ஆன்லைன் ராஜா 50: சண்டையும், சமரசமும்...  

By எஸ்.எல்.வி மூர்த்தி

கூகுளின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் யாஹூ தத்தளித்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட இன்னொரு நிறுவனம் மைக்ரோசாஃப்ட்.

2005 – ம் ஆண்டில் MSN Search (Microsoft Network Search) என்னும் தேடுபொறி அறிமுகம் செய்தார்கள். பணபலம், மென்பொருள் தொழில்நுட்ப பலம் ஆகிய இரண்டும் இருந்தும், 12 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே இழுக்க முடிந்தது.

கூகுளின் பங்கு 65 சதவிகிதம். நுழையும் துறையில் எல்லாம் நம்பர் 1 ஆக இருக்க விரும்பும் பில் கேட்ஸுக்கு இது தன்மானப் பிரச்சினை. தேடுபொறியில் 30 சதவிகிதப் பங்கைக் கைகளில் வைத்திருக்கும் யாஹூவுடன் சேர்ந்தால், கூகுளுக்கு சரியான சவால்விடலாம் என்று கணக்குப் போட்டார். இதனால், யாஹூவின் சந்தை மதிப்பைவிட அதிகமான விலை

தரத் தயாராக இருந்தார். 2008 – இல் யாஹுவின் மதிப்பு 28 பில்லியன் டாலர்கள். பில் கேட்ஸ் 50 பில்லியன் டாலர்கள் தருவதாகச் சொன்னார். இதற்கு ஜெர்ரி யாங் சம்மதிக்கவில்லை. யாஹூ – மைக்ரோசாஃப்ட் பேச்சு வார்த்தைகளைக் கவலையோடும், கொஞ்சம் கலவரத்தோடும் ஜாக் கவனித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால், அலிபாபாவின் 40 சதவிகிதப் பங்குகள் யாஹூவிடம் இருந்தன. இவை பில் கேட்ஸுக்குக் கை மாறிவிடும்.

மைக்ரோசாஃப்ட் அலிபாபாவின் பெரும்பான்மைப் பங்குதாரர்கள் ஆகிவிடுவார்கள். யாஹூ நிறுவனர் ஜெர்ரி யாங், ஜாக் மாவின் நெருங்கிய நண்பர். இதனால், சிக்கலான பிரச்சினைகளை இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள முடிந்தது. ஜாக் மாவுக்கு, பில் கேட்ஸுடன் வெறும் பழக்கம் மட்டுமே.

ஆகவே, யாஹூவை மைக்ரோசாஃப்ட் வாங்கினால், அலிபாபாவைச் சுதந்திரமாகச் செயல்பட விடமாட்டார், கம்பெனியே கை நழுவிப் போய்விடலாம். ''தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா,கண்ணீரால் காத்தோம்” என்று உள்ளம் குமுறும் நிலை. இன்னொரு பிரச்சினையும் இருந்தது சீன அரசுக்கும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்குமிடையே பல உரசல்கள். தங்கள் சாஃப்ட்வேரை சீனாவில் ``திருட்டு சி.டி”க்களாக விற்பதாகவும், சீன அரசு கண்ணை மூடிக்கொண்டு இந்தக் கொள்ளையை அனுமதிப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து புகார் செய்தது. சீன அதிகாரிகள் கண்டுகொள்ளவேயில்லை.

அமெரிக்க நிறுவனம் ஏகாதிபத்திய ஆட்டம் போடுவதாகக் குற்றம் சாட்டினார்கள். இரு தரப்பிலும் தொடர்ந்து வார்த்தைப் போர்கள்.

மே 2008. மைக்ரோசாஃப்டுக்கு யாஹுவை விற்கப்போவதில்லை என்று ஜெர்ரி யாங் அறிவித்தார். ஜாக் மா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இது தற்காலிகம்தான். ஏனென்றால், இன்னொரு பெரிய புயல் மையம் கொள்ளத் தொடங்கியிருந்தது. யாஹுவின் பங்கு விலை சரியத் தொடங்கியது. தேடிவந்த பொன்னான வாய்ப்பை ஜெர்ரி யாங் வீணடித்துவிட்டார் என்று பங்குதாரர்கள் குற்றப் பத்திரிகை படிக்கத் தொடங்கினார்கள்.

நவம்பர் 17, 2008. ஜெர்ரி யாங்யாஹூவின் சி. இ. ஓ. பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். ஆட்டோடெஸ்க் (Autodesk) என்னும் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ – வாக இருந்தார், கரோல் பார்ட்ஸ் (Carol Bartz) என்னும் பெண்மணி.

அபார திறமைசாலி. 14 வருடங்கள் ஆட்டோடெஸ்க் தலைமைப்பீடத்தில் இருந்தபோது கம்பெனி விற்பனையை 300 மில்லியன் டாலர்களிலிருந்து 1,500 மில்லியன்ஆக்கினார். மகா பிடிவாதக்காரி. தான் இடும் ஆணையை ஊழியர்கள் நிறைவேற்றாவிட்டால், வார்த்தைச் சவுக்குகளால் விளாசிவிடுவார்.

ஜனவரி 2009. கரோல் யாஹூவின் புதிய சி.இ.ஓ – வாகப் பதவியேற்றார். ஜாக் மாவும், சில முக்கிய அதிகாரிகளும் புதிய தலைவரைச் சந்திக்க அமெரிக்கா வந்தார்கள். பழகும் முறையில், பேசும் விதத்தில் தானும் கரோலும் இரு துருவங்கள் என்பதைச் சில நிமிடங்களிலேயே ஜாக் மா உணர்ந்தார். அவர் தன்னைச் சந்திப்பவர் கீழ்நிலை ஊழியராக இருந்தாலும், அவரை மரியாதையாக நடத்துவார், பண்போடு பேசுவார்.

கரோல் கனியிருப்பக் காய் கவரும் வார்த்தைக்காரர். சீனாவில் யாஹூ கால் பதிக்காததற்கு அலிபாபாவின் தலைமைச் சீர்கேடே காரணம் என்று கரோல் பழித்தார். பண்பாடு கருதி ஜாக் மா வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. ஆனால், யாஹூவுடன் உறவு முறியப்போகிறது என்னும் நிஜத்தைச் சந்திக்கத் தயாராகிவிட்டார். அடுத்த சில மாதங்கள். இருவருக்குள்ளும் தொடர்பே இல்லை.

செப்டம்பர் 2009. அலிபாபாவின் பத்தாண்டுப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விமர்சையாக நடந்துகொண்டிருந்தன. வேண்டுமென்றே இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தது போல் யாஹூவின் செயல் இருந்தது. அலிபாபா ஐபிஓ வந்தபோது 100 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் வாங்கியிருந்தார்கள். இவற்றை விற்றால், அலிபாபாவிடம் சொல்லவேண்டும் என்பது மரபு.

யாஹூ இதை உடைத்தார்கள். விற்றார்கள். தன் மீது கரோலுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இதை ஜாக் மா எடுத்துக்கொண்டார். ஜனவரி 2010. தன் தேடுதலையும், செய்திகளையும் சீன அரசு தணிக்கை செய்வதைக் கூகுள் எதிர்த்தார்கள். சீனாவில் இருந்த சர்வரை ஹாங்காங்குக்கு மாற்றினார்கள். சீன அரசு கூகுளின் சேவையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை களை எடுத்தது.

இந்தச் சண்டையில் கூகுளுக்கு ஆதரவாக யாஹூ களத்தில் இறங்கினார்கள். “கம்பெனிகளின் நெட்வொர்க்கில் நுழையும் எல்லா முயற்சிகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். கூகுளின் பக்கம் நிற்கிறோம். பயன்படுத்துவோரின் தனியுரிமையில் தலையிடும் இத்தகைய நடவடிக்கைகளை எல்லா இன்டர்நெட் கம்பெனிகளும் எதிர்க்கவேண்டும்” என்று அறிக்கை விட்டார்கள்.

அலிபாபாவின் பெரும்பான்மைப் பங்குதாரரான யாஹூ தங்களைக் கலந்து ஆலோசிக்காமலே எடுத்த இந்த அரசு எதிர்ப்பு நிலைப்பாடு ஜாக் மாவைக் கலங்கச் செய்தது. அலிபாபாவின் ஊடகத் தொடர்பாளரின் விளக்கம் பறந்து வந்தது. ''யாஹூ கூகுளுக்குத் தந்திருக்கும் ஆதரவு ஆதாரங்களற்றது, பொறுப்பில்லாத செயல். யாஹூவின் கருத்து அலிபாபாவின் கருத்தல்ல.”

அடுத்து வந்தது யாஹூவின் இன்னொரு சீண்டல். இதுவரை யாஹூ சீனாவுக்கு வரும் விளம்பரங்கள் அலிபாபா மூலமாக வழிப்படுத்தப்பட்டன. யாஹூ இந்த இணைப்பைத் துண்டித்தது. அவர்களின் ஹாங்காங் அலுவலகம் சீன விளம்பரங்களைக் கையாளத் தொடங்கியது.

இப்போது ஜாக் மா செய்த ஒரு காரியம், யாஹூ – அலிபாபா உறவையும், அவருக்கு ஜெர்ரி யாங்குடன் இருந்த தனிப்பட்ட நட்பையும் கேள்விக்குறியாக்கியது. மே 2011. அம்பலமானது ஒரு ரகசியம். அலிபாபாவின் டிஜிட்டல் பேமென்ட், அலி பே (Alipay) என்னும் சேவைப்பிரிவாக இயங்கியது. இதன் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

2010 – இல், இந்தப் பிரிவை அலிபாபா, Zhejiang Alibaba e-Commerce Company என்னும் நிறுவனத்துக்கு மாற்றிவிட்டார்கள். பிரச்சினை என்னவென்றால், இந்த நிறுவனம் பொது நிறுவனமல்ல. தனியார் கம்பெனி. இதில் 80 சதவிகிதப் பங்குகள் ஜாக் மா என்னும் தனி மனிதர் கைகளில். அதாவது, பங்குதாரர்களின் சொத்து ஜாக் மா கைக்கு மாறிவிட்டது. அவர்கள் கேள்வி கேட்டபோது, ஜாக் மா தந்தவை மழுப்பல் பதில்கள் மட்டுமே. வெறும் வாயை மென்றுகொண்டிருந்த யாஹுவுக்குக் கிடைத்தது அவல்.

ஜாக் மாவிடம் முழு நம்பிக்கை வைத்திருந்த ஜெர்ரி யாங், சாஃப்ட்பேங்க் மாஸா ஆகியோருக்கும் அதிர்ச்சி. குறிப்பாக, மாஸா கோபத்தின் உச்சிக்கே போனார். அதே சமயம், அலிபாபாவுடன் முறைத்துக்கொண்டோ, முறித்துக்கொண்டோ போகவும் அவர்கள் இருவரும் தயாராக இல்லை. ஜெர்ரி யாங் அமெரிக்கக் குடிமகன். மாஸா ஜப்பானியர். ஜாக் மா மண்ணின் மைந்தர். ஆகவே, ஜாக் மாவை வெளியேற்றிவிட்டு அலிபாபாவை நடத்தச் சீன அரசு அனுமதிக்காது. எனவே, அவர்கள் அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயம்.

யாஹூவின் மதிப்பு கூகுளின் போட்டியால் நாளுக்கு நாள் இறங்கிக்கொண்டிருந்தது. அலிபாபா பொன்முட்டையிடும் வாத்து. இதன் கழுத்தையும் திருக ஜெர்ரி யாங் தயாராக இல்லை. ஆகவே, அவர் இறங்கிவந்தார். சீனாவுக்கு விசிட். பல கட்டப் பேச்சு வார்த்தைகள். ஜூலை 29, 2011. முத்தரப்பு ஒப்பந்தம். அலி பே பிரிக்கப்பட்டுத் தனி நிறுவனமாவதற்கு யாஹூ சம்மதித்தார்கள். ஒரே ஒரு நிபந்தனை – அலி பே தன் பங்குகளைச் சந்தைக்குக் கொண்டுவரும்போது யாஹூவுக்குக் குறைந்த பட்சம் 2 பில்லியன் டாலர்கள் தரவேண்டும்.

அடுத்துவந்த மாதங்களில் யாஹூவுக்குக் கடுமையான பணத்தட்டுப்பாடு. மே 2012. யாஹூவுக்கு அலிபாபாவில் இருந்த 40 சதவிகிதப் பங்குகளில் 20 சதவிகிதத்தை அலிபாபாவுக்கு விற்றார்கள். இப்போது, அலிபாபாவின் பெரும்பகுதிப் பங்குகள் ஜாக் மா, சகாக்கள் கைகளில். ஆமாம், யாஹூவுக்கு மூக்கணாங்கயிறு போட்டுவிட்டார்.

யாஹூ தங்கள் சீனச்செயல்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கினார்கள். செப்டம்பர் 2013 – இல் சீன யாஹூ முழுவதுமாக மூடியது. அலிபாபா வரலாற்றில் ஒரு சோக அத்தியாயம் முடிந்தது.

(யாஹூ பின்கதை; உலக அளவில் யாஹூ நிறுவனம் மூழ்கிக்கொண்டே வந்தது. பல சிஇஓ – க்கள் வந்தார்கள், போனார்கள். அவர்கள் கடைப்பிடித்த ஒரே வழி, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதுதான். வேறு வழியில்லாமல், ஜூன் 2017 – இல், வெரைசன் (Verizon) என்னும் அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு விற்றார்கள்.

விலை, 4.48 பில்லியன் டாலர்கள். இதில் யாஹூ, தான் ஜப்பானிலும், சீனாவில் அலிபாபாவிலும் வைத்திருந்த பங்குகளைச் சேர்க்கவில்லை. 2005 – இல், யாஹூ அலிபாபாவில் செய்த ஒரு பில்லியன் (100 கோடி) டாலர்கள் முதலீடு என்ன ஆனது? அதன் இன்றைய மதிப்பு 73 பில்லியன் (7,300 கோடி) டாலர்கள். ஆமாம், ஜெர்ரி யாங் செய்த முதலீடு சரிதானென்று ஜாக் மா நிரூபித்துவிட்டார்.)

(குகை இன்னும் திறக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்