ஆன்லைன் ராஜா 44: கூகுள் தந்த அவமானம்

By எஸ்.எல்.வி மூர்த்தி

சீன ஆன்லைன் உலகின் எழுகின்ற இளம் சூரியன் என்று உலகம் அலிபாபாவை அங்கீகரித்துவிட்டது. எல்லா இன்டர்நெட் மாநாடுகளிலும் நாயகன் ஜாக் மா. எல்லா மொழிப் பத்திரிகைகளிலும் ஜாக் மா. அவரைச் சந்திக்க நிருபர்கள் மட்டுமல்ல, நாட்டுத் தலைவர்களும், இன்டர்நெட் உலக ஜாம்பவான்களும் விரும்பினார்கள்.  முதலில் வந்தவர்கள் கூகுள் நிறுவிய லாரி பேஜ், செர்கி  பிரின்.

1995 – ஆம் ஆண்டில் இருவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள். லாரியின் ஆய்வு ''தகவல் தேடுதல்”  (Search). செர்கி ஆய்வு, தகவல் தோண்டுதல் (Data Mining). இரு துறைகளும் தொடர்பு கொண்டவை. ஆகவே, தங்கள் முயற்சிகளை இணைத்துக்கொண்டார்கள்.

அன்று இருந்த தேடுபொறிகளைவிட மிக வேகமாகச் செயலாற்றும் புதிய தேடுபொறி கண்டுபிடித்தார்கள். கூகுள் என்னும் பெயரில் பதிவு செய்தார்கள். 1998 – இல், அதே பெயரில் கம்பெனியும் பிறந்தது. பயன்படுத்துவோரிடையே அமோக வரவேற்பு. 

ஏனோ, லாரி, செர்கி இருவருக்கும் கூகுளின் வருங்காலத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. கம்பெனியை விற்றுவிட முடிவு செய்தார்கள். அன்று யாஹூ தான் இன்டர்நெட் உலகச் சக்கரவர்த்தி. யாஹூவைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் கேட்ட விலை ஒரே ஒரு மில்லியன் டாலர்கள். ஆனால், இந்த விலையே அதிகம் என்று யாஹூ நிறுவனர் ஜெர்ரி யாங் வாங்க மறுத்துவிட்டார்.

அடுத்த சில ஆண்டுகள். யாருமே எதிர்பாராத வகையில் கூகுள் டயனசோர் வளர்ச்சி. 2002. இப்போது ஜெர்ரி யாங் கூகுளை வாங்க விரும்பினார். லாரி, செர்கி கேட்ட விலை, 5,000 மில்லியன் டாலர்கள். 1998 – இல் கேட்டதைவிட 5,000 மடங்கு அதிகம். இரு தரப்பிலும் கடுமையான பேரம். யாஹூ 3,000 மில்லியன் வரை போனார்கள். கூகுள் இறங்கி வரவில்லை. பேரம் படியவில்லை. 

ஆகஸ்ட் 2004. கூகுள் கம்பெனி மதிப்பு 24 பில்லியன் டாலர்கள் என்று நிதியுலக மேதைகள் கணித்தார்கள். ஐ.பி.ஓ. லாரியும், செர்கியும் மகா கோடீஸ்வரர்கள். அவர்கள் எதிர்பார்த்தேயிராத பொற்காலம்.

இதே நேரத்தில், அலிபாபா – கூகுள் உறவுகள் வலுவாகிக்கொண்டிருந்தன. 2003- இல் அலிபாபா 600 டாலர்களுக்கு கூகுளில் விளம்பரங்கள் போட்டார்கள். இதுவே, 2004- இன் ஒன்பது மாதங்களில் ஒரு மில்லியன் டாலரை நெருங்கியது. கூகுளின் முக்கிய விளம்பரதாரர்கள் பட்டியலில் அலிபாபா இடம் பிடித்தது.

அக்டோபர் 2004. எட்டாம் தேதி தங்களை ஷாங்காய் நகரத்துக்கு வந்து சந்திக்கமுடியுமா என்று லாரி,  செர்கி அனுப்பிய ஈ மெயில் அழைப்பு. 1998 – இல் தொடங்கி, ஆறே வருடங்களில் சிகரம் தொட்டுவிட்ட கூகுள் மேல் ஜாக் மாவுக்குப் பிரமிப்பு. அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இப்போது அவர்களே அழைக்கிறார்கள். மனதுக்குள் ஆயிரம், ஆயிரம் கணக்குகள்.

அலிபாபாவை ஏன் கூகுள் சந்திக்க விரும்ப வேண்டும்? 2000 – ஆம் ஆண்டு முதல் சீனாவில் நுழைய கூகுள் முயற்சிப்பது அவருக்குத் தெரியும். சீன அரசின் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக, சீன இணையதளங்களை அமெரிக்காவிலிருந்து வழங்கினார்கள். ஆனால், இரண்டே வருடங்களில் சீன அரசு இதற்குத் தடுப்புச் சுவர் போட்டது. யாரும் கூகுளைப் பயன்படுத்த முடியவில்லை.  அலிபாபாவோடு ஏற்கெனவே விளம்பர உறவு இருப்பதால், சீனாவுக்குள் நுழைவதற்காக அலிபாவை விலைக்குக் கேட்பார்களோ, அல்லது, அலிபாபாவோடு கை கோர்த்துச் சீனாவில் கூட்டுறவுக் கம்பெனி நடத்தும் திட்டமா?

சி.எஃப்.ஓ. ஜோ, விளம்பர உயர் அதிகாரி போர்ட்டர் எரிஸ்மேன் ஆகியோரோடு சந்திப்புக்குப் போனார். கூகுள் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள், யார் என்ன பதில் சொல்லவேண்டும் என்று மூவரும் தயார்நிலையில். இது ஜாக் மா ஸ்டைல். சந்திப்பவருக்கும், அவர் நேரத்துக்கும் காட்டும் மரியாதை. 

ஜாக் மாவும், சகாக்களும் மீட்டிங் அறையில் உட்கார வைக்கப்பட்டார்கள். மேசை மேல் ஃபைல்கள், பேப்பர்கள் குவிந்து கிடந்தன. எப்போதோ, யாரோ குடித்த காப்பி, டீக் கோப்பைகள். அறையில் லாரி,  செர்கி இருவரும் இல்லை. பல கூகுள் ஊழியர்கள். சிறிது நேரம் கழித்து லாரி வந்தார். தாமதத்துக்கு ''ஸாரி” சொல்லவில்லை. ஜாக் மாவுக்கு இந்தப் பண்பாடுகள் மிக முக்கியம். நாற்காலி முள்ளாகக் குத்தத் தொடங்கியது. 

லாரி பேசத் தொடங்கினார். உரையாடும்போது, எதிரே இருப்பவர் கண்களைப் பார்த்தபடி பேச வேண்டும், அப்போதுதான் பரஸ்பர நம்பிக்கை வரும் என்பது பேச்சுவார்த்தைகளின் அடிப்படை விதி. ஜாக் மா கடைப்பிடித்த விதி. லாரி தன் கூகுள் சகாக்களைப் பார்த்தபடியே பேசினார்.

லாரி கேட்ட முதல் கேள்வி,``அலிபாபாவில் என்ன செய்கிறீர்கள்?” ஜாக் மா திடுக்கிட்டார். அலிபாபா யாரென்று தெரியாமலே சந்திக்க அழைத்த இவர்களுக்கு அறியாமையா அல்லது தலைக்கனமா?

ஜாக் மா நிதானம் இழக்கவில்லை. வழக்கம் போல், உற்சாகம் கொப்பளிக்க அலிபாபாவின் வரலாற்றை, கனவுகளை விவரித்தார். லாரி உட்பட யாரிடமும் எந்தத் தாக்கமும் இல்லை. அவர் பேசி முடிப்பதற்குக் காத்திருந்ததுபோல் பறந்துவந்தன கேள்விக் கணைகள்.

“அலிபாபாவின் கஸ்டமர்கள் சீனாவின் ஒரு சில நகரங்களில் இருக்கிறார்களா, அல்லது பரவலாக நாடு முழுவதுமா?

“கஸ்டமர்களை நேரடியாகத் தொடர்பு கொள்கிறீர்களா அல்லது ஏஜென்ட்கள் மூலமாகவா?”

“உங்கள் மார்க்கெட்டிங் டீமில் எத்தனை பேர்? அவர்களுக்குச் சம்பளம் மட்டுமா அல்லது கமிஷனும் உண்டா? ஒவ்வொன்றும் எவ்வளவு?”

கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கும் பாணி. ஜாக் மாவின் ரத்தம் கொதித்தது. பண்பாடு கருதிக் கோபத்தை அடக்கினார். முகத்தில் எப்போதும் நடனமாடும் புன்முறுவல் மறைந்தது. உடல்மொழியில் விறைப்பு.  நிலைமை விபரீதமாவதைப் போர்ட்டர் உணர்ந்தார். உரையாடலைத் திசை திருப்பினார். நகைச்சுவையாக்கினார்.

“நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் எங்களிடம் பதில் இருக்கிறது. அதற்கு முன்னால், எங்களுக்கு ஒரு சந்தேகம். கூகுளின் தேடுபொறியில் பேஜ் ராங்க் (PageRank)* என்னும் படிமுறைத் தீர்வு (Algorithm)* பயன்படுத்துகிறீர்கள். இதைப் பரம ரகசியமாகக் காப்பாற்றுகிறீர்கள். இந்த அல்கோரிதம் என்னவென்று முதலில் எங்களுக்குச் சொல்லுங்கள்.”  

* படிமுறைத் தீர்வு (Algorithm) என்பது, ஒரு கேள்விக்கான விடையை அடைய, ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், நன்கு வரையறுக்கப்பட்ட குறியீட்டு மொழியில், கணிதச் சார்புகளுக்குத் தீர்வு காணும் வழிமுறை. பேஜ் ராங்க் என்னும் முறை இணையதளங்களை, அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தும். ''பேஜ்” என்பது இதன் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான லாரி பேஜ் பெயரிலிருந்து வைக்கப்பட்டிருந்தது.     

சிரித்துக்கொண்டே மரண அடி. எல்லை மீறிவிட்டோம் என்று கூகுள் குழுவினருக்குத் தெரிந்தது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் விளம்பர பிசினஸ் தரும் முக்கிய கஸ்டமர். அலிபாபாவைப் பகைத்துக்கொள்ள முடியுமா? அடக்கி வாசிக்கத் தொடங்கினார்கள்.

''அலிபாபா எங்கள் முக்கிய விளம்பரதாரர். எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” போர்ட்டர் சொன்னார், ''உங்கள் தொழில்நுட்பம் அருமை. ஆனால், யாஹூவின் சேவை கூகுளைவிடச் சிறப்பானது.”   லாரி குறுக்கிட்டார், ''அப்படியானால், உங்களுக்குத் தேவையான சேவையை யாஹூவிடம் பெற்றுக்கொள்ளுங்கள். பணத்தைக் கூகுளுக்குத் தாருங்கள்.” 

லாரி சிரித்தார். ஜாக் மாவுக்கு அது நெருப்பாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை, கஸ்டமர் சேவை என்பது கடவுள் சேவை. ஒவ்வொரு பிசினஸ்மேனின் நாடி நரம்புகளிலும் ஓடவேண்டிய உணர்வைக் கேலி செய்யக்கூடாது.   

இப்போது அறை வாசலில் சலசலப்பு.  கூகுளின் இன்னொரு நிறுவனரான  செர்கி ஆப்பிளைக் கடித்தபடியே உள்ளே வந்துகொண்டிருந்தார்.  இவரும் தாமதத்துக்கு  வருத்தம் தெரிவிக்கவில்லை. நடந்துகொண்டே பேசினார். 

“இதுவரை என்னென்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?” ஜாக் மா சுருக்கமாகச் சொன்னார்.

தாங்கள் மட்டுமே அதிமேதாவிகள் என்னும்  செர்கியின் தோரணை வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம் என்னும் ஜாக் மாவின் கொள்கைப் பிடிப்பைக் காயப்படுத்தியது.  

செர்கி கேட்டார்,''கூகுள் சீனாவில் இணையதளச் சேவை தொடங்கப்போகிறோம். இங்குள்ள தணிக்கை முறையைச் சமாளிக்க நாங்கள் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறோம். அமெரிக்காவைப் போல் எங்கள் தேடுபொறியைச் சீனாவிலும் சுதந்திரமாகச் செயல்பட விடுவோம். ஒத்துவராதவற்றை உங்கள் அரசு தணிக்கை செய்துகொள்ளட்டும்.”

கோடீஸ்வரர்கள் என்பதால் என் தாய்நாட்டுக்கே சவால் விடுகிறீர்களா? சூடாக வந்தது ஜாக் மாவின் பதில். இதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகளின் வெளிப்பாடு.

''அதாவது, நீங்கள் சீனாவுக்கு வருவீர்கள். கண்ட இடங்களில் குப்பையை எறிவீர்கள். எங்கள் போலீஸ் அந்தக் குப்பையைப் பொறுக்க வேண்டுமா?” லாரி,  செர்கி, கூகுள் அதிகாரிகள் அத்தனை பேரும் பேய் அறைந்தது போல்.

ஜாக் மா தொடர்ந்தார், ''நான் 1995 முதல் இன்டர்நெட் பிசினஸில் இருக்கிறேன். இந்த ஒன்பது  வருடங்களில் நான் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது  என்று எங்கள் அரசாங்கம் ஒருமுறை கூடச் சொன்னது கிடையாது. நீங்கள் சீனாவில் பிசினஸ் தொடங்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சமுதாய முன்னேற்றத்துக்குக்  கை கொடுத்தால், எங்கள் அரசாங்கம் உங்களுக்கு எல்லா உதவிகளும் தரும். ஆனால், நீங்கள் எங்கள் சட்ட திட்டங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். இது கூகுளுக்கும், சீனாவுக்கும் மட்டுமல்ல, எல்லா கம்பெனிகளுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.”

மீட்டிங் முடிந்தது. ஜாக் மா வெளியே வந்தார். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை. தாய்த்திருநாட்டின் தன்மானத்தையல்லவா காத்திருக்கிறார்?   

விரைவில், யாஹூ நிறுவனர் ஜெர்ரி யாங்கோடு சந்திப்பு நடக்கப்போகிறது. அவரும் கூகுள் போல் காயம் செய்வாரா அல்லது வேறு ஏதேனும் மாயம் புரிவாரா? ஜாக் மா மனம் நிறையக் கேள்விகள்.       

(குகை இன்னும் திறக்கும்)
- slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்