கடந்த சில மாதங்களாகவே பங்குச் சந்தைகளில் ஏற்ற நிலை காணப்படுகிறது. நிப்டி 8000 புள்ளிகளுக்கு மேலேயும், சென்செக்ஸ் 27000 புள்ளிகளுக்கு மேலேயும் உயர்ந்திருந்த சூழ்நிலையில், குவாண்டம் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இயக்குநர் ஐ.வி.சுப்ரமணியமிடம் பேசினோம். குவாண்டம் நிறுவனம், முதலீட்டாளர் செய்ய வேண்டியது என பல விஷயங்களை பேசினார். அந்த விரிவான பேட்டியிலிருந்து..
2006-ம் ஆண்டு முதல் நீங்கள் செயல்பட்டு வந்தாலும் நீங்கள் கையாளும் சொத்துமதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறதே?
சரியான திட்டமிடலுடன்தான் ஆரம்பித்தோம். முதலில் எந்த தனிநபருக்கும் மதிப்பு கொடுக்காமல் ஒரு ரிசர்ச் டீமுடன் ஆரம்பித்தோம். உதாரணத்துக்கு சந்தையில் பிரபலமாக இருக்கும் பண்ட் மேனேஜரை வைத்து ஆரம்பிக்கும்போது அதிக நிதி கிடைக்கும். ஒருவேளை அவர் விலகிவிட்டால் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஒரு டீம் வைத்துக்கொண்டோம்.
மேலும் கடினமான எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவராமல் எளிமையான திட்டங்களை வைத்து நிறைய மக்களுக்கு கொண்டு சேர்க்க ஆரம்பித்தோம்.
அடுத்து, நாங்கள் விநியோகஸ்தர்களை அணுகியபோது எங்களுக்கு இவ்வளவு கமிஷன் கிடைத்தால், நாங்கள் இவ்வளவு தொகையை கொண்டுவருவோம் என்று சொன்னார்கள். இது எங்களுக்கு சரியானதாக படவில்லை. அதனால் எங்கள் திட்டங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தோம். நேரடியாக கேட்கும் நபர்களுக்கு அனுப்பி முதலீட்டை திரட்டினோம். அதனால்தான் மற்ற பண்ட்களை விட எங்களது ஈக்விட்டி பண்ட்களில் எக்ஸ்பென்ஸ் விகிதம் குறைவாக இருக்கிறது.
இருந்தாலும், ஆரம்பத்தில் எங்களை நம்ப பலர் தயங்கினார்கள். அதன்பிறகு மூன்று வருட செயல்பாடு, ஐந்து வருட செயல்பாட்டினை பொறுத்து முதலீட்டாளர்கள் வருகிறார்கள். 10 கோடியில் ஆரம்பித்து இப்போது 500 கோடியில் இருக்கிறோம்.
அதிக மக்களை சென்றடைய என்ன செய்திருக்கிறீர்கள்.?
பல நகரங்களுக்கு சென்று முதலீட்டாளர்களுடன் பேசி வருகிறோம். இப்போது எங்களுடைய ஐந்து வருட வருமானம் நன்றாக இருப்பதால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். மேலும் நிதி ஆலோசகர்கள் பலரும் எங்களது பண்டினை பரிந்துரை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தவிர நாங்கள் ஓடுவது 100 மீட்டர் ஒட்டம் அல்ல; மாரத்தான்.
ஈக்விட்டி பிரிவில் சில பண்ட்கள் மட்டுமே உங்களிடம் இருக்கின்றது. செக்டோரல் மற்றும் சர்வதேச பண்ட்கள் உங்களிடம் இல்லையே?
சர்வதேச பண்ட் ஆரம்பிப்பது குறித்து ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கான ஆராய்ச்சியை ஆரம்பித்திருக்கிறோம். கூடிய விரைவில் ஆரம்பிப்போம். ஆனால் செக்டோரல் பண்ட் ரிஸ்க்கானது. அதனால் அதுபோன்ற பண்ட்களை வெளியிடும் திட்டம் இல்லை.
சென்செக்ஸ் 27000 புள்ளிகளை கடந்துவிட்டது. நிப்டி 8000 புள்ளிகளை கடந்துவிட்டது! சந்தையின் அடுத்த கட்டம் எதை நோக்கி இருக்கும்?
குறுகிய காலத்தில் சந்தையின் ஏற்ற இறக்கங்களை நாங்கள் கவனிப்பதில்லை. நீண்ட காலத்தில்தான் நாங்கள் முதலீடு செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி சந்தையை தீர்மானிக்கலாம், ஆனால் சர்வதேச அளவில் மோசமான ஒரு செய்தி கூட சந்தையை சரியச் செய்துவிடும். நீண்ட கால வளர்ச்சிக்கு ஊழல்களை ஒழித்து நிறைய சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும்.
தற்போதைய நிலையில் சந்தையில் சில பங்குகளின் மதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதனால் 30 சதவீத தொகையை முதலீடு செய்யாமல் வைத்திருக்கிறோம்.
நீங்கள் முதலீடு செய்யாமல் இருந்தாலும், அதிக முதலீடுகள் உங்களுக்கு வரும்போது முதலீடு செய்துதானே ஆகவேண்டும்?
ஆமாம். ஒரு கட்டத்துக்கு மேல் முதலீடு செய்யாமல் இருக்க முடியாது. ஈக்விட்டி பண்ட்களில் 35 சதவீதத்துக்கு மேல் பணமாக வைத்தால் வரிச்சலுகை கிடையாது என்பதால் 30 சதவீத தொகை இன்னும் முதலீடு செய்யப்படாமல் இருக்கிறது.
இப்போதைக்கு முதலீட்டுக்கு ஏற்ற துறை எது என்று சொல்ல முடியுமா?
முதலீட்டுக்கு ஏற்ற துறையை சொல்ல முடியாது. ஆனால் மதிப்பீடுகள் அதிகம் இருக்கும் துறைகளை சொல்ல முடியும். எம்.எம்.சி.ஜி., பார்மா, சில வங்கிப்பங்குகள், கேபிடல் குட்ஸ் மற்றும் இன்ஃபிரா ஆகிய துறை பங்குகள் அதிக விலையில் வர்த்தகமாகின்றன.
முதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் சந்தை உயர்ந்துவிட்டது என்று நினைத்து முதலீடுகளை எடுத்துவிட வேண்டாம். பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். ஆனால் எஸ்.ஐ.பி. முறையில் இருக்கட்டும். அதேபோல புதிதாக முதலீடு செய்பவராக இருந்தாலும் இப்போதைய நிலைமையில் 30 சதவீதத்துக்கு மேல் முதலீடு செய்ய வேண்டாம்.
சென்செக்ஸ் நிப்டிக்கு எதாவது இலக்கு சொல்ல முடியுமா?
நிறுவனங்களின் செயல்பாடுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் 10 சதவீதம் மேலே செல்லக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிறுவனங்களின் வருமானம் சரியில்லை என்றால் சென்செக்ஸ் 21000 புள்ளிகள் வரை கூட செல்லலாம். இருந்தாலும் 2014-ம் ஆண்டு கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது. 2015-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்.
இப்போது மியூச்சுவல் பண்ட் துறையில் நிறுவனங்கள் இணைவது அதிகமாக இருக்கிறது. ரூ.50 கோடி குறைந்தபட்ச முதலீடு தேவை என்று செபியின் புதிய விதிமுறையில் சொல்லப்பட்டிருக்கிறது. குவாண்டம் நிறுவனத்தின் திட்டம் என்ன?
நாங்கள் இந்த பிஸினஸில் உறுதியாக இருக்கிறோம். செபியின் இலக்கை நாங்கள் எட்டுவோம். மேலும் எங்களது பிஸினஸ் மாடல் வேறு என்பதால் வேறு நிறுவனங்களை இணைக்கும் திட்டமும் இல்லை.
வட்டி விகித குறைப்பு எப்போது இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? வட்டி குறைந்தால் சந்தை உயரும் என்று நினைக்கிறீர்களா?
பணவீக்கம் அதிகமாக இருப்பதால், தற்போதைய நிலைமையில் வட்டி குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. வட்டி விகிதம் குறைப்பது சந்தைக்கு தேவை என்றாலும் பணவீக்கத்தை குறைப்பது முக்கியம். தவிர பங்குச்சந்தைகள் எப்போதும் இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்கும். 0.50 சதவீத வட்டி குறைப்பு எதிர்பார்த்து அதை தாண்டி வட்டி குறைப்பு இருந்தால்தான் சந்தைகள் உயரும்.
தொடர்புக்கு: karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago