யாருக்கு யார் காவல்?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ஒவ்வொரு முறையும் அந்த சூப்பர் மார்க்கெட் சென்று கார் நிறுத்துகையில் குழந்தை சிரிப்புடன் வந்து கார் நிறுத்த உதவும் அந்த வயோதிகரை எனக்குப் பல காலமாகத் தெரியும். ஒரு புன்னகை அல்லது மிக சொற்ப வார்த்தைகளில் ஒரு உரையாடல், பிறகு ஏதோ ஒரு தருணத்திலிருந்து தவறாமல் ஒரு பத்து ரூபாய் நோட்டு டிப்ஸ். இவை தான் அதிக பட்சம் நான் அளித்தவை. சென்ற வாரம் ஒரு நாள் கொசு அடித்துக் கொண்டிருந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“நடந்துகினே இருக்கணும். உக்காந்தா தூக்கிகிணு போயிரும்” என்றார் சிரித்தவாறு.

“தூங்கற இடம் எது?”

“தோ. கடை வாசல்தான். என்ன வத்தி வச்சாலும் கேக்காது. தட்டிகினே உக்காந்திட்ருப்பேன்.”

“எவ்வளவு நேரம் ட்யூட்டி?”

“சாயங்காலம் ஏழு மணிக்கி வந்தா, டூட்டி மாத்தி ஆரமிச்சி காலலெ எட்டு மணி வரை. அப்புறம் வூட்டுக்கு போய் தான் தூங்கணும்.”

“பகல் நேரத்துல வேலை பண்றிங்களா?”

“நான் கொளத்துகாரரு. பில்டிங் வேலை பாப்பேன். இப்ப இல்ல! இப்ப வட நாட்டுப் பசங்க வந்தப்பறம் நம்மள எங்க கூப்பிடறாங்க? அவன் காலைல ஆறரை மணிக்கி வேலை தொவங்கறான்.

நம்ம குடும்பம் குட்டின்னு இருந்தா வர்ற சொல்லவே எட்டரை ஆயிரும்! அப்புறம் எப்படி? அதில்லாம இப்பல்லாம் பெரிய பெரிய கான்ட்ராக்ட் எடுத்துக் கட்டறாங்க. நம்ம மாதிரி ஆளுங்க இந்த மாதிரி ஏதாவது செஞ்சு வயத்த களுவுனா தான் உண்டு!”

பூர்வீகம் விசாரித்தேன். செங்கல்பட்டுப் பக்கம். விவசாயக் குடும்பம். சென்னை வந்து 40 வருடங்கள் ஆயிற்று. ஊர் பக்கம் நிலம் இருக்கு, இங்கு வீடு எதற்கு என்ற நினைப்பில் காலம் முழுவதும் வாடகை வீடுதான்.

மூன்று பெண்கள் கட்டி கொடுத்ததில் சொந்த ஊரிலிருந்த நிலமும் வீடும் விற்றாயிற்று. இரண்டு மகன்களில் ஒரு பையன் இங்கு ஒரு பில்டிங் காண்டிராக்டரிடமும் ஒரு மகன் கிராமத்திலேயே கடை வைத்தும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு வயது 69. கடந்த 10 ஆண்டுகளாக செக்யூரிட்டி வேலை பார்க்கிறார். ஏஜென்சி மாறி மாறி செய்தாலும் ஒரே வேலை தான்.

சம்பளம் கேட்டேன். ஏஜென்சி எடுத்துக் கொண்டு பிடித்தங்கள் போக இவர் கைக்கு வருவது மிக சொற்ப வருமானம்தான். இருந்தும் இது பரவாயில்லை என்கிறார். “மகளுங்களப் பாக்க நாளு கெளமைன்னு லீவு கேட்டா கொடுத்து அனுப்பறாங்க. திரும்ப வந்தா வேலை இருக்கே.....அதச்சொல்லு!” என்று சொல்லி அட்டகாசமாய் சிரித்தார். அவர் வாழ்க்கையை யோசித்தேன்.

தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறையா?

ஒரு விவசாயி கட்டிடத் தொழிலாளியாக மாறி பின் அங்காடிக் காவலாளியான கதையை என்னவென்று சொல்வது? விவசாயம் மற்றும் கட்டிடக் கலை இரண்டுமே எதிர் எதிரான தொழில்கள் என்றாலும் இரண்டுமே திறனான தொழில்காரனை நம்பியுள்ளது. இரு தொழில்கள் தெரிந்த அனுபவசாலியை (Skilled Labour) அனுபவமில்லாத தொழிலாளியாக (Unskilled Labour) மாற்றி ஒரு விளிம்பில் தள்ளிவிட்டு அனுபவமிக்க தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை என்று மேடையில் பேசிக் கொண்டிருக்கிறோமே?

இந்த காவலாளித் தொழில் நம் சமூகத்தில் மிகவும் மோசமாக நடத்தப்படும் தொழில்களில் ஒன்று என்பது என் எண்ணம். அரசாங்கத்தில் உள்ள காவல் துறையையே நாம் நன்றியுடனோ நல்ல எண்ணத்துடனோ பார்ப்பதில்லை.

காவல் துறை பற்றி நமக்குக் கிடைக்கும் செய்திகள் அப்படி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் நிம்மதியாக வாழ தங்கள் வாழ்க்கையை பிணையம் வைக்கும் அவர்களது கடமை உணர்வை நாம் மதிக்கிறோமா?

சமூகத்தின் அழிவு சக்திகளை மட்டுமே கையாளும் ஒரு வாழ்க்கை முறை எவ்வளவு விரக்தியானது? அவ்வளவு ஏன்? ஒரு அரசியல் தலைவர் அல்லது முதல்வர் வருகை என்பதற்காக எல்லா வயது ஆண், பெண் காவல் துறை பணியாளர்கள் தண்ணீர் கூட அருந்த வழியில்லாமல் கொளுத்தும் வெயிலையோ கொட்டும் மழையையோ பாராமல் சாலையில் நிற்பதைப் பார்க்கிறோம். கரிசனப் பார்வையாவது உண்டா கடந்து போவோரிடம்?

புறக்கணிப்பு

தேசத்திற்காக ராணுவம் சேர்வோர் பற்றிய பெருமிதம் நம் சமூகத்தில் முன்பு இருந்தது. இன்று எத்தனை குழந்தைகள் ராணுவத்தில் பணியாற்றுவதையோ காவல் துறையில் பணியாற்றுவதையோ பெருமையாக எண்ணுகின்றனர்?

ஒரு தகவல் படித்தேன். பஞ்சாப், வட கிழக்கு, சிக்கிம், கூர்க், தென்மதுரை போன்ற பகுதி மக்கள் கால காலமாக ராணுவம் மற்றும் காவல் துறையை தேந்தெடுத்தனர் என்ற தகவலுடன் ஒரு மாநிலம் காலம் காலமாக இந்தத் துறைகளுக்கு தன் மக்களை பெருமளவு அனுப்பவில்லை என்றும் தெரிந்தது. அந்த மாநிலம் குஜராத். (தேர்தல் நேரத்தில் என்னால் முடிந்ததை இதோ கொளுத்திப் போட்டு விட்டேன்!)

என் வாதம் இதுதான். நிரந்தர பணியும், அதிகாரமும், அங்கீகாரமும் கொண்ட அரசுக் காவல் மற்றும் ராணுவத்துறையையே புறக்கணிக்கிறோம் என்றால் தனியார் காவல் பணியாளர்களின் நிலை எம்மாத்திரம்?

நம் உயிரையும் உடமைகளையும் காக்கும் மிகப் பெரிய பொறுப்பையும் கொடுத்துவிட்டு, பற்றாக்குறையான சம்பளம் மற்றும் மோசமான பணி சூழல் என்று அளித்தால் எப்படி நிறைவான சேவை கிடைக்கும்?

வேலையால் வரும் மனச்சிக்கல்

நான் வேலை பார்த்த கார் கம்பெனியில் ஆரம்ப கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்தது. கம்பெனியின் பின் கோடியில் ஆளரவமற்ற ஒரு இடத்தில் ஒரு வட நாட்டு இளைஞன் வெற்றுப் பார்வையுடன் நின்று கொண்டிருந்தான். யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேசாமல், கிட்டத்திட்ட எதையும் செய்யாமல்- ஆனால் தயார் நிலையில் ஆயுதமேந்தி நிற்கும் அந்த வேலை எவ்வளவு உள சிக்கல்களை உண்டும் செய்யும் என யோசித்தேன்.

புது தில்லியில் டி. ஆர். டி. ஓ வில் என் உளவியல் துறை நண்பர்களை காணும் போதெல்லாம் ராணுவ வீரர்களின் மன நல பிறழ்வுகள் பற்றி விடிய விடிய பேசியது நினைவுக்கு வரும்.

மனமில்லை!

சுனாமி வந்தபோது நான் பெசன்ட் நகரில் குடியிருந்தேன். அந்த ஃப்ளாட் செக்யூரிட்டி மற்றும் பணிப்பெண்களின் குடும்பங்கள் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. மீண்ட உடமைகளை சில நாட்கள் எங்கள் கட்டிட மூலையில் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டபொழுது எங்கள் ஃப்ளாட் மக்கள் பலமாக மறுத்தது அவர்களின் மனித நேய பற்றாக்குறையைக் காட்டியது.

வீடு, கடை, அலுவலகங்கள் என லட்சக்கணக்கான காவல் பணியாளர்களின் உறக்கமில்லா உழைப்பும் நேர்மையும் நமக்கு தேவைப்படுகிறது. ஆனால் அவர்களை நாம் சரியாக பராமரிக்கிறோமா?

போகும் போதும் காவலாளி கன்னியப்பன் நிறைவாக சிரித்து வழி அனுப்பினார். “கடைக்கு வர்றவங்க யார் சார் எங்க கூடவெல்லாம் பேசறாங்க?”

கடைக்கு அவர் காவல். அவருக்கு யார் காவல்?

gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்