1995, 1996 காலகட்டத்தில் ஜப்பானில் கிளை தொடங்க யாஹூ முடிவெடுத்தார்கள். உள்ளூர் பங்குதாரர் 51 சதவிகித உரிமையாளராக இருக்கவேண்டும் என்பது ஜப்பானின் சட்டம். இதன்படி, கை கோர்த்தார் ஜப்பானின் குபேரர், ஸாஃப்ட் பேங்க் சொந்தக்காரர், மாஸயூஷி ஸன். நாம் ஜாக் மாவோடு முன்னாடியே சந்தித்திருக்கிறோமே, அதே மாஸா தான். இருவரும் சேர்ந்து ஜனவரி 1996 இல் யாஹூ ஜப்பான் தொடங்கினார்கள். முதலில் யாஹூ மெயிலும், தேடுபொறியும்தான். பிரமாதமான வரவேற்பு. சேவைகளை எப்படி விரிவுபடுத்தலாம் என்று யாஹூவும், ஸாஃப்ட் பேங்கும் பல்வேறு கோணங்களில் தீவிர ஆலோசனை.
1999. ஈ பே ஜப்பானில் நுழையலாம் என்று வதந்திகள் கசியத் தொடங்கின. மாஸா எப்போதுமே நம்பர் 2 - ஆக இருப்பதை வெறுப்பவர். ஈ பே வரும் முன் யாஹூ ஏல வியாபாரம் ஆரம்பிக்கவேண்டும் என்று சொன்னார். யாஹூ உயர் அதிகாரிகள் தயங்கினார்கள். அமெரிக்காவின் ஏல பாணி பிசினஸ், பழைய பொருட்கள் வாங்கத் தயங்கும் ஜப்பானின் பாரம்பரியப் பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப்போகுமா என்பது அவர்கள் கவலை. நியாயமான கவலை. ஆனால், மாஸா வற்புறுத்தலால், யாஹூ முதலாளி ஜெர்ரி யாங் சம்மதித்தார்.
இதே சமயம், ஈ பே- க்கு எதிர்பாராத பல பிரச்சினைகள். ஜூன் முதல் வாரம். அவர் களின் இணையதளம் செயலிழந்தது. வாடிக் கையாளர்கள் பதறினார்கள். ஆனால், சில நிமிடங்களிலேயே ஈ பே இன்ஜினியர்கள் பழுது நீக்கிவிட்டார்கள். ஜுன் 10, 1999. விட்மான் தலையில் இறங்கியது பெரிய இடி. ஈ பே இணையதளம் மறுபடியும் செயலிழந்தது. இதை ஆங்கிலத்தில் கம்ப்யூட்டர் சீற்றம் (Computer Outrage) என்று சொல்வார்கள். இணையத்தின் உச்சகட்ட நெருக்கடி நிலை.
ஈ பே பொறியியல் வல்லுநர்களின் முயற்சிகள் அமாவாசை இருட்டில் கறுப்புப் பூனையைத் தேடின. இணையத்துக்கான மென்பொருளை சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் (Sun Microsystems) என்னும் சாஃப்ட்வேர் கம்பெனியில் வாங்கியிருந்தார்கள். அவர்களையும் விட்மான் களத்தில் இறக்கினார். 50 வல்லுநர்கள் கூட்டு உழைப்பு. இணையத்தைப் பழுதுநீக்கி மறுபடி இயங்கவைக்க 22 மணிநேரப் போராட்டம்.
ஈ பே நஷ்டம் 5 மில்லியன் டாலர்கள் என்று தோராயக் கணக்கு. நஷ்டத்தை டாலர்களில் மட்டுமே பார்ப்பது முட்டாள்தனம் என்பது அதி புத்திசாலி விட்மானுக்குத் தெரியும். ஆன்லைன் பிசினஸின் அடிப்படையே, கம்பெனியின் நேர்மை, தொழில்நுட்பத் திறமை ஆகியவற்றில் கஸ்டமர்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான். இது தகர்ந்துவிட்டது. தீப்பிடித்து எரிந்த வீட்டைச் சீராக்கும் பணியில் அவர் கவனம் திரும்பியது. உலக சாம்ராஜ்ஜியம் அமைக்கும் ஆசைகளைப் புறம் தள்ளினார்.
பிசினஸ் ஒரு யுத்தம். எதிரிக்கு நெருக்கடி வரும்போது ஈவு இரக்கம் பார்க்கக்கூடாது. அப்போதுதான் போட்டுத் தாக்கவேண்டும். ஈ பே சுதாரித்துக்கொண்டு வரும் முன் ஜப்பானின் ஆன்லைன் பிசினஸில் கால்களை ஊன்றும் முயற்சிகளை யாஹூ வேகமாக்கினார்கள். நவம்பர் 1999. யாஹூ ஜப்பானின் ஆன்லைன் விற்பனை ஸ்டார்ட். ஏமாற்றத்தில் விட்மான்.
பிப்ரவரி 2000. யாஹூ வந்த ஐந்தாம் மாதம் ஈ பே ஜப்பான் தன் செயல்பாட்டைத் தொடங்கியது. ஐந்து மாதங்கள் என்பது வரலாற்றில் சிறு துளி. ஆனால், பிசினஸில், மாற்றம் தரும் மாமாங்கம். இந்தக் காலத்தில் இன்டர்நெட் பயன்படுத்தும் ஜப்பானியர்கள் எல்லோருமே யாஹூவுக்கு மாறிவிட்டார்கள். இவர்களைத் தன் வசம் இழுக்க, லேட்டாக வந்தாலும் ஈ பே லேட்டஸ்ட்டாக வரவேண்டாமோ? இல்லை. மார்க்கெட்டிங்கின் அடிப்படை விதி கடைப்பிடிக்கும் யுக்திகள் கஸ்டமர்களின் பழக்க வழக்கங்களோடு ஒத்துப்போகவேண்டும், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டும். ஈ பே இதில் கோட்டை விட்டார்கள். அமெரிக்காவில் கடைப்பிடித்து வெற்றி கண்ட யுக்திகளைக் கண்மூடித்தனமாக அப்படியே ஈயடிச்சான் காப்பி.
1. ஜப்பானில் யாஹூ மாத அங்கத்தினர் கட்டணம் வசூலித்தார்கள். ஈ பே, அமெரிக்காவைப் போல் விற்பனையில் கமிஷன் வாங்கினார்கள். தொடர்ந்து வாங்கும் கஸ்டமர்களுக்கும், அதிக விலையுள்ள பொருட்களை விற்போருக்கும், கமிஷன் முறையில் செலவு அதிகமாக இருந்தது.
2. எல்லா வியாபாரிகளும் பதிவு செய்து கொள்ளும்போது கிரெடிட் கார்ட் விவரங்கள் தர வேண்டு என்பது ஈ பே நிபந்தனை. அமெரிக்காவில் எல்லோரிடமும் கிரெடிட் கார்ட் உண்டு. ஆகவே, இது சாத்தியம். ஜப்பானில் கிரெடிட் கார்ட் பரவலாக இல்லை. இருப்போரும் அந்த விவரங்களை முகம் தெரியாத ஆன்லைன் கம்பெனியுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை. பொருள் கிடைக்கும்போது காசு தரும் Cash on Delivery முறைதான் புழக்கத்தில் இருந்தது.
3. ஜப்பானில் விளம்பரத்தின் வீச்சு அதிகம். இதைப் புரிந்துகொண்ட யாஹூ தூள் கிளப்பினார்கள். நாட்டின் முக்கிய இடங்களிலெல்லாம் விளம்பரப் பலகைகள். விமானங்களின் வெளிப்புறங்களில் யாஹூ சின்னம் (Logo). ஊரெல்லாம் யாஹூ என்று பேச்சு. ஈ பே வந்ததே தெரியாமல் அடிபட்டுப் போச்சு.
4. யாஹூவில் கிடைத்த பொருட்களின் எண்ணிக்கை 35 லட்சம். ஈ பே வெறும் 25,000.
5. யாஹுவில் வியாபாரம் தாண்டி, வியாபாரிகள் அல்லாத சாமானியர்களையும் ஈர்க்கும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. ஜப்பானியர்கள் ஜோசியத்தில் நம் பிக்கை கொண்டவர்கள். இதனால், ``இன்று நாள் எப்படி?” என்னும் ராசிபலன் வெளியானது. அத்தோடு புதிய தயாரிப்புப் பொருட்கள் பற்றிய மதிப்பீடு, யாஹூ பற்றிய செய்திகள். பொழுதுபோக்குக்காகவே முதலில் வந்தவர்கள் கஸ்டமர்கள் ஆனார்கள். ஈ பே இல் இவை எதுவுமே இல்லை.
6. விட்மான் செய்த இன்னொரு முக்கிய தவறு, ஜப்பான் சி.இ.ஓ. தேர்வு. மெர்லே ஒகவாரா (Merle Okawara) என்னும் பெண்மணி ஜப்பானின் ஜே.சி.ஃபுட்ஸ் கம்பெனியின் சேர்மேனாக இருந்தார். ஜப்பானில் பிட்சாவை பிரபலமாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். அபார நிர்வாகத் திறமை. எல்லாம் சரிதான். ஆனால் ஈ பே போன்ற கம்பெனிக்குப் பொருத்தமானவரில்லை. வயது 60. இன்டர்நெட் பற்றி எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லை. ஜெயிக்கும் வெறியும் மழுங்கியிருந்தது.
ஒட்டுமொத்தப் பலன், 2001 இல் ஜப்பானின் ஆன்லைன் வர்த்தகத்தில் யாஹூவின் பங்கு 95 சதவிகிதம். ஈ பே மூன்றே மூன்று சதவிகிதம்.
ஜப்பான் என்பது ஆங்கிலப் பெயர். ஜப்பானிய மொழியில் நிஹான் அல்லது நிப்பான் என்று சொல்வார்கள். சூரியன் உதிக்கும் நாடு என்று அர்த்தம். விட்மானைப் பொறுத்தவரை, அவர் புகழ் அஸ்தமிக்கும் தேசமாகிவிட்டது அமெரிக்காவில் அவர் சாதித்தது குருட்டு அதிர்ஷ்டம், ஜப்பானில் அவர் சாயம் வெளுத்துவிட்டது என விமர்சனங்கள். விட்மானுக்கு இது மரண அடி. நொறுங்கிப்போனார்.
விட்மான் அடிபட்ட புலி. இழந்த புகழை மீட்கவேண்டும். எங்கே, எங்கே, எங்கே போகலாம் என்று மனம் அலை பாய்ந்தது. அவர் தேர்ந்தெடுத்த களம் சீனா. அங்கே யாஹூ இன்னும் வரவில்லை. அலிபாபா, சீனா.காம். குளோபல்சோர்ஸஸ்.காம், நெட் ஈஸ்.காம், டாம்.காம், ஈச்நெட்.காம் ஆகிய சீனக் கம்பெனிகள் எல்லோருமே ஈ பே - உடன் ஒப்பிடும்போது துக்குனூண்டுக் கம்பெனிகள். அவர்கள் எல்லோரையும் சில மாதங்களில் நசுக்கிவிடலாம்.
அலிபாபா வியாபாரிகள் தமக்குள் பரிவர்த்தனை நடத்தும் B2B (Business to Business) நடத்தினார்கள். ஈ பே- யின் பாணி, கஸ்டமர்கள் தமக்குள் நடத்தும் C2C (Customer to Customer). அலிபாபாவுக்கும், ஈ பே-க்கும் நேரடி மோதல் கிடையாது. ஆனால், விட்மானுக்கு மாஸா மகராஜனைக் கண்டு பயம். ஈ மெயில், தேடுபொறியில் தொடங்கி, திடீரென ஆன்லைன் வியாபாரத்துக்கு யாஹூவை இறக்கித் தன்னைத் தோற்கடித்தவர். அலிபாபாவில் 20 மில்லியன் முதலீடு செய்திருக்கிறார். ஜாக் மாவும் விசித்திரமான மனிதர். B2B இல் இருக்கும் அலிபாபாவை இவர்கள் நிச்சயம் C2C - க்குக் கொண்டு வருவார்கள். அவர்களை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். அலிபாபாவை ஒழிக்கவேண்டும். இது, ஜப்பானில் தன்னை மண்ணைக் கவ்வ வைத்த மாஸாவுக்குத் தரும் பதிலடி. விட்மான் முடிவு செய்துவிட்டார் சீனாவில் எப்படியாவது ஜெயித்தேயாக வேண்டும். இது பிசினஸ் போட்டி மட்டுமல்ல, ஈ பேயின் வெற்றி தோல்வி மட்டுமல்ல, தனக்கும், மாஸாவுக்கும் நடக்கும் நிழல் யுத்தம், தன்மானப் பிரச்சினை. மனதுக்குள் சபதம், ``சீனாவே, இதோ வருகிறேன். தூரத்தில் கேட்கிறதே ஒரு மணியோசை, அது அலிபாபாவுக்கும், மற்றவர்களுக்கும் நான் அடிக்கும் சாவுமணி.”
(குகை இன்னும் திறக்கும்)
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago