும் நிறுவனங்களிடம் விற்கும் என்று தெரிகிறது. ஒட்டுமொத்த வங்கித் துறையின் வாராக் கடன் அளவு 4.1 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு வாராக்கடன்களைக் கட்டுப்படுத் துவதில் கவனம் செலுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE