இதுதான் பேரம்!

By எஸ்.எல்.வி மூர்த்தி

டீல் முடிப்பது என்றால் என்ன? தொடர்பு கொண்ட அனைவரும் ஒப்புக்கொள்ளும் முடிவுகள் எடுப்பது. நம் அன்றாட வாழ்க்கையில், டீல் போடவேண்டிய பிரச்சினைகளை நாம் எல்லோரும் தினமும் சந்தித்து வருகிறோம்.

படிக்கும்போது கிரிக்கெட் டீமில் இடம் பிடிப்பது டீல்: காதலிக்கும் பெண்ணின் இதயம் கவர்வது டீல்; திருமணமானபின், மனைவியோடு மனம் ஒத்து வாழ்வது டீல்; வேலை கிடைப்பது டீல்: பதவி, சம்பள உயர்வுகள் பெறுவது டீல். வாழ்க்கையில், என்றும், எப்போதும் டீல்கள்தாம்.

ஆனால், டீல்கள் பற்றிய பொதுஜனப் புரிதல் மிகவும் குறைவாக இருக்கிறது. இரண்டு முக்கிய காரணங்கள் - டீல்கள் என்றாலே, அவை அரசியல் அல்லது பிசினஸ் தொடர்பானவை என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இதனால், எனக்கு எதற்கு டீல் போடத் தெரியவேண்டும் என்று நம்மில் பலர் நினைக்கிறோம், இரண்டாவது காரணம், டீல்கள் என்றாலே, அடுத்தவரை ஏமாற்றி, நாம் நினைப்பதை முடிக்கும் சமாச்சாரம் என்னும் எதிர்மறையான எண்ணம் இருக்கிறது.

டீல்களை முடிப்பது வேறும் பேச்சுத் திறமையல்ல: மனோதத்துவ அறிவு நிறைந்த பழகும் கலை. அடுத்தவர்களிடம் நம்மைப் பற்றிய நம்பிக்கையை உருவாக்கும் கலை. இது சுலபமானதல்ல: அதே சமயம் ராக்கெட் சயின்ஸூம் அல்ல. எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடிய, கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய கலை.

டீல் என்பது ஒரு போட்டி, நாம் ஜெயிக்கவேண்டுமானால், மற்றவர்கள் தோற்கவேண்டும் என்று நினைக்கிறோம். நம் இந்தக் கண்ணோட்டம் தவறு. இருவரும் ஜெயிக்கும்படியாக டீல்களை முடிக்கமுடியும்.

இதற்கு முக்கிய தேவை இரு தரப்பிலும், பிரச்சினையைத் தீர்க்கும் விருப்பம். ஒருவர் உதவி அடுத்தவருக்குத் தேவை என்னும் புரிதல் பேச்சு வார்த்தைகளால் தீர்வு காண முடியும் என்னும் எண்ணம். அடுத்தவரும், தீர்வு காணத்தான் பேச்சு வார்த்தைகளுக்கு வருகிறார் என்னும் நம்பிக்கை. பேசும் விஷயம் பற்றி நுண்ணறிவு, எதை விட்டுக்கொடுக்கலாம், எதை விட்டுக்கொடுக்கக்கூடாது என்னும் தெளிவு. நேர்மை, பழகும் திறமை, அடுத்தவரை மதித்தல்.

இந்தத் தகுதிகள் இருந்தால் மட்டும் போதாது, இவை தம்மிடம் இருக்கின்றன என்று ஒவ்வொரு அணியும், டீல்களுக்கான கருத்துப் பரிமாற்றங்களில், மற்றவருக்குத் தெரியவைக்க வேண்டும்.

மூன்று அம்சங்கள்

இதற்கு, கருத்துப் பரிமாற்றத்தில் இருக்கும் மூன்று அம்சங்களைப் பயன்படுத்தவேண்டும். அவை, மொழி, வார்த்தைகள், உடல் மொழி. இவை ஒவ்வொன்றும் என்னவென்று பார்ப்போம்.

என்ன சொல்கிறோம்? – மொழி, வார்த்தைகள்

எப்படிச் சொல்கிறோம்? – தொனி, குரல், ஓசை. சொல்லும் குரல், தொனி ஆகியவற்றால், நாம் பயன்படுத்தும் மொழி, வார்த்தைகள் ஆகியவற்றின் தாக்கத்தை மாறுபடவைக்கலாம்.

வார்த்தைகளே இல்லாத உடல் மொழி – முக பாவங்கள், உடல் அசைவுகள், சைகைகள்.

நாம் ஒரு கருத்தைச் சொல்லும்போது, இந்த மூன்று அம்சங்களும், அதைக் கேட்பவரிடம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன? நாம் ஏற்படுத்தும் தாக்கம் 100 சதவிகிதம் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு அம்சமும் எத்தனை பாதிப்பை ஏற்படுத்தும்?

7 % தாக்கம் – என்ன சொல்கிறோம்?

38% தாக்கம் – எப்படிச் சொல்கிறோம்?

55 % தாக்கம் – வார்த்தைகளே இல்லாத உடல்மொழி

அதாவது, அதிக பாதிப்பை ஏற்படுத்துவது உடல்மொழிதான். இது நமக்குத் தெரியாது. ஆகவே, மொழி, வார்த்தைகள், தொனி, குரல், ஓசை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம், உடல்மொழியை உதாசீனம் செய்துவிடுகிறோம்.

உடல்மொழி ஒரு சங்கேத மொழி. அனிச்சைச் செயலாக வருவது. பயன்படுத்தும் வார்த்தைகள், குரல் ஆகியவற்றில் நம்மோடு பேசுவோர் தங்கள் உணர்ச்சிகளை மறைத்துவிட முடியும். ஆனால், அவர்களுடைய முகபாவங்களை, உடல் அசைவுகளைக் கவனிப்பதன் மூலம் அவர்களுடைய நிஜ உணர்ச்சிகளை, எண்ணங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். வெற்றிகரமாக டீல்கள் போட, அடுத்தவர் ஆழ்மன எண்ணங்களை, உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் முதற்படி, உடல்மொழி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்,

இதற்கு, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்,

The Definitive Book of Body Language

ஆசிரியர் - Barbara Pease.

டீல்களில் வெற்றி பெற, முக்கிய முதல்படி, நாம் யாரிடம் பேசுகிறோமோ, அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்வது, என்று பார்த்தோம். இன்று பெண்கள் அரசியல், நிர்வாகம், பிசினஸ் ஆகிய பல துறைகளில் ஜொலிக்கிறார்கள். இவர்களில் பலர் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கிறார்கள். இதனால், பேச்சு வார்த்தைகள் பற்றிய பயிற்சிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இரண்டு:

# பெண்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தும்போது, நாம் நம் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளவேண்டுமா?

# பெண்கள், ஆண்கள் சாதாரணமாகக் கடைப்பிடிக்கும் வழிகளைப் பின்பற்றலாமா, அல்லது தனி வழியில் பயணிக்க வேண்டுமா?

பேச்சு வார்த்தை என்பது தமக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ எடுக்கும் முயற்சி. இதில், ஆண் பெண் என்கிற வித்தியாசம் கிடையாது என்று நம்மில் பலர் நினைக்கிறோம்.

ஆனால், இது சரியில்லை மனோதத்துவ மேதைகளும், மேனேஜ்மென்ட் நிபுணர்களும் சொல்கிறார்கள். ஆண்களும், பெண்களும் மனோதத்துவ ரீதியாக ஒரே மாதிரியானவர்கள் அல்ல, அவர்களுக்குள் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன என்பது இவர்கள் கண்டுபிடிப்பு.

இவர்களுள் முக்கியமானவர் ஜான் க்ரே (John Gray). பழகும் முறை பற்றிய ஆலோசனைகளும், பயிற்சிகளும் தரும் நிபுணர். ஜான் க்ரே, இது தொடர்பாக 20 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 25,000 ஆண், பெண்களின் குணாதிசயங்களை ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும ் Men are from Mars, Women are from Venus என்னும் புத்தகம், இந்தத் துறையில் ஒரு மைல்கல்.

க்ரே என்ன சொல்கிறார்?

ஆண்கள் விரும்புபவை, மதிப்பவை – அதிகாரம், பதவி, திறமை, வெற்றிகள். பெண்களோ இவற்றுக்கும் அதிகமாக, அன்பு, உறவுகள், தாங்கள் பிறரால் மதிக்கப்படும் விதம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களில் சந்தோஷம் பெறுகிறார்கள். பாராட்டு வார்த்தைகள், அங்கீகாரம், ஆகியவற்றுக்கு, ஆண் களைவிட அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். பிரச்சனைகளை விவாதிக்கும்போது, ஆண்கள் எதிர்பார்ப்பது தீர்வுகளை, பெண்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்ப்பது, தன் குறைகளை யாராவது கவனமாகக் கேட்பதை.

உங்களோடு பேச்சு வார்த்தைகள் நடத்தும் எதிர் அணியில் பெண்கள் இருந்தால், நீங்கள் என்ன செய்யவேண்டும்?

பெண்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களைச் சமமாக நடத்துங்கள். அவர்கள் உடல் வலிமையிலோ, மன உறுதியாலோ ஆண்களுக்குத் தாழ்வானவர்கள் என்னும் எண்ணம் அவர்கள் மனங்களில் தோன்றாமல் கவனித்துக்கொள்ளுங்கள்.

நாசூக்காக, நேர்மையாகப் புகழுங்கள்.

அவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள். கேள்விகள் கேளுங்கள். இந்தக் கேள்விகள் அவர்களைச் சோதிப்பவையாக இருக்கக்கூடாது: அவர்கள் கருத்துக்களை விளக்கும் வாய்ப்புகளாக இருக்கவேண்டும்.

இத்தனை ஆயத்தங்கள் செய்தாலும், பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் என்கிற உறுதிபாடு கிடையாது.

மூன்று விதமான முடிவுகள்

# இருவரின் கோரிக்கைகளையும் திருப்திப்படுத்தும் முடிவுகள் (Win-win situation) ஒருவரின் கோரிக்கைகளை மட்டுமே திருப்திப்படுத்தி, அடுத்தவரை இழக்கவைக்கும் முடிவுகள் (Win-lose situation)

# எந்த முடிவும் தராத பேச்சு வார்த்தை முறிவுகள்

# முதல் இரண்டுவிதச் சூழ்நிலை களிலும், பிரச்சினைக்கு முடிவு கிடைத்துவிடும். மூன்றாம் நிலை, பேச்சு வார்த்தைகள் முறிவது ஏன் பல காரணங்கள்.

பிரச்சினையைத் தீர்க்கும் விருப்பம், தேவை, அவசரம் ஆகியவை ஒரு தரப்புக்கோ அல்லது இரு தரப்பினருக் குமோ இருக்காது. ஒரு தரப்பிலோ அல்லது இரு தரப்புகளிலுமோ நேர்மை இல்லாமை, பிறரை ஏமாற்ற முயற்சி செய்தல், பொய் வாக்குறுதிகள் கொடுத்தல், கொடுத்த வாக்குறுதிகளை மீறுதல்.

பேச்சு வார்த்தைகள் முறிவதை விட, டீல்கள் போடும் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம். டீல் என்பது பழகும் முறை, பிறரிடம் நம்மைப் பற்றிய நம்பகத்தன்மையை வளர்க்கும் வழி. பிறரிடம் நேர்மையோடு பழகுங்கள். பழகும் முறை பற்றிய புத்தகங்கள் படியுங்கள்.

வெற்றி காண வாழ்த்துக்கள்,

(தொடர் நிறைவு பெறுகிறது)

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்