ஜாக் மா வாய்ச்சொல் வீரரல்ல, வாழ்ந்து காட்டுபவர். அலிபாபா சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கியதும், அதற்காகப் பணம் ஒதுக்க ஆரம்பித்ததும் 2011–இல் தான். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, அவர் என்ன செய்தார் தெரியுமா?
2009 –ஆம் ஆண்டு.
ஜாக் மா, கூட்டாளிகள், ஏராளமான ஊழியர்கள் பணக்காரர்களாகிவிட்டார்கள். அனைவரும் தமக்கென மட்டுமே வாழாதவர்களாக இருக்கவேண்டும் என்று ஜாக் மா எதிர்பார்க்கிறார். அவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறார்.
"உங்களிடம் இருக்கும் செல்வம் உங்களையும், பிறரின் மகிழ்ச்சியையும் அதிகமாக்கப் பயன்படாவிட்டால், அந்தப் பணத்தால் எந்தப் பயனுமில்லை. அது பல வண்ணக் காகித மலை மட்டுமே.”
ஜாக் மா சொல்வதைச் செய்பவர். ஆகவே, வலது கை தருவது இடது கைக்குத் தெரியாமல் பலருக்கு உதவினார். 2014 – இல் அலிபாபாவின் ஐ.பி.ஓ. ஏழு சதவிகிதப் பங்குகள் வைத்திருக்கும் ஜாக் மாவின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள். தன் பங்குகளில் 2 சதவிகிதத்தை நலிந்தோர் உதவிகளுக்கு ஒதுக்க முடிவெடுக்கிறார்.
ஜாக் மா அறக்கட்டளை (Jack Ma Foundation) ஆரம்பம். இதன் குறிக்கோள்கள் - நீல வானம், தூய்மையான குடிநீர், ஆரோக்கியமான குடிமக்கள், சுதந்திரமான சிந்தனைகள் ஆகியவற்றை உருவாக்குவதோடு, ஒவ்வொரு தனிமனிதர் மனங்களிலும் பொறுப்புணர்ச்சியை வளர்த்து, சமுதாயத்தை முன்னேற்றும் செயல்வீரர்களாக மாற்றுவது.
இந்த அறக்கட்டளையின் சில சேவைகள் கிராம ஆசிரியர்கள் முன்னேற்றம் நகரக் கல்வி நிலையங்களின் தரம் உயர்ந்த நிலையில் இருப்பதும், கிராமங்கள் பெருமளவு பின்தங்கி இருப்பதும் ஜாக் மாவுக்குத் தெரியும். இந்த ஏற்றத் தாழ்வைச் சீராக்க விரும்பினார். 2016 – இல் இந்தப் பணி தொடங்கியது.
சீனாவின் கிராமங்களிலிருந்து, 100 நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கான அளவுகோல்கள், பணியில் அர்ப்பணிப்பு, பாடத் திட்டத்திலும், கற்பிக்கும் முறையிலும் காட்டும் புதுமைகள். இந்த அங்கீகாரம் நல்லாசிரியர்களுக்கு நாடளாவிய புகழ் வெளிச்சம் தருகிறது. பிற ஆசிரியர்களுக்கும் உத்வேகமாகிறது.
ஆசிரியர்கள் உயர உயர இளைய தலைமுறை உயரும், நாளைய சீனா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது ஜாக் மாவின் நம்பிக்கை. அறக்கட்டளையின் உதவும் கரங்கள் சீனாவையும் தாண்டி விரிந்துகொண்டிருக்கின்றன.
அரபு நாடான ஜோர்டன் இந்த வட்டத்துக்குள் அண்மையில் வந்திருக்கிறது. கிராமங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்காக, அங்குள்ள Queen Rania Foundation for Education and Development என்னும் அறக்கட்டளைக்கு முதல் கட்ட உதவியாக மூன்று மில்லியன் டாலர்களை ஜாக் மா தந்திருக்கிறார்.
தொழில் முனைவர்கள் பயிற்சி அலிபாபா சீனக் கம்பெனியல்ல, உலகளாவிய நிறுவனம் என்று ஜாக் மா அடிக்கடி சொல்லுவார். இந்த அடிப்படையில், தன் அறக்கட்டளையின் சேவைகள் சீனாவை மையமாகக் கொண்டிருந்தாலும், நாளடைவில் உலகம் முழுக்கக் கிளைகள் பரப்ப வேண்டும் என்பது ஜாக் மாவின் ஆசை.
2008 – ஆம் ஆண்டில், அலிபாபா, ஹாங்ஸெள பல்கலைக் கழகத்தில் அலிபாபா பிசினஸ் ஸ்கூல் தொடங்கியது. பிசினஸ் தொடர்பான படிப்பும், பயிற்சியும் தரும் கல்விச்சாலை. இங்கே, ஐக்கிய நாடுகள் வணிகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு (United Nations Conference on Trade and Development. சுருக்கமாக UNCTAD) என்னும் அமைப்பின் ஒத்துழைப்புடன், ஜாக் மா அறக்கட்டளை, eFounders Fellowship Initiative என்னும் இரண்டு வாரப் பயிற்சி முகாம் நடத்துகிறார்கள்.
உலகெங்கிலுமுள்ள 1,000 இளைஞர், இளைஞிகளை ஆன்லைன் பிசினஸ் வல்லுநர்களாக்கும் லட்சியம். இதுவரை பயிற்சி பெற்றவர்கள் தத்தம் நாடுகளில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்தோனேஷிய அரசாங்கத்துக்கு ஜாக் மா, இ-காமர்ஸ் ஆலோசகராக இருக்கிறார். அங்கே, கம்ப்யூட்டர் பயிற்சி வசதிகள் அதிகமாக இல்லை. இதை நிவர்த்தி செய்ய, ஜாக் மா அங்கே, தன் சொந்தச் செலவில் ஜாக் மா தொழில் முனைவர்கள் இன்ஸ்டிடியூட் (Jack Ma Institute of Entrepreneurs) தொடங்கப் போகிறார். அடுத்த சில வருடங்களில் 1,000 கம்ப்யூட்டர் திறமைசாலிகளை உருவாக்கும் திட்டம்.
(ஜாக் மா, தமிழ்நாட்டுக்கு உங்கள் அறக்கட்டளை ஏதாவது திட்டங்கள் வைத்திருக்கிறதா?)
ஆப்பிரிக்காவுக்கு உதவிக்கரம்
பணி நிமித்தமாக ஜூலை 2017 – இல் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அவர் செல்ல வேண்டியிருந்தது. அங்கே, சீனாவைவிட வறுமையின் கொடுமை இன்னும் தீவிரமாக இருப்பதை உணர்ந்தார். அவரைப் பொறுத்தவரை, வறுமை தீர்க்கும் வழி, “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். கவலை உனக்கில்லை, ஒத்துக்கொள்'' என்பதுதான்.
பயணம் முடிந்து திரும்பி வந்தவுடன் சொன்னார்,"சக தொழில் முனைவர் என்ற முறையில், ஆரம்ப நாட்களில் ஊக்கமும், உதவியும் எத்தனை முக்கியமானவை என்பதை நான் அறிவேன்.” இதற்காக, இந்த ஆண்டு முதல், 10 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீட்டில் இணையதளத் தொழில் முனைவர் பரிசு (Netpreneur Prize) என்னும் போட்டி தொடங்கியுள்ளார். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டி.
ஆப்பிரிக்காவில் தொழில் நடத்துபவர்களும், தொழில் முனைவர்களாக விரும்புபவர்களும் கலந்து கொள்ளலாம், தங்கள் பிசினஸ் ஐடியாக்களை நடுவர் குழு முன்னால் விளக்க வேண்டும். இவர்களுள், தலை சிறந்த பத்துப் பேருக்கு அறக்கட்டளை தலா ஒரு லட்சம் டாலர்கள் பரிசாகத் தரும். தொழில் பயிற்சிகள் அளிக்கும்.
பிரபல ஆப்பிரிக்க பிசினஸ்மேன்கள் இவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவும் ஏற்பாடுகள் செய்யும். இதன் மூலம், வரும் பத்து வருடங்களில் மணியான 100 இன்டர்நெட் தொழில் முனைவர்கள் ஆப்பிரிக்காவில் உருவாகுவார்கள். இவர்கள் இன்னும் ஆயிரக்கணக்கானோரைத் தோற்றுவிப்பார்கள்.
2017 – ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஜாக் மாவுக்கு மூன்றாம் இடம். வாரி வழங்கிய வள்ளல்கள் வரிசையில் இரண்டாம் இடம். கொடுத்த தொகை 17 மில்லியன் டாலர்கள்.
2015 முதல், ஒவ்வொரு அலிபாபா ஊழியரும் கட்டாயமாக மூன்று மணி நேரங்கள் சமூக சேவை செய்யவேண்டும் என்னும் திட்டத்தை ஜாக் மா அமல் படுத்தினார். மொத்தம் 67,000 ஊழியர்கள். அதாவது வருடத்துக்கு 2,01,000 மணி நேரங்கள். தனிப்பட்ட முறையில் ஜாக் மாவும் இதைக் கடைப்பிடித்தார். மனதுக்குள் ஒரு மின்வெட்டல், "எனக்கு வயது 54 ஆகிறது. என் தேவைக்கு அதிகமாகவே வசதிகள். இனி ஏன் தன்னல வாழ்க்கை? அலிபாபாவிலிருந்து ஓய்வெடுத்துக்கொண்டு முழு நாட்களையும் சமூகத்துக்காகச் செலவிடலாமே?”
எடுத்தார் முடிவு. சீனா கல்வியையும், ஆசிரியர்களையும் கொண்டாடும் தேசம். 1985 முதல், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்கள் தினமாக அனுசரிக்கிறது. அன்று தேசீய விடுமுறை. ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடக்கும்.
ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய ஜாக் மா தன் முடிவை அறிவிக்கத் தேர்ந்தெடுத்த நாள் இந்தப் புனித நாள் - செப்டம்பர் 10, 2018. அனைத்து ஊழியர்களுக்கும் வந்தது ஜாக் மாவின் கடிதம்.
"2019 – ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று அலிபாபா குழும சி.இ.ஓ. டேனியல் ஜாங், என் சேர்மேன் பதவிக்கு வருவார். இந்த மாற்றம் சுமுகமாக இருப்பதற்காக, நான் ஒரு வருடம் அலிபாபாவில் தொடர்வேன். செப்டம்பர் 10, 2020 – இல் அலிபாபாவிலிருந்து ஓய்வு பெறுவேன்……”
2013 – ல் சி.இ.ஓ. பதவியை டேனியல் ஜாங் கைகளில் ஜாக் மா ஒப்படைத்தார். அதன் அடுத்த கட்டம் இது. ஆட்சி, கட்சி, கலை, விளையாட்டு, பிசினஸ் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், நாற்காலியில் அமர்ந்தவர்கள் தங்கள் பதவியைத் தாமாகவே விட்டுக்கொடுத்து இளைய தலைமுறைக்கு வழி விட்டதாகச் சரித்திரமில்லை. ஜாக் மா ஒரு முறை சொன்னார்,"எனக்குத் தொழில் நுட்பம் தெரியாது.
எப்படி பிசினஸ் நடத்தவேண்டும் என்று தெரியாது. ஆனால், ஆசிரியராக இருந்தமையால், திறமைசாலிகளை அடையாளம் காணவும், திறமைகளை வளர்க்கவும் தெரியும்.” இதனால், இளைய தலைமுறை தன்னைவிடச் சிறந்தவர்கள் என்று நம்பினார். வியர்வையும், உழைப்பும் சிந்திச் செங்கல் செங்கலாகக் கட்டிய சொந்த பிசினஸிலிருந்து விலகி, பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் தருவது மாபெரும் தியாகம், சமூக சேவை, இளையோர் தலையில் வைக்கும் நம்பிக்கைக் கிரீடம். பதவிகளில் இருக்கும் அத்தனை பேருக்கும் தரும் நெத்தியடிப் பாடம்.
ஜாக் மாவுக்கு இப்போது வயது 54. இளமைத் துடிப்பு, சுறுசுறுப்பு. இவரால் சும்மா இருக்கமுடியுமா? அவரே சொல்கிறார், "எனக்குப் பல கனவுகள் இருக்கின்றன. சோம்பேறியாகச் சும்மா உட்கார்ந்திருப்பது எனக்குப் பிடிக்காது என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். அலிபாபாவுக்கு என் பங்களிப்பு எப்போதும் உண்டு. எனக்கு மிகவும் பிடித்தது ஆசிரியர் வேலை.
மறுபடியும் அதற்குத் திரும்புவேன். உலகம் பெரியது. நான் இன்னும் இளமையோடு இருக்கிறேன். ஆகவே, புதுப் புது விஷயங்களை முயற்சி செய்ய விரும்புகிறேன். அப்போதுதானே புதிய கனவுகள் கைவசமாகும்?”
இந்தப் புதிய முயற்சிகளின் ஒரு பரிமாணம் – சென்ற வாரத் தலைப்புச் செய்தி. ஜாக் மா சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருக்கிறார். முதலாளித்துவத்தின் முழு உருவமான ஒருவர் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தது ஏன்? புரியாத புதிர். வரப்போகும் அழகிய ஒரு கோலத்தின் முதற்புள்ளி இது என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், நீங்கள் சுயநலவாதியல்ல, சமுதாயப் பிரக்ஞை கொண்டவர்.
உங்கள் கனவுகள் நிச்சயம் பலிக்கும் ஜாக் மா. ஏனென்றால், நினைத்ததை நடத்தியே முடிப்பவர் நீங்கள் என்று உங்கள் வாழ்க்கைச் சரித்திரத்தின் ஒவ்வொரு வரியும் சொல்கிறதே?
(குகை இன்னும் திறக்கும்)
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago