2018-ம் ஆண்டு விடை பெறுகிறது. அரசியல், சமூகம், தனிமனித வாழ்க்கை என பல துறைகளிலும் ஏற்றமும், இறக்கமும் வழக்கம்போல் கடந்து சென்றுள்ளன. அந்த வரிசையில் வணிகத்துறையிலும் 2018-ம் ஆண்டில் வணிகத்துறையிலும் தடம் பதித்து கடந்து போன சில பதிவுகளை பார்க்கலாம்.
பிப்ரவரி
மத்திய பட்ஜெட்
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை, சம்பளதாரர்கள் மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம் எனவும், விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி திட்டமும் இடம் பெற்றது. மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம், அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்துவ இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம், 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றன.
வங்கி மோசடி; நீரவ் மோடி, மொகுல் சோக்சி
download-5jpg100
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணப் பரிமாற்றம் நடந்தது கடந்த பிப்ரவரி மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
வங்கியின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடிப் புகார் உள்ளது. மேலும், 11,500 கோடி ரூபாய் அளவிற்கு அந்த வங்கியின் மும்பை கிளையில் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்ச்
திவாலான ஏர்செல்; அதிர்ச்சிடைந்த வாடிக்கையாளர்கள்
தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6-வது இடத்தில் இருந்த ஏர்செல் நிறுவனம், ஜியோ, வோடபோன், ஏர்டெல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் வந்ததைத் தொடர்ந்து போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறியது.
இதனால் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து படிப்படியாக விலகி வேறு நிறுவனங்களை நாடினர். ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சினை ஏற்பட்டது. சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் எர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது.
ஏப்ரல் முதல் இ-வே பில்
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்கு எடுத்து செல்வதற்கு இ-வே பில், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கோ அல்லது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ பொருட்களை எடுத்துச் செல்லும் போது சரக்கு வாகன ஓட்டிகள் இ-வே பில் வைத்திருப்பது கட்டாயமாகும்.
பிட்காயினுக்கு தடை
download-3jpg
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துது. வங்கிகள் உட்பட ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் செயல்படும் எந்த அமைப்புகளும் கிரிப்டோ கரன்சி சார்ந்த சேவைகளை வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கிரிப்டோ கரன்ஸி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளால் நிதி அமைப்பின் திறன் மற்றும் நிதி அமைப்பில் அனைவரையும் உள்ளடக்குதல் போன்றவை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அப்போது, இந்தியாவில் ஒரு பிட்காயின் ரூ.10 லட்சம் என்ற அளவில் வர்த்தகம் ஆனது. பல லட்சம் ரூபாயை மக்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.
பிளிப்கார்டை ‘வளைத்த’ வால்மார்ட்
பிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை, அமெரிக்காவின் வால்மர்ட் நிறுவனம் வாங்கியது. பிளிப் கார்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 77 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் ஒப்புக் கொண்டது. சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் நடந்தது.
பிளிப் கார்ட்டை வாங்க அமேசான் நிறுவனமும் ஆர்வம் காட்டியதாக செய்திகள் வெளியாகின. அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானுக்கு போட்டியை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் அதற்கான செயல் திட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா
8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக இந்தியா உள்ளதாக ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 62,58,400 கோடி டாலராகும்.
இதற்கு அடுத்த இடங்களில் சீனா (24,80,300 கோடி டாலர்), ஜப்பான் (19,52,200 கோடி டாலர்) போன்றவை உள்ளன. ஒரு நாட்டிலுள்ள தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்துகள், மொத்த சொத்து மதிப்பை வைத்து கணக்கிடப்பட்டது.
விடை பெற்றது டாடா இண்டிகா
வாடகை கார்களில் ஹேட்ச் பேக் மாடல் என்றாலே அனைவரது நினைவுக்கு வருவது டாடா இண்டிகா கார்தான். வாடகை கார் செயலிகளான ஓலா, உபெர் மூலம் ஹேட்ச் பேக் காரை பதிவு செய்தாலே உங்களுக்கு இண்டிகா கார்தான் நிச்சயம் வரும். இத்தகைய பிரபலமான இண்டிகா காரை இனி தயாரிக்கப் போவதில்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து விட்டது.
இந்த காருக்கான தேவை குறைந்ததைத் தொடர்ந்து இதன் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இதேபோல இந்நிறுவனத்தின் மற்றொரு செடான் காரான இண்டிகோ சிஎஸ் மாடல் உற்பத்தியையும் நிறுத்திவிட்டது டாடா மோட்டார்ஸ்.
ரோட்டோமேக் வங்கி மோசடி
ரோட்டோமேக் குழுமம் செய்த வங்கி மோசடி தொடர்பாக அக் குழுமத்துக்குச் சொந்தமான ரூ. 177 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இக்குழுமம் வங்கிகளில் ரூ. 3,695 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளது.
அந்நியச் செலாவணி விதி மீறல் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சொத்துகளை முடக்க அதாவது மெசர்ஸ் ரோட்டோமேக் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களின் சொத்துகளை முடக்க உத்தரவிடுவதாக அறிவித்தது.
ஜூன்
ஹார்லிடேவிட்சன் வரி சர்ச்சை
download-4jpg100
அமெரிக்க தயாரிப்பான விலை உயர்ந்த ஹார்லி-டேவிட்சன்ஸ் பைக்குகளுக்கு இறக்குமதித் தீர்வையையே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவை நிர்பந்தித்தது.
ஏற்கெனவே 75%-லிருந்து 50% ஆக கடந்த பிப்ரவரியில் குறைத்தது போதாதென்று தீர்வையையே பூஜ்ஜியமாக்க வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்தது.
சிக்கிய ‘செயல்படாத’ நிறுவனங்கள்
கறுப்பு பணம் மற்றும் முறைகேடான சொத்துகளை ஒழிக்கும் நடவடிக்கையாக, தொழில்ரீதியான செயல்பாடுகள் எதிலும் ஈடுபடாத 2.26 லட்சம் நிறுவனங்களின் பெயர்களை கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களில் சட்டத்துக்கு புறம்பான வகையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கண்டறியப்பட்டுள்ள 2.26 லட்சம் செயல்படாத நிறுவனங்களில், 1.68 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 73,000 செயல்படாத நிறுவனங்கள் ரூ.24,000 கோடியை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது தெரிய வந்தது.
சர்ச்சையில் சிக்கிய சாந்தா கொச்சார்
ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியதில் கொச்சரின் கணவர் பலனடைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கமான ஆண்டு விடுப்பில் உள்ள கொச்சரை, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை விடுப்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ புரூடென்ஷியலின் தலைமைச் செயல் அதிகாரியான சந்தீப் பக்ஷி வங்கியின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சிஓஓ) நியமிக்கப்பட்டார்.
அவசரகால கச்சா எண்ணெய் சேமிப்பு
போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிறுத்தக்கொண்டாலோ அவசர தேவைக்கு பல லட்சம் டன்கள் கச்சா எண்ணெயை பூமிக்கடியில் சேமித்து வைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, 4 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில், தென்னிந்தியாவில் 3 பெட்ரோலிய பொருள் சேமிப்பு நிலையங்களை அமைக்கப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
லண்டனில் நெருக்கடிக்கு ஆளான வேதாந்தா
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. லண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து 33.5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளது.
அதில், வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பங்கு தாரராக உள்ள வோல்கான் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத் தின் வசம் வேதாந்தா நிறுவனத்தின் 66.53 % பங்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு பங்கு 825 பென்ஸ் என்கிற வீதத்தில் பங்குகளை திரும்ப பெற்றது.
(தொடரும்....)
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago