வீடு கட்டக் கடன் ரூ. 1.6 லட்சம் கோடி: தேசிய வீட்டு வசதி வங்கி தலைவர் ஆர்.வி. வர்மா

கடந்த நிதி ஆண்டில் (2013-14) வீட்டுக் கடனாக பெறப்பட்ட தொகை ரூ. 1.60 லட்சம் கோடி. இதுவரை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வீடு கட்ட பெறப்பட்ட தொகை ரூ. 9.6 லட்சம் கோடி என தேசிய வீட்டு வசதி வங்கியின் தலைவர் ஆர்.வி. வர்மா தெரிவித்தார்.

வீட்டுக் கடன் துறை 19 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இணைந்து இத்தகைய வளர்ச்சியை எட்டியதாகக் குறிப்பிட்டார். வரும் நிதி ஆண்டிலும் வீட்டுக் கடன் துறை வளர்ச்சி இதே அளவுக்கு இருக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

வீடு கட்ட வழங்கப்பட்ட கடன் தொகையில் இதுவரை வர வேண்டிய பாக்கி 2013 மார்ச் 31 நிலவரப்படி ரூ. 8 லட்சம் கோடி என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஓராண்டில் அதாவது 2014-ல் ரூ. 1.60 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வீடு கட்ட கடன் வழங்குவதில் வங்கிகள் 66 சதவீத சந்தையைப் பிடித்துள்ளன. இது தவிர வீட்டுக் கடன் மட்டுமே வழங்கும் ஹெச்டிஎப்சி மற்றும் டிஹெச்எப்எல் போன்ற நிறுவனங்கள் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளன. இது தவிர கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்ள் உள்ளிட்ட பிற வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் சொற்ப அளவில் வீட்டுக் கடன் வழங்கியுள்ளன.

கடந்த ஆண்டில் சராசரியாக வீட்டுக் கடனாக ரூ. 18 லட்சமாக இருந்தது. வீட்டு வசதி கடன் அளிக்கும் நிறுவனங்கள் சராசரியாக ரூ. 16 லட்சம் அளித்துள்ளன. வங்கிகள் ரூ. 12 லட்சம் முதல் அளித்துள்ளன. வீட்டுக் கடன் வழங்கியது அதிகரித்துள்ளபோதிலும், கடனை திரும்ப செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதிப்பீடு

வீட்டு வசதித் திட்டப் பணிகளுக்கு மதிப்பீடு (ரேட்டிங்ஸ்) வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக வர்மா தெரிவித்தார். தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் இந்திய வங்கியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த மதிப்பீடு அளிக்க முடிவு செய்துள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மதிப்பீடு அனைத்து திட்டப் பணிகளுக்கும் கட்டாயமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்று முதல் 7 மதிப்பெண் வரையில் இந்த மதி்ப்பீடு இருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் திட்டப்பணியின் வேகத்தைக் கணக்கிட்டு வீடுகளை வாங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த மதிப்பீட்டில் குறிப்பிட்ட திட்டப் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் அதற்கான வங்கிக் கடன், நிலத்தில் உள்ள வில்லங்கம், நிறுவனத்தின் முந்தைய செயல்பாடு ஆகிய அனைத்தும் இடம்பெறும்.

சலுகைக் காலம் நீட்டிப்பு

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த ஆண்டு அறிவித்த சலுகையை கால வரையறையின்றி நீட்டித்துள்ளது. முதல் முறையாக வீட்டுக் கடன் பெறுவோருக்கு வட்டியில் 0.4 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும், பெண்களுக்கு 0.05 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த சலுகை மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்திருந்தது. இப்போது இந்த சலுகைகால வரையறையின்றி நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE