படித்து முடித்துவிட்டு அதிக எண்ணிக்கை யிலான நபர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதேபோல தகுதி வாய்ந்த பணியாளர்கள் கிடைக்காமல் பல நிறுவனங்கள் திண்டாடுகின்றன. படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை புரிந்துகொள்ளாததுதான் இதற்கு காரணம். 2022-ம் ஆண்டு 50 கோடி இளைஞர்களை தகுதி உள்ளவர்களாக உருவாக்கும் இலக்கோடு ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி). இதன் உறுதுணையோடு செயல்பட்டுவரும் எமர்ஜ் லேர்னிங் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.கண்ணனை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அந்த உரையாடலிலிருந்து...
என்.எஸ்.டி.சி. குறித்து பேசுவதற்கு முன்பு உங்களை பற்றி சொல்லுங்கள்? எப்படி கல்வித்துறைக்கு வந்தீர்கள்?
அப்பாவுக்கு ஊட்டியில் வேலை என்பதால் ஊட்டியில் படித்தேன். சி.ஏ. முடித்துவிட்டு அங்கேயே சொந்தமாக நிறுவனம் நடத்தி வந்தேன். நான் சொந்தமாக நிறுவனம் நடத்தும் போதுதான் கணிப்பொறிகள் அறிமுகம் ஆனது. அதனால் நிறுவனங்களின் கணக்குகளை கணினிமயமாக்கும் வேலைகள் செய்தோம். அப்போது ஊட்டியிலே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தினேன். சென்னையில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனம் எங்களது ஒரு வாடிக்கையாளர். அந்த நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்தேன். அங்கிருந்து வெளியேறி, ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு நிறுவனத்தை வாங்கினேன். அதில் சிறப்பாக செயல்பட்டதால் என்.எஸ்.டி.சி.யின் கடன் கிடைத்தது. இப்போது விரிவாக்க பணிகளில் இருக்கிறோம்.
என்.எஸ்.டி.சி. குறித்து பேசுவதற்கு முன்பு இந்தியாவில் திறமையானவர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
படிப்பும் திறமையும் ஒன்று என்று நாம் தவறாக புரிந்துகொண்டதுதான். மேலும் இந்த வேலை உயர்வு, இன்னொரு தாழ்வு என்ற எண்ணமும் சேர்ந்துகொண்டது. அதனாலயே என்ன படிக்கலாம் என்று கேட்டால் இன்ஜினீயரிங், டாக்டர் என்று சொல்லி அதற்கு மட்டுமே குறிவைத்தோம். நமக்கு இன்ஜினீயரிங் சரி வருமா என்று யோசிக்காமல், வேலை கிடைக்காவிட்டாலும் கூட இன்ஜினீயரிங் படித்திருக்கிறேன் என்று சொல்வதை பெருமையாக கருதுவது மட்டுமல்லாமல் மற்ற வேலைகளை இழிவாகப் பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. சந்தையின் தேவை அதிகமாக இருக்கிறது.
எந்த அடிப்படையில் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் உங்களுக்கு நிதி வழங்கியது?
நாடு முழுக்க 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்ப ட்டிருக்கிறது. இதுவரை நாங்கள் என்ன செய்தோம் என்பதை முதலில் ஆராய்ந்தார்கள். அதன் பிறகு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்த பிறகே எங்களுக்கு நிதி கிடைத்தது. மேலும் அவர்கள் கொடுக்கும் நிதியில் குறிப்பிட்ட சதவீத தொகையை நாம் முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் நிதி கிடைக்கும்.
இதற்காக உங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன?
இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுக்க 140 மையங்களை உருவாக்க வேண்டும். நாங்கள் சேர்க்கும் மாணவர்களில் 70 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் இருக்கிறது. செயல்பாடுகள் குறையும் போது நிதி கிடைப்பது குறையும். மேலும், அவர்கள் (என்.எஸ்.டி.சி.) அனுமதி இல்லாமல் கட்டணம் வசூலிக்க முடியாது.
ஒரு பக்கம் மாணவர்களையும் சேர்க்க வேண்டும், இன்னொரு பக்கம் அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டுமே? இரண்டு பக்கமும் சவால்கள் இருக்குமே?
சவால்தான். ஆனால் இந்தத் றையில் அனுபவமும் நெட்வொர்க்கும் இருக்கும்பட்சத்தில் இதுசாத்தியம். இங்கு வரும் சில மாணவர்களுக்கு பெரிய அக்கறை இருக்காது. அதனால் அவர்களுடன் பேசி பேசி அவர்களுக்கு திறன் குறித்தும் எதிர்காலத்தை குறித்தும் புரிய வைப்போம். இதுதான் சவால். இதை புரிய வைத்த பிறகு எங்களுக்கு பெரிய வேலை இல்லை. அவர்கள் நன்றாக படித்துவிடுவார்கள்.
வேலை விஷயத்தில் எங்கள் முன்னாள் மாணவர்கள், துறையின் தேவை போன்றவை தெரியும். அதனால் மாணவர்களுக்கு வேலை வாங்கித்தரமுடியும். சில சமயம் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு, இந்த பிரிவில், இவ்வளவு ஆட்கள் தேவை என்ற சந்தையின் தேவையை பொறுத்தும் மாணவர்களை தேடி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வேலை வாங்கித்தருவோம்.
எந்தெந்த துறைகளில் நீங்கள் பயிற்சி அளிக்கிறீர்கள்?
என்.எஸ்.டி.சி. 20-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு பயிற்சி தேவை என்று தெரிவித்திருக்கிறது. நாங்கள் ஹாஸ்பிட்டாலிட்டி, ஹெல்த்கேர், வங்கி மற்றும் நிதி(பி.எப்.எஸ்.ஐ.) மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நான்கு துறைகளில் பயிற்சி கொடுக்கிறோம்.
உங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது?
உதாரணத்துக்கு ஹாஸ்பிட்டாலிட்டி துறையை எடுத்துக்கொண்டால் ஆரம்ப சம்பளம் 6,500 ரூபாய் முதல் 13,000 ரூபாய்வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
உங்களுக்கு எவ்வளவு நிதி, எவ்வளவு வட்டிக்கு வழங்கப்பட்டிருக்கிறது?
அடுத்த 10 ஆண்டுகளில் 40 கோடி ரூபாய் எங்களுக்கு கடன் கொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். 6 சதவீத வட்டியில் எங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. முதல் நான்கு ஆண்டுகளுக்கு வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
உங்கள் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் என்.எஸ்.டி.சி. உறுப்பினர்கள் இருக்கிறார்களா?
இல்லை. என்.எஸ்.டி.சி. எங்களுக்கு கடன் கொடுத்திருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவில்லை. ஆனால் என்.எஸ்.டி.சி. விரும்பினால் எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அவர்கள் இணையலாம்.
உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது என்.எஸ்.டி.சி. ஆனால் அதிக விதிமுறைகள் இருப்பது உங்களுக்கு நெருக்கடியாக இல்லையா?
அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. மேலும், நாம் சரியாக செய்யும் பட்சத்தில் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை. நம்முடைய தினசரி வேலைகளில் அவர்கள் தலையிடப்போவதில்லை. இதன்மூலம் நிறுவனம் பெரியதாக வளர்வதற்குதான் வாய்ப்பு இருக்கிறது. இதைவிட மாணவர்களை பயிற்சிக்கு கொண்டுவருவதுதான் சவால்.
வாசு கார்த்தி,தொடர்புக்கு karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago