ஆன்லைன் ராஜா 17: பெற்ற மகனை விற்ற தந்தை….

By எஸ்.எல்.வி மூர்த்தி

ன் பிசினஸ் லாபம் பார்க்கவேண்டுமானால், கம்ப்யூட்டர் விற்பனையும், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் உயரவேண்டும். இன்டர்நெட் கட்டமைப்பில் மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த முடிவெடுக்கும் அரசு உயர் அதிகாரிகள் தலைநகர் பீஜிங்கில். அவர் அங்கேயே தங்கி அவர்களிடம் இன்டர்நெட் பற்றியும், தன்னைப்பற்றியும் நம்பிக்கையை உண்டாக்க வேண்டும்.

சில மாதங்களில் ஷெஜியாங் ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனி பீஜிங் நகருக்கு மாறியது. செலவு அதிகம் தான். வருங்கால வளர்ச்சிக்குக் கொடுத்தாகவேண்டிய விலை. ஜாக் மாவும், பங்காளி ஹே யிபிங்கும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் இன்டர்நெட்டின் மகத்தான சக்தி பற்றிய விழிப்புணர்வை உருவாக்க ஏராளமான முயற்சிகள் எடுத்தார்கள்.

சீனா டிரேட் நியூஸ் என்னும் பிரபலமான பத்திரிகை இருந்தது. அதில் தன்னைப் பற்றிய செய்தி வரவேண்டும் என்று ஜாக் மா ஆசைப்பட்டார். பல முயற்சிகள் தோல்வி. நம் தலைவர் வழி தனி வழி. அந்தப் பத்திரிகையில் வேலை பார்த்த ஒரு டிரைவரை நண்பராக்கிக்கொண்டார். இந்த ஓட்டுநரும், பத்திரிகையின் உதவி ஆசிரியரும் நெருக்கம். தன்னைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதினார். ஒரு கவரில் போட்டார். அத்துடன், அன்பளிப்பாக 500 யான்கள் கரென்சி. ஓட்டுநர் மூலமாக உதவி ஆசிரியரிடம் சேர்த்தார். கொடுத்தவரும், வாங்கியவரும் சந்தித்தார்கள். பணத்தின் மகிமையே மகிமை. உதவி ஆசிரியர் தங்கள் ஆசிரியர் குழுவோடு உரையாடலுக்கு ஏற்பாடு செய்தார்.

“உங்கள் கருத்துகள் அவர்களுக்குத் திருப்திகரமாக இருந்தால், நிச்சயம் செய்தியை வெளியிடுகிறேன்.”

ஜாக் மா வந்தார். நம்ம ஆள் சாதாரணப் பேச்சாளரா? கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிகின்ற சொல்லின் செல்வர். குட்டிக் கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், தொழில் நுட்பங்கள். சொந்த அனுபவங்கள் என்று ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அருவியாய்க் கொட்டினார். தன் வார்த்தைகளால் அவர்கள் மனங்களைக் கட்டினார். ஆசிரியர் குழு பிரமிப்பில். மறு நாள். சீனா டிரேட் நியூஸ் பத்திரிகையின் முதல் பக்கக் கட்டுரை ஜாக் மாவின் ஷெஜியாங் ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனி. பீஜிங் நகருக்கு வந்த இரண்டே மாதங்களில், அவர் புதுமுகமல்ல, பிசினஸ் உலகம் அறிந்த பிரபலம்.

உதவி ஆசிரியர் லஞ்சம் வாங்குபவரானாலும், வாங்கிய காசுக்கு வஞ்சமில்லாமல் உதவி செய்பவர். தன் கட்சித் தொடர்புகளைப் பயன்படுத்தினார். தன்னோடு ஜாக் மாவை அரசுச் செய்தித் துறை (State Information Department) உயர் அதிகாரிகளிடம் அழைத்துப்போனார். ஒரு துக்கடா கம்பெனியால் நமக்கு என்ன லாபம் என்று உதறித் தள்ளினார்கள். ஜாக் மா தட்டிய பல அரசு அலுவலகக் கதவுகளும் ஈவு இரக்கமில்லாமல் மூடின. பணம், கட்சித் தொடர்பு என்னும் எந்தப் பின்புலமும் இல்லாத சாமானியன் முன்னேறுவதை அத்தனை சக்திகளும் தடுக்கும் என்னும் கசப்பான உண்மை புரிந்தது. மனம் முழுக்க விரக்தி. சோகத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள விரும்பினார். நாட்டு மக்கள் அத்தனை பேரிடமும் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்த வாய்ப்பைத் தந்தவர் ஃபான் ஸின்மான் (Fan Xinman) என்னும் பெண்மணி. பல வருடங்களுக்கு முன்னால், ஹாங்ஸெள நகரின் தொலைக்காட்சி சேனல் ஜாக் மாவின் YMCA வகுப்புகள் பற்றி, ஜி பாட்டி* யை மையமாக வைத்து ஒரு நிகழ்ச்சி தயாரித்தார்களே, அதன் இயக்குநர். அந்த ஷூட்டிங்கில் அவருக்கும் ஜாக் மாவுக்கும் நட்பு வந்தது. முன்னேறத் துடிக்கும் இந்த இளைஞர் மேல் ஏகப்பட்ட மதிப்பு, மரியாதை.

ஃபான் ஸின்மான், பிரபலச் சீனத் தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜாங் ஜிஜாங் (Zhang Jizhong) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பீஜிங் நகரில் குடியேறினார். ஹாங்ஸெள நகரத்திலிருந்து யார் வந்தாலும், ஜாக் மா பற்றி விசாரிப்பார். அபாரத் திறமையுள்ள அவர் வாழ்க்கைப் படிகளில் சொந்த முயற்சியால் ஏறி வருவதை அறிந்து மகிழ்ச்சியடைவார். (விவரங்கள்- அத்தியாயம் 9)

ஜாக் மா பீஜிங் நகரில் அரசு ஆதரவு கிடைக்காமல் தத்தளிப்பது ஃபான் ஸின்மானுக்குத் தெரிந்தது. நண்பருக்கு உதவி செய்ய விரும்பினார். அவரிடம் இருந்த ஆயுதம் தன் கண்வரின் ஊடகப் பிரபலம். ஜாக் மாவிடம் தன் அனுபவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பேசச் சொன்னார். ஜாக் மா – புத்தகப் புழு (Jack Ma the Bookworm) என்னும் ஆவணப்படம் தயாரித்தார். நம் ஊர் போலவே, சீனாவிலும், புத்தகப் புழு என்றால் அறிவுஜீவி என்று அர்த்தம். இத்தகைய மனிதர்கள் பிடிவாதக்காரர்கள், லட்சியவாதிகள்.

படத்தில் ஜாக் மா இன்டர்நெட் சீனாவையே எப்படி மாற்றப்போகிறது என்று உணர்ச்சி பொங்க விளக்குகிறார். சுற்றியிருக்கும் அரசு அதிகாரிகள் முகங்களில் பாதிப்பே இல்லை. ஒரு தீர்க்கதரிசியின் போராட்டத்தை, விரக்தியைப் படம் பிரதிபலிக்கிறது.

தன் நண்பருக்கு வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் என்று ஃபான் ஸின்மானுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனால், இறுதிக் காட்சியில் ஜாக் மா சபதம் எடுக்கிறார், “இன்னும் சில வருடங்களில் நான் யாரென்பது உங்களுக்குத் தெரியும். என்னை இப்போதுபோல் நீங்கள் நடத்த முடியாது.”

வருங்கால நம்பிக்கை சரி. ஆனால், நிகழ்காலம் புதைகுழியாக இருந்தது. செலவுகள் விஷமாக ஏறிக்கொண்டிருந்தன. வருமானம் மெள்ள மெள்ள ஊர்ந்தது. எத்தனை நாட்கள் கம்பெனியை ஓட்டமுடியும் என்னும் கேள்விக்குறி. ``கம்பெனி திவால்” என்று அறிவிப்பது சுலப வழி. வாங்கின கடன் எதையும் திருப்பித் தரவேண்டாம். ஆனால், அது ஏமாற்றுக்காரர்களின் வழி. ”என்னை நம்பிப் பணம் தந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எப்படித் திருப்பிக் கொடுப்பேன்? ஸ்டூவர்ட் டிரஸ்ட்டிக்குப் பாக்கி இருக்கிறது. அதைத் தராவிட்டால், தனக்காக உத்தரவாதக் கையெழுத்திட்ட பேராசிரியர் ஆஹோவுக்கும், அவர் மனைவிக்கும் செய்யும் துரோகமல்லவா?”

ராமாயணம். ராம ராவண யுத்தம். ராமனின் அம்பு மழை. ராவணப் படை துவம்சமாகிறது. கலங்கினான் இலங்கை வேந்தன், இதே மனநிலையில்தான் கடன்பட்ட ஜாக் மாவும். பல இரவுகள். ``தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே? அமைதி என் நெஞ்சில் உலவட்டுமே?”

ஹாங்ஸெள டிஃபே கம்யூனிக்கேஷன்ஸ் கம்பெனி (முன்னாள் தங்கப் புறா திட்டக் கூட்டாளிகள்) பெரும் பணபலத்தோடு, வெஸ்ட் லேக் நெட்வொர்க் (West Lake Network) என்னும் கம்பெனி தொடங்கியிருந்தார்கள். ஜாக் மா ஒரு இணையப் பக்கம் வடிவமைக்க 4,000 யான்கள் கட்டணம் வைத்திருந்தார். இவர்கள் வெறும் 1,000 யான்கள் வசூலித்தார்கள். ஜாக் மாவுக்கு வந்துகொண்டிருந்த சிறிதளவு பிசினஸூம் திசைமாறத் தொடங்கியது. தள்ளாட்டம். அண்ணன் எப்போது போவான், திண்ணை எப்போது காலியாகும் என்பதற்காகக் காத்திருந்ததுபோல் வெஸ்ட்லேக், ஜாக் மாவின் கம்பெனியை விலைக்கு வாங்கிக்கொள்கிறோம் என்று பேரம் பேசத் தொடங்கினார்கள்.

தான் பெற்று வளர்த்த குழந்தையை அடுத்தவர்களுக்குத் தாரை வார்க்க ஜாக் மாவுக்கு விருப்பமேயில்லை. அதே சமயம், நிதர்சன நிஜங்கள் மிரட்டின. கம்பெனியை முழுக்கவோ, அல்லது பெரும்பங்கையோ விற்க வேண்டிய கட்டாயம். வெஸ்ட் லேக்குடன் பல கட்டப் பேச்சு வார்த்தைகள். தீவிரமான பேரங்கள். ஜாக் மா கம்பெனி மதிப்பு 6 லட்சம் யான்கள் (70,000 டாலர்கள்) என்று ஆடிட்டர்கள் கணித்தார்கள். வெஸ்ட் லேக் 14 லட்சம் யான்கள் (1,70.000 டாலர்கள்) முதலீடு. இருவரும் கை கோர்த்தார்கள். இதன்படி, புதிய கூட்டு நிறுவனத்தில் 30 சதவீதப் பங்கு ஜாக் மாவுக்கு; 70 சதவீதப் பங்கு வெஸ்ட் லேக். ஜாக் மாவுக்கு ஜெனரல் மேனேஜர் பதவி.

கம்பெனி நிர்வாக போர்டில் ஜாக் மா சார்பில் அவரும், இன்னொரு டைரக்டரும்; வெஸ்ட் லேக் சார்பில் 5 டைரக்டர்கள்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், வாங்கிய கடன்களை அடைப்பதும் ஜாக் மாவுக்கு முக்கியம். புதிதாக வந்த முதலீட்டில், ஸ்டூவர்ட் டிரஸ்ட்டிக்குத் தரவேண்டிய ஆலோசனைக் கட்டண பாக்கியை முழுவதுமாக அடைத்தார். பேராசிரியர் ஆஹோவும், அவர் மனைவியும் தன்னிடம் வைத்த நம்பிக்கையை நிரூபித்துவிட்டார். அடுத்துத் தன் உறவுகளிடமும், நண்பர்களிடமும் கம்பெனிக்காக வாங்கிய கடன்கள். அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சு.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டது என்று ஜாக் மா நினைத்தார். ஆனால், சில மாதங்களில் தெரிந்தது, கால் வைத்தது சந்தனக் குழம்பில் அல்ல, சாக்கடையில்.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்