`எ
துகை மோனையில் பேசினா கேனைக்கும் புரியும்’ என்பது பழமொழி. ரைமிங்காய் பேசுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. ஊர் பெரியவர்கள் முதல் ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகள் வரை ரைமிங்காய் பேசித்தான் மக்கள் மனதை கவர்கிறார்கள்.
ரைமிங்காய் பேசுவது பலருக்கும் டக்கென்று பிடித்துவிடுகிறது. சட்டென்று மனதில் பதிந்துவிடுகிறது. ‘உண்ணா சொத்து மண்ணா போகும்’ என்று கூறும் போது அதில் எத்தனை வீரியம் பாருங்கள். ‘தாயை போல் பிள்ளை, நூலை போல் சேலை’ என்பதால் தானே `விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்கிறார்கள். இதை நான் சொல்ல போக நீங்கள் `கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’ என்று ஏசுவீர்கள். `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று அதை ஒதுக்கி `பேச்சை கொடுத்து ஏச்சை வாங்குவானேன்’ என்று விட்டுவிடுகிறேன்!
இந்த ரைமிங் மேட்டர் தமிழ் மொழிக்கு மட்டும் உரித்தானது என்று நினைக்காதீர்கள். உலக மொழிகள் அனைத்திலும் இதே கதைதான். ரைமிங் அழகு, சரி, ஆனால் அவை உண்மையா? சரியானதாக பார்க்கப்படுகிறதா? இதை வீட்டில் அமர்ந்து யோசிப்பதை விட வெளியில் சென்று ஆராய்ந்து பார்த்துவிடுவது என்று ஆய்வில் இறங்கினர் ‘மேத்யூ மெக்லோன்’ மற்றும் ‘ஜெஸ்ஸிகா தோஃபைபக்ஷ்’ என்னும் சமூக உளவியலாளர்கள். ரைமிங்கான வாக்கியங்களை அப்படி ரைமிங் ஆகாத வாக்கியங்களோடு ஒப்பிடும்போது எவை சரியானதாக, உண்மையானதாக பார்க்கப்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவுகளை `Psychological Science’ என்ற ஜர்னலில் ‘Rhyme as Reason in Aphorisms’ என்ற கட்டுரையாக எழுதினர்.
ஆய்வு சிம்பிளானது. அதிகம் பிரபலமாகாத ஆனால் ரைமிங்கான அறுபது ஆங்கில பழமொழிகளை தேர்ந்தெடுத்தனர். அதில் முப்பது பழமொழிகளை அதன் அர்த்தம் மாறாமல் ஆனால் ரைமிங்காக இல்லாதபடி மாற்றி எழுதினர். இது தெளிவாய் புரிய தமிழ் பழமொழி ஒன்றை உதாரணமாக்கி விளக்குகிறேன். `உப்புள்ள பண்டம் தொப்பையிலே உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது ரைமிங்கான பழமொழி அல்லவா. அதையே ‘உப்புள்ள பொருள் விரும்பி உண்ணப்படுகிறது. உப்பில்லா பண்டம் விரும்பப்படுவதில்லை’ என்று மாற்றி எழுதினர். ஆக, முப்பது ரைமிங்கான பழமொழிகள். மீதி முப்பது ரைமிங் இல்லாத சாதாரண வாக்கியங்கள். ஆனால் அனைத்தும் பழமொழிகள் தான் என்பதை கவனியுங்கள்.
ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் 60 பழமொழிகளும் கூறப்பட்டு அதில் எந்த பழமொழிகள் சரியானதாக, உண்மை நிறைந்ததாக படுகிறது என்று கேட்கப்பட்டது. ரைமிங் ஆகாத பழமொழிகளை கட்டிலும் ரைமிங்காக இருந்த பழமொழிகள் 22% அதிகம் சரியானதாக, உண்மை நிறைந்ததாக அனைவரும் கூறினர். அதாவது ரைமிங்காக இருப்பதால் அவை சரியானதாக, உண்மையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில். இதற்கு காரணம் ரைமிங் பழமொழிகளின் Enhanced processing fluency என்றார்கள் ஆய்வாளர்கள். மனித மூளை புரிந்துகொள்ள ஈசியாக இருக்கிறதாம்.
நம் மூளை கொஞ்சம் சோம்பேறி. முடிந்தவரை உழைக்காமல் இருக்கமுடியுமா என்று டபாய்க்கத் தான் பார்க்குமாம். அதிகம் வேலை தராத சமாச்சாரங்களை விரும்புமாம். ஆய்வில் தரப்பட்ட ரைமிங்கான பழமொழிகள் ஈசியாக இருப்பதால் அதை ப்ராசஸ் செய்து புரிந்துகொள்வது மூளைக்கு எளிதாக இருக்கிறது. ரைமிங் இல்லாத பழமொழிகளை ப்ராசஸ் செய்து புரிந்துகொள்ள மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதனாலேயே ரைமிங்காக இருக்கும் பழமொழிகளை டக்கென்று புரிந்துகொண்டு அவை சரியானவை, உண்மையானவை என்று நம்புகிறோமாம். பழமொழிகள் மட்டுமல்ல, பொதுவகவே நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் விஷயங்களை இப்படித் தான் ப்ராசஸ் செய்து புரிந்துகொள்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் ஒரு பழமொழி ரைமிங்காக இருப்பதால் அது சரியானதாக, உண்மையானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்றும் கேட்கப்பட்டது. அதற்கு அனைவரும் ‘சே சே, ரைமிங்காக இருப்பதற்கு உண்மைக்கும் என்னய்யா சம்பந்தம், நான் அப்படியெல்லாம் பார்ப்பவன் கிடையாது’ என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக கூறினர். நம் மூளை நமக்குள் இருந்தாலும் அது வேலை செய்யும் விதம் நமக்கே தெரிவதில்லை பாருங்கள்!
பழமொழிகளுக்கு ஓகே, இந்த ஆய்வு முடிவுகளை வைத்துக் கொண்டு வியாபாரத்தில் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்குத்தான் அடுத்து வருகிறேன். ரைமிங்கான விஷயங்களை மனித மூளை டக்கென்று புரிந்துகொண்டு ஈசியாக ப்ராசஸ் செய்து அவை சரியானதாக, உண்மையானதாக இருக்கும் என்று நினைக்கிறதல்லவா. இதை கொண்டு மார்க்கெட்டிங்கில் சித்து விளையாட்டுகள் விளையாட முடியும்.
பிராண்டிற்கு பெயர் சூட்டுவதிலிருந்து துவங்குவோம். பிராண்ட் பெயர் ரைமிங்காக இருக்கும்படி செய்யலாம். மார்க்கெட்டில் சக்கை போடும் பிராண்டுகள் பல ரைமிங்காக இருப்பதை கவனியுங்கள். ‘க்ராக் ஜாக்’, ‘7-Eleven’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, `50-50’, ‘கேக்ஸ் அண்ட் பேக்ஸ்’, ‘டேஸ்ட்டி ட்ரீட்ஸ்’, ‘You Tube’. அடுத்த முறை நீங்கள் ஏதேனும் புதிய பிராண்ட் அறிமுகப்படுத்தும் போது அதற்கு ரைமிங்காக பெயர் வைக்க முடியுமா என்று பாருங்களேன்!
இந்த உளவியல் உண்மை தெரிந்தோ தெரியாமலோ அக்காலத்தில் டைரக்டர் விசு தன் படங்களுக்கு ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘காவலன் அவன் கோவலன்’ என்று ரைமிங்காக பெயர் வைத்து வெற்றி பெற்றதை கவனியுங்கள்!
அதே போல் பிராண்ட் பேஸ் லைனையும் ரைமிங்காக எழுதலாம். விளம்பரங்களில் வரும் பிராண்ட் பன்ச் டைலாக்கை சொல்கிறேன். `டிவிஎஸ் ஸ்டார்’ தன் பைக்கை அறிமுக்கப்படுத்திய போது பேஸ்லைனாக `செயல் வீரர்களின் புயல் வாகனம்’ என்று கூறி நம்மை ஓட்ட வைத்தது. ‘டைரி மில்க்’ சாக்லெட் ‘ஸ்வீட் எடு, கொண்டாடு’ என்று கூறி வாங்க வைக்கிறது. இவை பரவாயில்லை. ரைமிங்காக அமைந்து நமக்கு புரியவும் செய்கிறது. ஆனால் ‘இபாங் குபாங் ஜபாங்’ என்று புரியாத பாஷையில் ரைமிங்காக கூறி மாதா மாதம் நம்மை மறக்காமல் வாங்கவைக்கும் ‘ஹார்லிக்ஸ்’ பேஸ்லைன் பலே கில்லாடித்தனம் அல்லவா!
மிகவும் சாதாரணமாக தோன்றும் ரைமிங் விஷயம். இதில்தான் எத்தனை உளவியல் உண்மைகள். ஆராய்ந்தே கூறிவிட்ட பிறகும் இன்னமும் கூட இதையெல்லாம் நம்பமாட்டேன் என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை `சாமி வரம் தந்தாலும் பூசாரி இடம் தரமாட்டான்’ என்று விட்டுவிட வேண்டியது தான். ஆனால் அப்படி நம்பாதவர்களை `கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்று யாராவது `வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்று சொல்வார்களோ என்ற கவலைதான் எனக்கு!
எது எப்படியோ, எதுகை மோனையில் பேசினா கேனைக்கும் புரியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதை எங்கோ படித்தா மாதிரி இருக்குமே? கட்டுரை ஆரம்பத்தில் நான் எழுதியது தான். என்னை வைய மாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்கிறேன். இது போல் பழமொழியே கிடையாது. நானாக சும்மா எழுதினேன். மோனை, கேனை என்று ரைமிங்காக இருந்ததால் அது பழமொழியாகத்தான் இருக்கும், சரியாகத்தான் இருக்கும் என்று உங்களை நம்ப வைக்க. நீங்களும் அந்த நேரம் நம்பினீர்களா இல்லையா!
அதனால் தான் சொல்கிறேன். ‘டைமிங்கா பேசினா சிரிப்பு, ரைமிங்கா பேசினா சிறப்பு’!
satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
44 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago