தொழில் முன்னோடிகள்: ரே க்ராக் (1902 - 1984)

By எஸ்.எல்.வி மூர்த்தி

பணம் பண்ணுவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு பிசினஸ் தொடங்கினால், ஜெயிக்கமாட்டீர்கள். செய்யும் வேலையை நேசியுங்கள், வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் தாருங்கள். வெற்றி நிச்சயம்.

ரே க்ராக்

1954 ஆம் ஆண்டு. அக்டோபர் 5. அமெரிக்காவில் வசித்த ரேமண்ட் க்ராக் 52 ஆம் பிறந்த நாள். பலர் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்கள். க்ராக் மனதுக்குள் சிரித்துக்கொண்டார். ``இந்த 52 வருடங்களில் என்ன கிழித்திருக்கிறேன்? நிலையில்லாத வேலை. மனைவியையும், ஒரு மகளை யும்கூட வசதியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. என் வாழ்க்கையில் இனிமேல் வெறும் இருட்டுத்தான்.”

அப்போது அவர் நம்பியிருக்கவே மாட்டார், இருளுக்குப் பின் கண் களைக் கூசவைக்கும் வெளிச்சம் வரப்போகிறது, அதிர்ஷ்ட தேவதை கூடிய சீக்கிரமே கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டப்போகிறாள் என்று. தோல்விகளே வாழ்க்கையாக இருந்தவருக்கு எப்படி வரும் நம்பிக்கை?

********

லூயி க்ராக், அவர் மனைவி ரோஸி இருவரும் பிழைப்புத் தேடி, சொந்த நாடான செக்கோஸ்லேவேக்கியாவை விட்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு வந்தார்கள். லூயி தந்தி அலுவலகத்தில் வேலை பார்த்தார். குறைந்த சம்பளம். ரோஸிக்குப் பியானோ வாசிக்கத் தெரியும். செலவுகளைச் சமாளிக்க, வீட்டில் பியானோ டியூஷன் எடுத்தார். முதல் மகன் ரேமண்ட் க்ராக், செல்லமாக, ``ரே’ என்று அழைத்தார்கள்.

க்ராக் தம்பதியினருக்குச் சோதிடத்தில் நம்பிக்கை உண்டு. வருபவர்களின் தலை அமைப்பைப் பார்த்து, அவர்களின் வருங்காலத்தைச் சொல்லும் கலை அப்போது அமெரிக்காவில் பிரபலம். நான்கு வயது மகனைத் ``தல” ஜோசியரிடம் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர் சொன்னார், ``இந்தக் குழந்தை சாப்பாட்டுத் துறையில் கோடி கோடியாகச் சம்பாதிப்பான்.” அப்பா, அம்மா இதை நம்பவேயில்லை.

ரே பள்ளிக்கூடம் போனான். படிப்பே ஏறவில்லை. எப்போதும், எதையோ நினத்தபடி, விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருப்பான். ``பகல் கனவு காண்பவன்” என்று அம்மா, அப்பா உட்பட எல்லோரும் பட்டம் வைத்தார்கள், கேலி செய்தார்கள்.

படிப்பில் மண்டுவாக இருந்தாலும், பிசினஸ் புத்தி அதிகமாகவே இருந்தது. கோடை காலங்களில் எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பான், விற்பான். பள்ளி நாட்களிலேயே, பலசரக்குக் கடை, மருந்துக் கடை, மாமாவின் உணவகம் ஆகிய இடங்களில் வேலை பார்த்தான். விற்பனையின் சூட்சுமம் அவனுக்குப் புரிந்தது. சொன்னான், “ஒரு சேல்ஸ்மேனுக்குப் பெரிய சொத்து அவன் புன்முறுவல். தன் சிரிப்பால், இனிமையான பழகுதலால், வெறும் காப்பி மட்டுமே சாப்பிட வருபவரை ஐஸ்க்ரீம் வாங்க வைத்துவிடலாம்.”

1916. வயது பதினான்கு. படிப்பைப் பாதியில் விட்டான். நண்பர்களோடு சேர்ந்து ரே மியூசிக் எம்போரியம் என்னும் இசைக்கருவிகள் விற்கும் கடை தொடங்கினான். நஷ்டம். கடையை மூடினார்கள். அப்போது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. ராணுவத்துக்கு ஏராளமான ஆட்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், குறைந்த பட்ச வயது பதினேழு. ரே போலிப் பிறப்புச் சான்றிதழ் தயாரித்தான். மிலிட்டரி ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்ந்தான்.

1917. போர் முடிந்தது. சிகாகோ திரும்பினான். அம்மா பியானோ வாசிக்கக் கற்றுக்கொடுத்திருந்தார். இந்த ஞானத்தால், ஒரு ஹோட்டலின் இசைக்குழுவில் சேர்ந்தான். அடுத்த நான்கு வருடங்கள். நிலையான வேலை கிடைக்கவில்லை. ஆனால், காதல் இதற்காகக் காத்திருக்கவில்லை. எத்தெல் என்னும் பெண்ணைச் சந்தித்தான். கண்ணோடு கண் இணை நோக்கின. 21 வயதில் திருமணம். அப்பா, அம்மா ஒரே ஒரு நிபந்தனை போட்டார்கள், ``முழுநேர வேலைக்குச் சேர வேண்டும்.”

லில்லி ட்யூலிப் கப் கம்பெனி என்னும் காகிதக் கோப்பைகள் தயாரிக்கும் கம்பெனியில் சேல்ஸ்மேன் வேலை கிடைத்தது. பம்பரமாய்ச் சுழன்றான். ஒரே வருடத்தில் கம்பெனியின் முன்னணி சேல்ஸ்மென்களில் ஒருவனானான். அடுத்த 15 வருடங்கள் லில்லி கப் கம்பெனியில்.

ரே வயது 37. பிரின்ஸ் என்பவர் புதிதாக மிக்ஸி தயாரிக்கத் தொடங்கியிருந்தார். அதற்கு நல்ல மார்க்கெட் இருக்கும் என்று ரே நினைத்தார். லில்லி கம்பெனி வேலையை விட்டார். பிரின்ஸ் மிக்ஸி விற்கத் தொடங்கினார். ஆறு வருடங்கள் அமோக விற்பனை. அதற்குப் பின், மலிவான போட்டி எந்திரங்களின் வருகையால், விற்பனை சரியத் தொடங்கியது. வாழ்க்கையை மறுபடி தொடங்கவேண்டிய கட்டாயம்.

இப்போது ஒரு ஆச்சரியம் நடந்தது. கலிபோர்னியா மாகாணத்தில், சென்ட் பர்னார்டோ என்னும் இடத்தில் மக்டொனால்ட்ஸ் என்ற பெயரில், மாரிஸ் மக்டொனால்ட்ஸ், ரிச்சர்ட் மக்டொனால்ட்ஸ் என்னும் இரு சகோதரர்கள் துரித உணவு விடுதி நடத்திவந்தார்கள். அவர்கள் எட்டு மில்க் ஷேக் தயாரிக்கும் எந்திரங்கள் ஆர்டர் செய்தார்கள். அமெரிக்கா முழுக்க மில்க் ஷேக் எந்திரங்களின் விற்பனை சரியும்போது, மக்டொனால்ட்ஸ் தந்த பெரிய ஆர்டரைப் பார்த்து ரே ஆச்சரியப்பட்டார். அப்படி என்ன பிசினஸ்தான் அவர்கள் நடத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள, சென்ட் பர்னார்டோ போனார். அங்கே அவருக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.

மக்டொனால்ட்ஸ் சிறிய துரித உணவு விடுதி. சாதாரண ஹோட்டல்களில்கூட மிக நீளமான மெனுகார்ட் இருக்கும். இங்கே மெனுகார்டே கிடையாது. ஏனென்றால், அவர்கள் சப்ளை செய்தவை மொத்தம் மூன்றே மூன்று ஐட்டங்கள்தாம் மாட்டு இறைச்சி அல்லது பன்றி இறைச்சி வைத்த பர்கர்*, மில்க் ஷேக், உருளைக்கிழங்கு ஃப்ரைஸ். சர்வீஸில் வேகம், வேகம். வாடிக்கையாளர் காத்திருக்கத் தேவையே இருக்கவில்லை. ஒரு சில நிமிடங்களில், தங்களுக்கு விருப்பமான உணவை வாங்கிக்கொண்டு போக முடிந்தது.

*பர்கர் இரண்டு பன்களுக்கு நடுவே, இறைச்சித் துண்டு, சீஸ், வெங்காயத் துண்டுகள், கோசு இலை மற்றும் சுவையூட்டும் பொருள்கள் கொண்ட உணவு.

க்ராக் மக்டொனால்ட்ஸ் பர்கரைச் சுவைத்துப் பார்த்தார். இத்தனை ருசியான பர்கரை அவர் இதுவரை சாப்பிட்டதேயில்லை. அவர் மனதில் திடீரென ஒரு ஐடியா- மக்டொனால்ட்ஸ் சகோதரர்கள் அமெரிக்கா முழுக்கக் கிளைகள் திறந்தால், ஏராளமான மிக்ஸிகள் நம்மிடம் வாங்குவார்களே?

மக்டொனால்ட்ஸ் சகோதரர்களோடு பேசினார். அத்தனை ரிஸ்க் எடுக்க அவர்கள் தயாராக இல்லை. மக்டொ னால்ட்ஸின் கிளைகள் திறக்கும் உரிமையை ஃப்ரான்ச்சைஸ் முறையில் வழங்கலாம் என்று ரே சொன்னார். அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டால், அவருக்குக் கமிஷன் தருவதாக மக்டொனால்ட்ஸ் சம்மதித் தார்கள்.

1954. ரே வயது 52. உள்ளத்தில் இருந்த வலு உடலில் இல்லை. சர்க்கரை நோய், மூட்டுவலி ஆகிய பிரச்சினைகள். மக்டொனால்ட்ஸ் தரப் போகும் கமிஷன் எத்தனை வரும் என்றே தெரியாது. ரிஸ்க் எடுத்தார். மில்க் ஷேக் இயந்திரக் கம்பெனி வேலையை விட்டார். மக்டொனால்ட்ஸில் சேர்ந்தார். ரேயின் செயல் பொறுப்பில்லாத முடிவு என்று மனைவி நினைத்தார். கருத்து வேறுபாடுகள் முற்றின. இருவரும் பிரிந்தார்கள்.

ரே கருமமே கண்ணாயினராக இருந்தார். ஃப்ரான்ச்சைஸ் முறையில் கிளைகள் திறந்தாலும், அத்தனை கிளைகளிலும், ராணுவத்தனமான சீர்மையையும், கட்டுப்பாட்டையும் கொண்டுவந்தார். தரம், சேவை, சுத்தம் ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை என்று அத்தனை ஊழியர்கள் மனங் களிலும் பதியவைத்தார். ஐந்தே வருடங் களில் 600 கிளைகள் திறந்தார். இந்தப் புயல்வேக வளர்ச்சியால், கம்பெனி யின் கடன்சுமை அதிகரித்தது. மக்டொ னால்ட்ஸ் சகோதரர்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 1961 ஆம் ஆண்டு, கம்பெனியை ரே- க்கு விற்றுவிட்டார்கள்.

அடுத்த பத்து ஆண்டுகள் அமோக வளர்ச்சி. 1972. தினமும் ஒரு கிளை திறப்புவிழா. கனடா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சிறகு பரப்பியது. விற்பனை 100 கோடி டாலர்களைத் தொட்டது. ரே அமெரிக்காவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரானார். 1975 இல், நிர்வாகப் பொறுப்பைத் தொழில் வல்லுநர்களிடம் ஒப்படைத்தார். ஆனால், எண்பது வயதாகி, நடக்கமுடியாமல், வீல்சேரில் உலாவியபோதும், மக்டொனால்ட்ஸோடு அன்றாடத் தொடர்பு வைத்திருந்தார். தன் 82 ஆம் வயதில் மரணமடைந்தார்.

இன்று மக்டொனால்டாஸுக்கு 119 நாடுகளில் 36,000 த்துக்கும் அதிகமான கிளைகள். தினமும் வரும் வாடிக்கையாளர்கள் 6 கோடி. ஆண்டு வருமானம் 26,000 மில்லியன் டாலர்களுக்கும் (1,82,000 கோடி ரூபாய்) அதிகம். ரேயை மட்டுமல்ல, பல லட்சம் பேரை மக்டொனால்ட்ஸ் கோடீஸ்வரர்கள் ஆக்கியிருக்கிறது. ஆமாம், நான்கு வயதில் ரே க்ராக் கேட்ட ``தல” ஜோசியம் பலித்துவிட்டது!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்