தொழில் ரகசியம்: உறவுகளை பலப்படுத்தும் சிரிப்பு

By சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

னியாய் டீவியில் காமெடி சீன்கள் பார்க்கும் போது சிரிப்பதை விட மற்றவர்களோடு பார்க்கும் போது அதிகம் சிரிக்கிறோம் என்பதை கவனித்திருக்கிறீர்களா? தனியாய் இருக்கும் போது நமக்கு நாமே பேசிக்கொள்கிறோம், அளவோடு புன்னகைத்து கொள்கிறோம். ஆனால் தனியாய் இருக்கும் போது அதிகம் சிரிப்பதில்லை. தனியாய் சிரித்தால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவார்களோ என்ற பயமா? இல்லை அருகில் யாராவது இருந்தால் தான் நமக்கு காமெடி புரிகிறதா?

சிரிப்பைப் பற்றி ஆய்வு செய்து பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிவர்களில் ஒருவர் `ராபர்ட் ப்ரோவைன்’. `மேரிலேண்ட் பல்கலைக்கழக’த்தில் உளவியல் மற்றும் நியூரோசைன்ஸ் துறை பேராசிரியர். இவர் ஒரு முறை உதவியாளர்களுடன் காலேஜ், தெருக்கள், மக்கள் குழுமும் இடங்கள் என்று அலைந்தார். ஓட்டு கேட்க அல்ல. ஒட்டு கேட்க! மக்கள் என்ன பேசுகிறார்கள், எதற்கெல்லாம் சிரிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியாமல் ஒட்டுக்கேட்டு குறித்துக்கொண்டார். அவர்கள் சிரிக்கும் போது அதற்கு முன் என்ன பேசப்பட்டது, எந்த விதமான விஷயங்களுக்கு மக்கள் சிரிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வு.

மக்கள் சிரித்த கமெண்டுகள் படு காமெடியாக இருந்ததா? அதை ஏன் கேட்கிறீர்கள். அது தான் காமெடியே. சிரிப்பை வரவழைத்த பேச்சுக்களில் இருபது சதவீதத்திற்கும் குறைவானவையே கொஞ்சமேனும் ஹாஸ்யம் நிறைந்ததாக இருந்தனவாம். அட, நாகேஷ் காமெடி போல் அமர்க்களமாக இருக்கவேண்டாம், அட்லீஸ்ட் சுமார் ரக ஹாஸ்யங்களா என்றால் அது கூட இல்லை. ‘அங்க யாரு வராங்க பாரு’, ‘நிஜமாவா சொல்ற’, ‘உன்ன சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்’. இது போன்ற கமெண்டுகளுக்கு சிரித்திருக்கிறார்கள். ‘நீ சரக்கு அடிக்கலன்னாலும் பரவாயில்லை, எங்களுக்கு வாங்கி கொடு’ என்பது போன்ற கமெண்டுகளுக்கு தான் ஏக சிரிப்பாம்.

`இதுல என்ன இருக்குன்னு சிரிச்சாங்களாம்’ என்று கேட்க தோன்றுகிறதில்லையா. உங்களுக்கு ஒரு உண்மையை உணர்த்த வேண்டியிருக்கிறது. நீங்களும் நானும் இது போன்ற உப்புசப்பில்லாத கமெண்டுகளுக்குதான் சிரிக்கிறோம், தெரிந்தவர்களுடன் சேர்ந்திருக்கும் போது. நாம் இதை உணர்வதில்லை. இதற்கு காரணம் மன உளவியல் என்கிறார் ப்ரொவைன். சிரிப்பு என்பது பெரும்பாலும் ஒரு சமூக நடத்தை (social behaviour) என்கிறார். சமூக பந்தங்களின் இணைப்பை வலுப்படுத்த உதவுகிறதாம். பிடித்தவர்களோடு இருக்கும் போது நாம் சிரிப்பது ஹாஸ்யத்திற்கு அல்ல அவர்களோடு சேர்ந்து இருப்பதாலேயே என்கிறார் ப்ரோவைன்.

மற்றவர்களோடு சேர்ந்திருப்பதால் மரியாதை கருதி கொஞ்சம் அதிகம் சிரித்திருக்கலாம், அவ்வளவே என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இந்த புள்ளியல் விவரத்தை தருவது அவசியமாகிறது. தனியாக இருப்பதை விட தெரிந்தவர்களுடன் இருக்கும் போது நாம் முப்பது தரம் அதிகம் சிரிக்கிறோம் என்கிறார் ப்ரோவைன். அருகில் உள்ளவர்களிடம் உங்களை எனக்கு பிடித்திருக்கிறது, நீங்கள் கூறுவதை ஆமோதிக்கிறேன், உங்களை நான் புரிந்துகொள்கிறேன், உங்களோடு இருக்க எனக்குப் பிடித்திருக்கிறது என்றெல்லாம் சொல்லாமல் சொல்ல அவர்களோடு சேர்ந்து சிரிக்கிறோமாம். என்னதான் சுத்தமாக ஹாஸ்யமே இல்லாத சப்பை மேட்டராக இருந்தாலும்.

கூட்டத்தில் யாரேனும் கொட்டாவி விட்டால் அது தொத்து வியாதி போல் பரவி ஒவ்வொருவருவாக கொட்டாவி விடுவதைப் பார்த்திருப்பீர்கள். அது போல்தான் சிரிப்பும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடுத்தவர் சிரிக்கிறார் என்று நாமும் சிரிக்கிறோம். சொல்லப்பட்டது பெரிய ஜோக் இல்லையென்றாலும் அடுத்தவர் சிரிக்கிறார் என்றால், அதுவும் மிகவும் தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில் அதிகம் சிரிக்கிறோம்.

சிரிப்பு என்பது ஹாஸ்யம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை விட உறவுகள் சம்பந்தப்பட்டது என்கிறார் ப்ரோவைன். மற்றவர்களோடு பேசும் போது நாம் சிரிப்பது ‘நான் உங்களோடு இருக்கிறேன்’ , `நான் உங்களில் ஒருவன்’ என்பதை அவர்களுக்கு உணர்த்த தானாம். சேர்ந்து சிரிப்பது அனைவருக்கும் ஒரு பாசிடிவ் சிக்னல் தரும் முயற்சியாம். அருகிலிருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வழியாம். மனம் விட்டு சிரியுங்கள் என்று பலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள். அது எப்படியோ, மற்றவர் மனம் நம்மை விடக்கூடாது என்று சிரிக்கிறோம் என்பது தான் உளவியல் பூர்வமான உண்மை.

சேர்ந்து சிரிக்கும் போது உறவுகளில் மகிழ்ச்சியும் அமைதியும் தழைக்கிறது என்கிறார் ப்ரொவைன். சேர்ந்து சிரிக்கும் உறவுகள் நீண்ட காலம் நிலைக்கிறது என்கிறார். சேர்ந்து சிரிக்காத உறவுகள் சந்தி சிரிக்கும், சிரிப்பாய் சிரிக்கும் என்கிறார்.

நாம் பேச கற்றுக்கொள்ளும் முன் பொக்கை வாயை வைத்துக்கொண்டே முதலில் சிரிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். எதையும் யோசிக்காமல், படக்கென்று தோன்றும் உணர்வு சிரிப்பு. அச்சிரிப்பு உறவுகளை பலப்படுத்தும் கோந்து என்பது உலகின் எல்லா கலாசாரங்களிலும் காணப்படும் உளவியல் உண்மை என்கிறார்.

நீங்கள் நினைத்ததை விட சிரிப்பு என்பது அநியாயத்திற்கு எவ்வளவு சீரியஸான மேட்டர், பார்த்தீர்களா. இது தெரியாமல் இத்தனை நாள் `ஆபிசில் என்ன சிரிப்பு வேண்டிகிடக்கிறது’, ‘இது சிரிக்கர விஷயம் அல்ல’, ‘எல்லோரும் சேர்ந்து சிரிக்க இது ஆபீசா இல்ல க்ளப்பா’, `சீரியசாய் பேசிக்கொண்டிருக்கும் போது என்னடா சிரிப்பு’ என்று எரிந்து விழாதீர்கள். சிரிக்கும் இடங்களில் பணியாளர்கள் மத்தியில் புரிதல் நிலவுகிறது. உறவுகள் பலப்படுகிறது என்று சந்தோஷப்படுங்கள். `ஹா ஹா’ என்று யாரேனும் சிரித்தால் ‘ஆஹா’ என்று அதை ஆமோதித்து ஆராதியுங்கள். முடிந்தால் நீங்களும் சேர்ந்து சிரியுங்கள்!

ஆய்வாளர்கள் கூறுவதை சற்றே தத்துவார்த்தமாக பாருங்கள். வாழ்க்கையில் சந்தோஷமாக சிரிக்கவேண்டும் என்றால் மனதிற்கு பிடித்தவர்களுடன் அதிக நேரம் செலவழியுங்கள். அவர்களோடு மனம் விட்டு பேசுங்கள். அருகில் யாரும் இல்லையென்றால் அட்லீஸ்ட் பிடித்தவர்களோடு போனில் பேசுங்கள். அவர்களோடு சேர்ந்து சிரியுங்கள். சிரிப்பு உணர்வுகளை வளப்படுத்தி, உயிர்களை நெறிப்படுத்தி உணர்வுகளை பலப்படுத்துகிறது.

சிரிப்பைப் பற்றி இன்னமும் கூட கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்கள். நாம் சிரிப்பதே பல சமயங்களில் நமக்கு தெரிவதில்லையாம். மற்றவருடன் சேர்ந்திருக்கும் வேளைகளில் சிரிக்கிறோம். ஆனால் நாம் சிரித்த அளவை குறைவாக மதிப்பிடுகிறோம். சிரிப்பது தெரிகிறது. ஆனால் எவ்வளவு சிரிக்கிறோம் என்பது தெரிவதில்லை. மற்றவர்களுடன் சேர்ந்திருக்கும் போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஊறிப்போய்விட்ட ஒன்று சிரிப்பு என்பதால் நாம் சிரிக்கும் அளவு நமக்கே தெரிவதில்லை என்பது தான் உண்மை. இதை வேறு எங்கும் போய் தேடவேண்டாம். மற்றவர்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை முடிந்தால் நீங்களே நினைத்துப்பாருங்களேன்!

சிரிப்பு என்பதே வெறும் ஹாஸ்யம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. நெர்வஸாக இருக்கும் போது மழுப்பல் சிரிப்பு சிரிக்கிறோம். நம் நிலைக்கு மேல் உள்ளவர்களிடம் பேசும் போது டிப்ளமாட்டிக் சிரிப்பு சிரிக்கிறோம். இவ்வளவு ஏன், வில்லத்தனம் செய்யும் போது இறுமாப்புடன் வில்லன் சிரிப்பு சிரிக்கிறோம். மற்றவர்களை சிரிக்க வைக்க நாமே சமயங்களில் சிரிக்கிறோம். பேச்சாளர்கள் பலர் பேச்சுக்கிடையில் தாங்களே சிரிப்பது மற்றவர்களையும் தங்களோடு சேர்ந்து சிரிக்கத்தான்!

இதையெல்லாம் படிக்கும்போது நீங்கள் சிரித்துக்கொண்டிருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சென்ற வாரம் என் நண்பர்களிடம் இதை விளக்கியபோது போது சிரித்துக்கொண்டே கேட்டார்கள். ஏன் என்று புரிகிறதா?

satheeshkrishnamurthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்