ஜெர்ரி யாங் சீனா வந்தார். அவரோடு தம்பி கென், யாஹூ வைஸ் பிரசிடென்ட் ஹீதர் கில்லென். விமான நிலையத்தில் ஜாக் மா வரவேற்றார். நடப்பது கனவா, நிஜமா என்று ஜாக் மா மனதில் பிரமிப்பு. கோடிக்கணக்கான மக்களின் கனவு தேவனல்லவா எதிரே நிற்கிறார்?
முதல் கை குலுக்கலிலேயே, ஜெர்ரி யாங்குக்கு ஜாக் மாவைப் பிடித்தது. பழகப் பழக இன்னும் பிடித்தது. ஜாக் மா விருந்தினர்களுக்கு வெஸ்ட் லேக், சீனப் பெருஞ்சுவர் சுற்றிக் காண்பித்தார். பெருஞ்சுவர் அருகே ஜெர்ரி யாங்கோடு நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். அவர் அருகே நின்றபோது, காற்றில் மிதக்கும் ஆனந்தம். (அந்த போட்டோ பொக்கிஷமாய் இப்போதும் ஜாக் மாவிடம் இருக்கிறது.)
வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சரோடு பயனுள்ள சந்திப்பு. தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்களில் பல நாட்கள் தலைப்புச் செய்தி. ஜெர்ரி யாங் அசந்துபோனார். அத்தனைக்கும் சூத்திரதாரி ஜாக் மா என்று உணர்ந்தார். ``இந்த இளைஞர் துடிப்பானவர்” என்று அவர் மனதில் முத்திரை. அமெரிக்கா திரும்பியவுடன், ஜாக் மா ஜெனரல் மேனேஜராக இருந்த இன்ஃபோஷேர் நிறுவனத்தை யாஹூவின் சீனப் பிரதிநிதியாக நியமித்தார்.
யாஹூவின் பிரம்மாண்ட வெற்றி, ஜெர்ரி யாங் வருகை. ஜாக் மா மனதில் வெறி, தான் வேலை பார்க்கும் இன்ஃபோஷேர் கம்பெனியையும் இன்னொரு சீன யாஹூவாக்கவேண்டும். தங்கள் chinamarket.com இணையயதளத்தில் பல மாற்றங்கள் செய்தார். 8,000 தயாரிப்புப் பொருட்கள் பற்றிய விவரங்கள் சேகரித்துப் பட்டியலிட்டார். ``சீனா உலக இ காமர்ஸ் அரங்கில் வெற்றிநடை போட அழுத்தமான முதல் அடி” என்று வர்த்தகத் துறை அமைச்சரே பாராட்டினார். அரசுச் செய்தித்துறை, ``நம்பகமான தகவல்கள். கண்டுபிடிக்க எளிதான தேடும் முறை” என்று நற்சான்றிதழ் தந்தது.
ஆர்டர்கள் தரவும், அதற்கான பணம் அனுப்புவதற்குமான வசதிகளைச் சேர்த்துவிட்டால், chinamarket.com முழுமையான ஆன்லைன் இணையதளமாகிவிடும். இதற்கான பணிகளை ஜாக் மா முடுக்கிவிட்டார். இப்போது வந்தது உயர் அதிகாரிகளிடமிருந்து கட்டளை “இந்த மாற்றங்கள் செய்ய அனுமதி இல்லை.” காரணம் கேட்டார். பதில் இல்லை. ஜாக் மா என்னும் தனி மனிதன் வளரக்கூடாது, சீனா எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்னும் ‘பரந்த’ மனப்பான்மைதான். எப்படி ஒத்துக்கொள்வார்கள்? கூட்டுக்குள் அடைக்கப்பட்ட சிங்கம்போல் ஜாக் மா குமுறினார்.
இந்தக் காலகட்டத்தில், ஜெர்ரி யாங் தாக்கத்தால், சீனாவில் புற்றீசல்போல் ஏராளமான ஆன்லைன் பிசினஸ்கள் தொடங்கின. அவர்களுள் மூன்று நிறுவனங்கள் தலை நிமிர்ந்து நின்றார்கள் - ஸினா (Sina), ஷூ (Shu), நெட் ஈஸ் (NetEase). மூவருமே தனியார் நிறுவனங்கள். இவர்களுள், நெட் ஈஸ் சீன மொழியில் தேடுபொறி வசதி தந்தார்கள். ஒரே வருடம். 1998 முடிவில் நெட் ஈஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 14 லட்சம்! கணிசமான லாபம். ஜாக் மாவுக்குப் புரிந்தது, அரசாங்க வேலையில் தொடர்ந்தால், இன்டர்நெட் என்றால் என்ன என்பதே புரியாத ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கற்காலச் சட்டங்கள், நெறிமுறைகள் ஆதாரம் காட்டிக் கைகளுக்கும், கால்களுக்கும் விலங்குகள் பூட்டுவார்கள். அமெரிக்காவில் தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது. சீன அரசு செய்வது கட்டைவண்டிப் பயணம். “ஐந்து வருடங்களாக ஆன்லைன் பிசினஸில் இருக்கிறேன். இதுவரை எதையும் சாதிக்கவில்லை. என்ன செய்யலாம்?”
இரண்டு வழிகள். சீன யாஹூ, ஸினா, ஷூ அல்லது நெட் ஈஸ் கம்பெனிகளில் வேலை தேடலாம். இதுவரை தனக்குச் சமமாக இருந்தவர்கள் கீழ் வேலை பார்ப்பதை தன்முனைப்பு ஒத்துக்கொள்ளவில்லை. அதே சமயம், மனம் கேள்வி கேட்டது, “1995 - இல், ஸஸாங் ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனி தொடங்கினாய். நான்கே வருடங்களில் மூடிவிட்டாய். வாழ்க்கையில் மறுபடியும் தவறு செய்யப்போகிறாயா? நீ இளைஞனல்ல, தனிமரமல்ல. உன் வயது 35. மனைவி, குழந்தை என்று குடும்பப் பொறுப்புகள். ஆலோசித்து முடிவெடு.”
தோற்றுப் போனவனுக்கும், சாதனையாளனுக்கும் என்ன வித்தியாசம்? தோற்றவனின் தலைக்கனம்! அவன் தன் தோல்விகளை ஆராய்வதில்லை. தவறுகளை ஓத்துக்கொள்வதில்லை. “என்னிடம் பணமில்லை”, “என் குடும்பப் பின்புலம் சரியில்லை”, “எனக்கு உதவ யாருமில்லை” என்று சப்பைக்கட்டுகளைத் தேடுகிறான். ஜெயிப்பவனுக்குப் போலி கெளரவம் கிடையாது. தன் தோல்விகளை ஆராய்கிறான், தவறுகளுக்குப் பொறுப்பேற்கிறான், பாடம் கற்கிறான், தன்னைத் திருத்திக்கொள்கிறான்.
ஜாக் மா தன் ஸஸாங் ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனியின் சறுக்கலுக்கான காரணங்களை ஆராய்ந்தார். ஒரே ஒரு காரணம்தான். அவர் நடைமுறை உலகத்தைச் சரியாக எடைபோடாத முன்னோடி. சீனாவின் தொலைத் தொடர்பு, இன்டர்நெட், கம்ப்யூட்டர் ஆகிய கட்டமைப்பு வசதிகள் தயாராகும் முன் களத்தில் குதித்துவிட்டார். கடந்த ஐந்து வருடங்களில் நிலைமை மாறிவிட்டது. நாளடைவில் இன்டர்நெட் இணைப்புகள், ஏராளமான பயன்படுத்துபவர்கள்.
ஆன்லைன் பிசினஸ் தொடங்க இது நல்ல நேரம். வேலையை விட்டுவிட்டுச் சொந்த பிசினஸ் தொடங்குவதுதான் தன் வருங்காலத்துக்கு நல்லது என்பதில் ஜாக் மாவுக்குச் சந்தேகமேயில்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு கடலில் குதிப்பவரல்ல. ஒவ்வொரு அடியும் அளந்துவைத்த அடி. ஆன்லைன் பிசினஸ் பற்றிக் கிடைத்த விவரங்கள் அத்தனையையும் கரைத்துக் குடித்தார். பீஜிங்கில் ஆசிய இ- காமர்ஸ் மாநாடு (Asian E-commerce Convention) நடந்தது. பல உலக மேதைகள் பேசினார்கள். அந்தக் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டார். அரங்கில் கடை பரப்பியிருந்த கம்பெனிகளை கேள்விகளால் துளைத்தார். கேள்வி ஞானம். அன்றைய சீனாவில் ஆன்லைன் பிசினஸ் பற்றி அதிகம் அறிந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் முக்கிய இடம் ஜாக் மாவுக்கு.
மாநாட்டில் ஜாக் மா சந்தித்த அத்தனை ஆன்லைன் கம்பெனிகளில் ஏறத்தாழ அத்தனை பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். ஒரு சிலர் ஐரோப்பியர். ஆசிய நாட்டினர் யாருமே இல்லை. சீனா உட்பட்ட ஆசிய நாடுகளின் தொழில் முனைவர்கள் செம்மறியாட்டுக் கூட்டமாக, அமெரிக்க யுக்திகளை அப்படியே காப்பியடிக்கும் மனப்போக்கில் இருந்தார்கள். நகல்கள் எப்போதுமே தொடர் வெற்றி காண்பதில்லை. இரவல் வெளிச்சத்தில் ஜொலிக்கும் சந்திரன்போல். வெற்றி வந்தாலும் நிலைக்காது. பெளர்ணமிக்குப் பின் அமாவாசை இருட்டு வரும். நட்சத்திரங்கள் அசலானது. எப்போதும் வெளிச்சம்.
19 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்கத் தத்துவ மேதை ரால்ஃப் வால்டோ எமர்சன் சொன்ன வைரவரிகள், Do not go where the path may lead, go instead where there is no path and leave a trail (ஏற்கெனவே இருக்கும் பாதையில் பயணிக்காதீர்கள். புதிய பாதை போடுங்கள். உங்கள் காலடித்தடங்களை விட்டுச் செல்லுங்கள்.) ஜாக் மாவின் அணுகுமுறையும் இதுதான். இதுவரை யாருமே முயற்சித்திராத புதுமை, வித்தியாசம்.
ஜாக் மாவுக்கு தான் ஜெயித்தால் மட்டும் போதாது. நெருங்கிய நண்பர்களும் தன்னைப் போல் வெற்றிக்கனியைச் சுவைக்கவேண்டும். இன்ஃபோஷேர் கம்பெனி சக ஊழியர்களில் எட்டுப் பேர் 1995 -ல் ஜாக் மா ஸஸாங் ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனி தொடங்கிய நாள் முதல் உடன் இருப்பவர்கள். அத்தனை சோதனைகளிலும், சோகங்களிலும் பங்கேற்றவர்கள். சொந்த பிசினஸ் தொடங்குகிறேன் என்று சொன்னால், கண்களை மூடிக்கொண்டு அவர் பின்னால் வந்துவிடுவார்கள். அத்தனை விசுவாசம். தன் கனவுகளுக்காக அவர்கள் வருங்காலத்தைப் பணையம் வைக்கக்கூடாது. அதே சமயம், அவர்களை நட்டாற்றில் விடுவது துரோகம். தான் வேலையை விடும் முன் அவர்களின் பாதுகாப்பான வருங்காலத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
பிப்ரவரி 1, 1999. எட்டு பேரையும் அழைத்தார். நீண்ட ஆலோசனைகள். கருத்துப் பரிமாற்றங்கள். வேலையை விட்டு பிசினஸ் தொடங்கும் திட்டத்தை விளக்கினார்.
ஒரு நண்பரிடமிருந்து குறுக்கு வழி ஆலோசனை. ``ஜாக் மா, வேலையை ராஜினாமா செய்யாதீர்கள். உடல்நிலை சரியில்லையென்று பொய் சொல்லி ஸிக் லீவ் போடுங்கள். அப்படி ஆறு மாதங்கள் கடத்தலாம். அதற்குள் பிசினஸ் வேரூன்றுமா என்று தெரிந்துவிடும். ராஜினாமாவா, மறுபடி பழைய வேலையா என்று அப்போது தீர்மானிக்கலாம்.”
ஜாக் மா மறுத்துவிட்டார், வேண்டாம் பொய்யும், பித்தலாட்டமும்.
சகாக்கள் முகங்களில் கவலை ரேகைகள். தங்கள் வருங்காலம் என்ன ஆகுமோ?
(குகை இன்னும் திறக்கும்)
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago