விட்தானும், சகாக்களும் கைது செய்யப்பட்டவுடன், ஜாக் மா என்ன செய்தார்?
"குற்றமென்ன செய்தேன் கொற்றவனே? கொள்ளையடித்தேனா, கொலை செய்தேனா? ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தி ஊரார் பணத்தில் வாணவேடிக்கை நடத்தினேனா? வங்கிப் பணத்தை வாராக்கடனாக்கித் தலைமறைவானேனா?” என்றெல்லாம் டயலாக் விடவில்லை. ஏனென்றால், அவர் தங்கமான மனிதர். கொஞ்சம் காமெடி பண்ணுகிற ஹீரோ. வில்லத்தனத்துக்கும், அவருக்கும் அதிக தூரம்.
பின் ஏன் சீன அரசு ஜாக் மாவையும், அவருடைய ஆறு சகாக்களையும் வீட்டுக் கைதிகளாக்கினார்கள்? அவர்கள் குற்றவாளிகள் என்னும் நிரூபணத்தால் அல்ல, நோயாளிகளோ என்னும் சந்தேகத்தால். இது என்ன ஸ்க்ரிப்டில் திடீர் ட்விஸ்ட்?
சின்ன ஃப்ளாஷ்பேக்.
நவம்பர் 2002.
க்வாங்ஜோ நகரத்தில் பலருக்கு உடல்வலி, தொண்டைவலி, இருமல் ஆகிய பிரச்சினைகள். பருவநிலை மாற்றத்தால் வரும் பாதிப்பு என்று நினைத்தார்கள். கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிட்டார்கள். பலனில்லை. மூச்சுத் திணறல் வந்தது. ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். டாக்டர்களின் தீர்ப்பு, “இது சாதா ஜூரமல்ல. ஸார்ஸ் (SARS) என்னும் தொற்றுநோய்.” ( Severe Acute Respiratory Syndrome என்பதன் சுருக்கம்) நோயாளிகள் இருமும்போது அருகில் நின்றால், அவர்களைத் தொட்டால், ஏன், அவர்களோடு வெறுமே கை குலுக்கினால், பரவும் நோய்.
சில வாரங்களில், நோய் சீனாவின் பிற பாகங்களுக்கும் பரவத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில். SARS கொடிய தொற்றுநோய். இதன் வீரியமும், விபரீதமும் புரியாமல் சீன அரசு நடந்துகொள்கிறது என்று உலக ஊடகங்கள் அறிவித்தன. அடுத்த ஆறு மாதங்களில் எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டார்கள்.
700 – க்கும் அதிகமானோர் மரணம். உண்மையைச் சொன்னால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அரசாங்கம் பயந்தது. ஒன்றுமே நடக்காததுபோல் நோய் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தது. அயல்நாடுகளில் செய்திகள் வருவதைத் தடை செய்தது. இதனால், ஜாக் மாவும் அவர் சகாக்களும் SARS - இன் கொடூரத்தைப் புரிந்துகொள்ளவில்லை.
இதனால்தான், க்வாங்ஜோ கண்காட்சிக்குப் போனார்கள். எல்லா ஆண்டுகளையும்விட, அயல்நாட்டுக் கஸ்டமர்களின் வரத்து மிகக் குறைவு. வந்தவர்களும், அலிபாபா ஊழியர்களுக்கு SARS ஒரு உயிர்க்கொல்லி என்பதை விளக்கினார்கள். அதற்குள், ஜாக் மாவும் பல நூறு பேரோடு கை குலுக்கல். குறிப்பாக, மார்க்கெட்டிங் அதிகாரி கிட்டி ஸாங் பல்லாயிரம் பேரோடு கை குலுக்கினார், பேசினார், டீ சாப்பிட்டார்.
கண்காட்சி முடிந்தது, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் சீனாவில் SARS நோயின் பாதிப்பு பற்றிப் பேட்டிகள் கொடுத்தார்கள். இனியும் உண்மையை மறைத்தால், போர்க்கால நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கானோர் பலியாவார்கள் என்று சீன அரசு புரிந்துகொண்டது.
குவாரண்டின் (Quarantine) என்னும் தற்காப்பு நடவடிக்கை எடுத்தார்கள். இதன்படி, நோய் பரவியிருக்கும் இடத்துக்குப் போனவர்கள், அங்கிருப்போரோடு தொடர்பு கொண்டவர்களை அவர்கள் வீட்டில் சிறை வைத்துவிடுவார்கள். சுமார் பத்து நாட்களுக்கு அவர்கள் உடல்நிலையைக் கண்காணிப்பார்கள். நோயின் அறிகுறிகள் தெரிந்தால், அரசு மருத்துவமனைகளில் சேர்ப்பார்கள், சிகிச்சை தருவார்கள்.
நோயின் அறிகுறிகள் இல்லாவிட்டால், மறுபடியும் சகஜ வாழ்க்கைக்கு அனுமதி தருவார்கள், ஜாக் மாவும், ஆறு சக ஊழியர்களும் SARS தீவிரமாக இருந்த க்வாங்ஜோ மாநிலத்துக்குப் போய் வந்ததால்தான், அரசாங்கம் அவர்களைத் தனிமைச் சிறையில் அடைத்தது. ஆகவே, இது கைது அல்ல, Quarantine.
அடுத்த சில நாட்கள். ஹாங்ஸெள நகரத்தில் இருந்த அத்தனை ஊழியர்களும் வீட்டுச் சிறையில். அலிபாபாவின் பிசினஸ் சீட்டுக்கட்டு மாளிகையாகச் சிதறிவிடுமோ என்று எல்லோரும் பயந்தார்கள். ஆனால், இந்த அக்னிப் பரீட்சையில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு பிரமிக்கவைத்தது. தம் வீடுகளில் இருந்தபடியே, எப்போதும்போல் கடும் உழைப்பு. கஸ்டமர்கள் மத்தியிலும், உலக அரங்கிலும், புதிய பார்வையோடு அலிபாபாவைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
பத்து நாட்கள் ஓடின. கிட்டி ஸாங் மட்டும் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில் உடல்நலம் தேறினார். மற்ற அத்தனை பேரும் "விடுதலை”யானார்கள்.
SARS, சீன ஆன்லைன் கம்பெனிகளுக்கு ஒரு எதிர்பாராத அனுகூலம் தந்தது. நோய் பயத்தால், வெளியே போய்க் கடைகளில் சாமான்கள் வாங்க மக்கள் பயந்தார்கள். ஒரே வழி, ஆன்லைனில் வாங்குவதுதான். வாங்கினார்கள். இத்தனை எளிமையாக இருக்கிறதே என்று வியந்தார்கள். லட்சக்கணக்கானோர் ஆன்லைனுக்கு மாறினார்கள். நோயின் கொடூரம் குறைந்தபிறகும் தொடர்ந்தார்கள்.
மொத்தத்தில் SARS அலிபாபாவுக்கு தற்காலிகச் சாபம், நெடுங்கால வரம். அலிபாபாவின் உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். இந்த நிம்மதியை ஒரு நாள் ஜாக் மா கெடுத்தார். உயர் அதிகாரிகளிடம் வந்தார். “இரண்டு வாரங்களுக்கு முன்னால் சீனாவில் புதிதாக ஒரு ஆன்லைன் கம்பெனி தொடங்கியிருக்கிறார்கள்”
அனைவருக்கும் பயம்.
“நமக்குப் புதிய போட்டியா?”
”தெரியவில்லை. பார்க்கலாம்.”
ஜாக் மா அருகிலிருந்த கம்ப்யூட்டரிடம் போனார். விளம்பர உயர் அதிகாரி போர்ட்டர் எரிஸ்மேனை அருகில் அழைத்தார்.
“போர்ட்டர், Taobao.com என்று டைப் செய்யுங்கள்.”
செய்தார். அட்டகாசமாக இணையதளம் திறந்தது. ஒருபுறம் பார்த்தால், சீன மண்ணின் பாரம்பரியம்; மறுபுறம் பார்த்தால், ஈ பேயின் நவீனத் தொழில்நுட்பம். அப்படி ஒரு அற்புதக் கலவை. அத்தனை பேரும் பிரமிப்பில்.
“ஜாக் மா, ஈ பேயைவிட, இந்த கம்பெனியைப் பார்த்துத்தான் நாம் அதிகம் பயப்படவேண்டும். சீனாவுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் கம்பெனி இது.”
ஜாக் மாவின் பதில் குறும்புச் சிரிப்பு.
“இப்போதும் சிரிப்புத்தானா?”
“நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள்.”
“டாபா.காம் நமக்குப் போட்டியல்ல. தோழன். இது நம் கம்பெனி, அலிபாபாவின் கம்பெனி.”
"என்ன?”
அனைவர் விழிகளும் விரிந்தன.
ஜாக் மா சொன்னார்.
“C2C பிசினஸில் இன்று இருக்கும் ஈ பே, நாளைக்கே, நம் B2B பிசினஸுக்கு வரலாம். அப்போது நாம் தொலைந்தோம். அலிபாபா C2C பிசினஸில் நுழைந்தால்……இதை எதிர்பாராத ஈ பே கதிகலங்கிவிடும் என்று கணக்குப் போட்டேன். இந்த வாதத்தை நீங்கள் யாரும் ஏற்கவில்லை. ஆகவே, நானாகவே ஒரு வேலை செய்தேன்.”
"அப்படி என்ன செய்தீர்கள்?”
ஜாக் மா விளக்கினார்.
தான் எதையாவது உறுதியாக நம்பினால், உலகமே எதிர்த்து நின்றாலும், ஜாக் மா தயங்கமாட்டார். இப்போதும், அப்படித்தான். சகாக்கள் சம்மதிக்காவிட்டாலும், செயலில் இறங்கினார். தனக்கு மிக நம்பிக்கையான ஆறு அலிபாபா ஊழியர்களை அழைத்தார்.
“உங்களுக்கு ஒரு ரகசிய புராஜெக்ட் வைத்திருக்கிறேன். அது ஒரு பிரம்மாண்ட புராஜெக்ட்.”
பாழும் கிணற்றில் ஜாக் மா குதிக்கச் சொன்னாலும், கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல் கேட்கும் கூட்டம் அவர்கள்.
`என்ன செய்யவேண்டும் ஜாக் மா?’
“முதலில் நீங்கள் அனைவரும் அலிபாபாவிலிருந்து உங்கள் வேலையை ராஜிநாமா செய்யவேண்டும். நம் அலுவலகம் பக்கமே வரக்கூடாது. ஒதுக்குப்புறமான ஒரு புது இடத்தில் உங்களுக்கு வேலை. அலிபாபா ஊழியர்கள் ஒருவரையும் சந்திக்கக்கூடாது.
எங்காவது தற்செயலாகப் பார்த்தாலும், அவர்கள் பார்வையிலிருந்து ஓடிவிடவேண்டும். இந்த புராஜெக்டில் சேருவதும் சேராததும் முழுக்க முழுக்க உங்கள் முடிவு. வேண்டாமென்றால், நீங்கள் இப்போதைய பதவியிலேயே தொடரலாம். ஒரு நிமிடம் தருகிறேன். யோசித்துப் பதில் சொல்லுங்கள்.”
ஆறு பேரும் உடனேயே சம்மதித்தார்கள்.
ரகசிய புராஜெக்ட் ஸ்டார்ட்.
SARS நோய் ரகசியம் காக்க உதவியது. நோயின் காரணத்தால், அலிபாபா ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து வேலை செய்தார்கள். ஆகவே, இந்த ஆறு பேரும் மறைவாக இருந்தது யாருக்கும் தெரியவேயில்லை.
அந்த ரகசிய புராஜெக்ட் தான் Taobao.com. Taobao என்னும் சீன வார்த்தைக்கு “புதையலைத் தேடுவது” என்று அர்த்தம்.
“டாபோவின் குறிக்கோள் என்ன ஜாக் மா?”
“நாம் ஈ பே – யுடன் போர் தொடங்கப்போகிறோம். அந்தப் பாதையில் டாபா இணையதளம், நாம் எடுத்துவைக்கும் முதல் அடி. அலிபாபாவின் யுக்திகளில் மிகவும் புத்திசாலித்தனமானது இதுதான் என்று மூன்றே வருடங்களில் உலகம் பேசும்.”
தம் காதுகளில் விழுவது கனவா நிஜமா என்று சுற்றியிருந்தோருக்குப் புரியவில்லை. அலிபாபா, முதன் முறையாக லாபம் பார்த்திருக்கும் நான்கு வயதுக் குழந்தை. ஈ பே, பணபலம், ஆள்பலம், தொழில்நுட்ப பலம் அத்தனையும் கொண்ட ஆன்லைன் உலக ராட்சசன். அவர்களுக்கு, ஸ்பெயின் நாட்டின் டான் க்விக்சாட் (Don Quixote) என்னும் பிரபலக் கதை நினைவுக்கு வந்தது.
மிகேல் டி செர்வான்ட்டிஸ் (Miguel de Cervantes) என்னும் எழுத்தாளரின் படைப்பு. 1605 – இல் முதன் முதலாக ஸ்பானிஷ் மொழியில் வெளியானது. 145 மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. 50 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை. டான் க்விக்சாட் என்னும் பிரபு வீரதீரக் கதைகள் படிப்பார். தானும் அதிசூரனென்று கற்பனை. முட்டாள்தனமாக, தன்னைவிட அதிக பலம் கொண்டவர்களோடு மோதுவார். தோற்பார். இதனால், ஆங்கிலத்தில், Quixotic என்னும் சொற்றொடரே உண்டு. நடைமுறைக்கு ஒத்துவராத கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்கள் என்று அர்த்தம்.
சகாக்கள் மனங்களில் கேள்வி - ஜாக் மா டான் க்விக்சாட் – ஆ அல்லது தீர்க்கதரிசியா?
(குகை இன்னும் திறக்கும்)
- slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago