ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: அரசியல் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா?

By நீரை மகேந்திரன்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டு வருகிறது. இந்த விலைச் சரிவு மேலும் தொடரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும் ரூ.1.08 அளவுக்கு சரிவு இருந்தது. இந்த சரிவு இன்று (செவ்வாய்கிழமை) 70.080 வரை சென்றுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிந்தால் இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக ரூபாய் அளிக்க வேண்டும். நேற்று வரை 60 ரூபாய்க்கு வாங்கிய பொருளுக்கு இன்று 70 ரூபாய் அளிக்க வேண்டும் என்பது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் நெருக்கடியாக உருவாகியுள்ளது

துருக்கி நெருக்கடி

இந்திய ரூபாயின் விலைச் சரிவுக்கு முக்கியக் காரணமாக துருக்கியின் பொருளாதாரச் சரிவு பார்க்கப்படுகிறது. குறிப்பாக அந்நாட்டு நாணயமான லிரா மதிப்பிழந்ததன் காரணமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினைக் கண்டுள்ளன.

துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் அமெரிக்காவுக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என குற்றச்சாட்டினை முன்வைத்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் துருக்கியின் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் துருக்கியின் பணமதிப்பும் குறைந்துள்ளது. இது உலக நாடுகளின் நாணயத்திலும், இந்திய ரூபாய் மதிப்பிலும் எதிரொலித்துள்ளது.

தவிர ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் பொருளாதாரத் தடையும் நாணய மதிப்பில் தாக்கம் செலுத்துகிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிடலாம். குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவும் நாம் அளிக்க வேண்டிய அந்நிய செலாவணியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.

முதலீட்டாளர்கள் அச்சம்

இந்திய பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். மேலும் சர்வதேச அளவில் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தவிர ஜப்பானிய யென்னிலும் முதலீடு அதிகரித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு ரூபாய் மதிப்பின் ஸ்திரத் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்ந்தாலும் இந்திய கரன்சியில் பாதிப்பு ஏற்பட்ட அளவு சீன நாணயத்தில் பாதிப்பு நிகழவில்லை. இதற்கு காரணம் சீனா தனது டாலர் கையிருப்பை அதிகமாக வைத்துள்ளது. 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாத நிலவரப்படி சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 3,9,150 கோடி டாலராகும். இது ஜூலை மாதத்தில் இருந்ததை விட 1080 கோடி டாலர் அதிகம். இந்த எண்ணிக்கை தொடர்ந்து 7 மாதங்களாக அதிகரித்து வருகிறது என்று சீன மக்கள் வங்கி தெரிவிக்கிறது.

அதேநேரத்தில் இந்தியாவில் ஏப்ரல் மாத அந்நிய செலாவணி கையிருப்பு 42,600 கோடி டாலர்தான். இது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 40,400 கோடி பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. 2017 செப்டம்பருக்குப் பின்னர் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 40,000 கோடி டாலருக்கும் குறைவாக சரியும் நிலைக்குச் சென்றுள்ளது.

அரசின் நடவடிக்கை என்ன?

2018-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 8 சதவீதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. அதேநேரத்தில் அந்நிய முதலீடுகள் வெளியேறும் பட்சத்தில் சரிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரித்தால் மட்டுமே ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த முடியும். தற்போதைய சூழ்நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 80 ரூபாய்வரை அச்சப்படத் தேவையில்லை என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாய் மதிப்பு சரிவால் சர்வதேச கொடுக்கல் வாங்கலில் உடனடியான தாக்கம் இருக்கும். நிலைமை கைமீறிப் போகாது என அலட்சியமாக இருந்தால் உள்நாட்டு பரிவர்த்தனைகளில் மிகப் பெரிய அழுத்தம் உருவாகும். அப்படியான சூழலில் மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அது அரசியல் மாற்றங்களுக்கும் வழி வகுக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்