தொழில் நடத்த வசதியான நாடுகள் குறியீட்டில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77வது இடம் பிடித்தது.

எளிதாகத் தொழில் நடத்த வசதியான நாடுகள் பட்டியலை உலக வங்கி புதனன்று வெளியிட்டது. இதில் 100-ம் இடத்திலிருந்து இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77வது இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 190 நாடுகளில் 30 இடங்கள் முன்னேறி இந்தியா 100வது இடத்துக்கு வந்திருந்தது.  மோடி அரசு ஆட்சியமைத்தபோது 2014ம் ஆண்டு இந்தக் குறியீட்டில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது.

இதற்காக 10 அளவுகோல்கள் கையாளப்பட்டன, அதில் தொழில் தொடங்குதல், கட்டுமான அனுமதிகள் பெறுவது, மின்சாரம் பெறுவது, சொத்தைப் பதிவு செய்தல், கடன் பெறும் வசதி, சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாப்பது, வரி செலுத்துதல், எல்லைதாண்டிய வர்த்தகம், ஒப்பந்த அமலாக்கம், திவால் தீர்வு ஆகிய 10 அளவுகோல்கள் கடைபிடிக்கப்பட்டன.

இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தன் ட்விட்டரில், “6 முக்கிய குறியீடுகளில் நாம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டுள்ளோம், தெற்காசிய நாடுகளில் இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது, 2014-ல் 6ம் இடத்தில் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு ட்வீட்டில், “உலகவங்கியின் தொழில் செய்ய எளிதான நாடுகள் குறியீட்டில் இந்தியா பல படிகள் முன்னேறியிருப்பதோடு, பிரிக்ஸ் நாடுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியாதான்” என்று ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE