ஆன்லைன் ராஜா 53: பிசினஸையும் தாண்டி….

By எஸ்.எல்.வி மூர்த்தி

விஜய் நடித்த கத்தி சினிமா நினைவிருக்கிறதா? நீர்நிலைகளை அபகரிக்கும் கோலா கம்பெனிக்கு எதிராகப் போராடும் ஹீரோவின் கதை. ஹீரோ விஜய் ஜொலிக்க வேண்டுமானால், வில்லன் கோலா கம்பெனியின் அக்கிரமங்களை மிகைப்படுத்த வேண்டும்.

இயக்குநர் முருகதாஸ் இதைக் கனகச்சிதமாகச் செய்தார். "கார்ப் பரேட்” என்றாலே, மக்கள் விரோத சக்திகள் என் னும் பிம்பம் வந்துவிட்டது. அயோக்கிய பிசினஸ் மேன்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், எல்லாத் துறைகளையும் போலவே, பிசினஸிலும், இத்தகையோர் ஒரு சில கறுப்பு ஆடுகளே. பெரும்பாலான பிசினஸ்கள் சமுதாயப் பொறுப்புக் கொண்டவர்கள்.

கார்ப்பரேட் கம்பெனிகள் சமுதாயப் பிரக்ஞையோடு செயல்படவேண்டும் என்னும் குரல் 1950 களிலேயே அமெரிக்க மக்கள் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியது. ஆர்ச்சி கரோல் (Archie Carroll) அமெரிக்க ஜார்ஜியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்.

1991 இல் கார்ப்பரேட் சமுதாயப் பொறுப்பு (Corporate Social Responsiblity) பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார். இத்துறையில் ஜாம்ப வானாக மதிக்கப்படுகிறார். கம்பெனிகளின் கடமைகளை நான்கு படிநிலைகள் கொண்ட ஒரு பிரமிட் வடிவமாக வெளியிட்டார். இவை:

படிநிலை 1 - Economic Responsibilities (பொருளாதாரப் பொறுப்புகள்). அதாவது, லாபம் சம்பாதிப்பது.

படிநிலை 2 - Legal Responsibilities (சட்டப் பொறுப்புகள்). இயங்கும் நாடுகளின் சட்டங்களை மதித்து நடத்தல்.

படிநிலை 3 - Ethical Responsibilites (நன்னெறிப் பொறுப்புக்கள்). ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல்.

படிநிலை 4 - Philanthropic Responsibilities (ஈகைப் பொறுப்புகள்).

எல்லா பிசினஸ்களும் படிநிலை 1 இல் தான் தொடங்குகின்றன. காலப்போக்கில் படிநிலைகளில் உயர்கின்றன.

ஜாக் மாவின் முதல் பொறுப்பு, படிநிலை 1, லாபம் பார்ப்பது. செலவைக் குறைக்கிறார், துணிகர முதலீடு புரட்டுகிறார், அற்புத மார்க் கெட்டிங் யுக்திகளை அரங்கேற்றுகிறார். நான்கு வருடங்கள் எதிர்நீச்சல். 2002 ஆம் ஆண்டு முடிவில் அலிபாபா முதன் முதலாக லாபம்.

இந்தக் காலகட்டத்தில், சட்டத்தையும், ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகளிலும், அலிபாபா, அரசும், சமுதாயமும் எதிர்பார்க்கும் படிநிலைகளை எட்டுகிறது. இந்தக் குறிக்கோள்களில் ஒரு நிறுவனம் எத்தனை ஆத்மார்த்தமாக இருக்கிறது என்பதற்கு உரைகல் என்ன தெரியுமா? இந்த இலக்குகளுக்குச் சவால்கள் வரும்போது, அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான்.

2011 ஆம் ஆண்டில் வருகிறது மாபெரும் பிரச்சினை. அதிகாரிகள் சில டுபாக்கூர் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு லட்சக் கணக்கான கஸ்டமர்களை ஏமாற்றுகிறார்கள். ஜாக் மா என்ன செய்கிறார்? உடனேயே சி. இ. ஓ, சி. ஓ.ஓ, இருவரின் சீட்டையும் ஜாக் மா கிழிக்கிறார். பிறர்மீது சட்டப்படி நடவடிக்கை. தன் சட்ட, நன்னெறிப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுகிறார்.

அடுத்த கட்டம் என்ன? லாபத்தையும், பிசினஸையும் தாண்டிய பொறுப்புகள். ஜாக் மாவைப் பொறுத்தவரை, இவை கருணைச் செயல்களல்ல, அத்தியாவசியக் கடமைகள். சொன்னார்,” சமுதாயத்தின் பெரிய பிரச்சினைகளுக்கு பிசினஸ்கள் தீர்வு காணவேண்டும். அப்போது மட்டுமே, அவை தொடர்ந்து லாபம் பார்க்க முடியும், வளர முடியும்.” மனித நேயத்தோடு, பள்ளத்தில் வீழ்ந்தவர்களைக் கைதூக்கி விட அலிபாபா என்னென்ன செய்யலாம் என்று ஜாக் மா சிந்திக்கிறார். முயற்சிகள் ஆரம்பம். 2011 முதல், அலிபாபா குழுமம், தங்கள் வருமானத்தில் 0.3 சதவிகிதத்தை ஈகைச் செயல்களுக்காகச் செலவிடுகிறார்கள். சென்ற நிதியாண்டில் குழுமம் செலவிட்ட தொகை 23 கோடி யான்கள் (சுமார் 241 கோடி ரூபாய்.)

சமூக சேவையில் அலிபாபா இதுவரை தொட்டிருக்கும் மைல்கற்கள்

கிராம முன்னேற்றம்

2003 இல் தொடங்கிய டாபா, 2008 இல் தொடங்கிய டாபாமால் ஆகியவை மூலம் வகை வகையான பொருட்கள் முதன் முறையாகச் சீன மக்களிடம் எட்டின. விற்பனை விவரங்களை ஆராயும்போது, இந்தக் கஸ்டமர்கள் பெரும்பாலானோர் நகரவாசிகள் என்பது ஜாக் மாவுக்குத் தெரிகிறது. இந்தச் சுகானுபவத்தைக் கிராமத்து மக்களுக்கும் தரவேண்டும் என்று அவர் மனச்சாட்சி சொல்கிறது. 2014 ஆம் ஆண்டு கிராமப்புற டாபா (Rural Taobao) என்னும் முயற்சி தொடங்குகிறார்.

ஏராளமான பணம், நேரம் முதலீடு. இதற்கான லாபம் வருமா என்று தெரியாது. பின் ஏன் இந்த முயற்சி? “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்” என்னும் சமுதாயப் பிரக்ஞை. கடந்த நான்கு ஆண்டுகளில் 30,000 கிராமப்புற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 1,50,000 ஆக உயர்த்தும் நடவடிக்கைகளை அலிபாபா செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வறுமை ஒழிப்பு

தனியொருவனுக்கு உண வில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று ஜாக் மா நெஞ்சம் துடித்ததோ? 2017 இல் 2 பில்லியன் யான்கள் (சுமார் 2,100 கோடி ரூபாய்) நிதியோடு அலிபாபா வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கினார்கள். ”ஏழைக்கு மீன் தந்தால் அவன் ஒரு நாள் பசி தீரும். மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், அவன் வாழ்நாள் பசி தீரும்” என்பது சீனப் பழமொழி. ஜாக் மா இதைக் கடைப்பிடித்தார். ஆகவே, இந்தத் திட்டம் கல்வி, கிராம முன்னேற்றம், பெண்கள் உயர்வு, ஆரோக்கிய மேம்பாடு, சுகாதாரம், சுற்றுப்புறச் சூழல் போன்ற பல்வேறு தளங்களில் உதவிக்கரம் நீட்டுகிறது.

சிறிய வியாபாரிகளுக்கு உதவி

ஒரு கோடிக்கும் அதிகமான சிறிய வியாபாரிகளின் சந்தையையும், விற்பனையையும் அதிகமாக்கி, அவர்கள் வீடு களில் அலிபாபா விளக்கேற்றி வைத்திருக்கிறது. இத்தோடு, 35 லட்சம் சிறிய உணவகங்கள் வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்வதற்கு அலிபாபா குழும அங்கமான கேனியாவ் நெட்வொர்க்- இன் ஆலோசனைகளையும், உதவிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

அலிபாபாவின் அங்கமான ஆன்ட் ஃபினான் ஷியல் சர்வீசஸ், வங்கிக் கடன் கிடைக்காத ஒரு கோடி சிறு தொழில் அதிபர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தந்து கைதூக்கி விட்டிருக்கிறது. பல சமயங்களில், இந்தக் கடன்கள் வாங்குபவர்கள் தெருவோர வியாபாரிகள். கடன் தொகை ஐம்பதே ஐம்பது டாலர்கள்! இந்தச் சிறுதொகைக் கடன்களில் நஷ்டம் மட்டுமே வரும் என்று தெரிந்தும், தரக் காரணம் சமுதாயப் பொறுப்பு.

பெண்கள் முன்னேற்றம்

2006 ஆம் ஆண்டு. லிஹாங் ஜோ (Lihong Zhou) என்னும் ஆசிரியப் பெண்மணிக்குக் கேன்சர் வந்தது. அலிபாபாவின் உதவியை நாடினார். சிகிச்சைக்கு உதவி செய்தார்கள். உடல்நலம் தேறிய அவர் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினார். இவர் ஆன்லைன் பிசின்ஸ் தொடங்க அலிபாபா கரம் கொடுத்தார்கள். இவரை “ உதாரண தாய்” என்று சமூக வலைதளங்களில் அழைக்கத் தொடங்கினார்கள்.

இவருடையதுபோல் பல உதவிக் கோரிக்கைகள் வந்து குவிந்தன. இதனால், அலிபாபா, செஞ்சிலுவைச்சங்கத்துடன் சேர்ந்து நோயுற்ற தாய்மார்களின் சிகிச்சைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் திட்டம் தொடங்கினார்கள்.

இதன் வளர்ச்சியாக, 2018 முதல், அலி பாபா பெண்களுக்கான ஒரு போட்டிநடத்து கிறார்கள். இதன் பெயர், ”எடுத்துக்காட்டாக விளங்கும் தொழில்முனைவுத் தாய்மார்களுக் கான போட்டி” (Model Mom Entrepreneurship Competition). ஏழைப்பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

பல கட்டத்தேர்வுகள் நடக்கும். திறமை, பொருளாதார நிலை, குடும்பப் பின்புலம் ஆகியவற் றின் அடிப்படையில் 20 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் யான்கள் (சுமார் 21 லட்சம் ரூபாய்) வட்டியில்லாக் கடன் கிடைக் கும். இத்தோடு பீிகிங் பல் கலைக் கழகத்தில் கட்டணமில்லாத தொழில் முனை வர் பயிற்சி, குழும இணைய தளங் களில் வியாபாரி யாகும் வாய்ப்பு.

காணாமல் போகும் குழந்தைகள் கண்டுபிடிப்பு

குழந்தைகள் கடத்தல் சீனாவில் கொழுந்து விட்டெரியும் பிரச்சினை. சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகக் கணிப்பு. தன் நாடாளவிய வியாபாரிகளின் தொடர்புச் சங்கிலி மூலமாக அலிபாபா காவல் துறையுடன் சேர்ந்து மீட்புப் பணி செய்கிறார்கள். 2016 இல் தொடங்கிய இந்தத் திட்டம் மூலமாக இதுவரை 2,777 சிறுவர், சிறுமிகளைக் குடும்பத்தோடு சேர்த்திருக்கிறார்கள்.

Mission Million Books - இந்தியாவுக்கு ஒரு கோடிப் புத்தகம்

2016 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மும்பையில் இருக்கும் ரத்னநிதி அறக்கட்டளை மூலம் செயல்படுகிறது. இந்தியாவின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகப் பாடப் புத்தகங்கள் வழங்குவது இலக்கு. இதுவரை 2,000 கல்வி நிலையங்களில் 75,000 புத்தகங்கள் தந்திருக்கிறார்கள். அலிபாபாவின் இத்தனை மாபெரும் சமூக சேவைகளுக்குப் பல்லாயிரம் பூங்கொத்துக்கள் தரலாம். ஒரே ஒரு கேள்வி. அலிபாபாவின் மொத்தப் பங்குகளில் ஏழு சதவிகிதம் மட்டுமே ஜாக் மாவுடையது. மற்றப்படி, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் பொது நிறுவனம். இந்தப் பொதுச்சொத்தை சமூகத்துக்காக ஜாக் மா செலவழிப்பது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுதானே? தனிப்பட்ட முறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ஜாக் மா? பதில் சொல்லுங்கள்.

(குகை இன்னும் திறக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்