இ
ப்போது அனைத்துமே பேக்கேஜ் என்றாகிவிட்டது சுற்றுலாவை எடுத்துக்கொண்டாலும் மொத்தமாக பேக்கேஜ் அடிப்படையிலே செயல்படுகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட வழியிலே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் சென்னையை சேர்ந்த பிக் யுவர் டிரெய்ல் நிறுவனம் உங்களுடைய பயண திட்டத்தை நீங்களே வடிவமைத்துக் கொள்வதற்கு வழி ஏற்படுத்தி இருக்கிறது. பிக் யுவர் டிரெய்ல் நிறுவனத்தின் நிறுவனர் ஹரி கணபதியை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்து. சுற்றுலா குறித்தும், நிறுவனம் தொடங்கிய விதம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவை உங்களுக்காக...
ஐஐஎம்-ல் படித்திருந்தாலும்கூட தொழில்முனைவு குறித்து பெரிய யோசனை இல்லை. எப்எம்சிஜி நிறுவனத்தில் முக்கிய பொறுப்புக்கு வர வேண்டும் என்னும் திட்டம் மட்டுமே இருந்தது. எப்எம்சிஜி நிறுவனத்தில் இருந்ததால் இந்தியாவில் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். நானும் என்னுடைய நண்பர் ஸ்ரீநாத் சங்கரும் (பிக் யுவர் டிரெய்ல் நிறுவனத்தின் இணை நிறுவனர்) ஒருமுறை ஐரோப்பாவுக்கு சென்றோம். பேக்கேஜ் அடிப்படையில் செல்லாமல் நாங்களே திட்டமிட்டு, எங்கள் விருப்பப்படி சென்றோம். இது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்த அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். இந்த விவாதத்தின் விளைவாகதான் பிக் யுவர் டிரெய்ல் நிறுவனத்தை தொடங்கினோம். நானும் ஸ்ரீகாந்தும் இணைந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றிருக்கிறோம்.
பேக்கேஜ் அடிப்படையில் சுற்றுலா செல்லும் போது பெரும்பாலான ஓட்டல்கள் நகரத்துக்கு வெளியே இருக்கும். இதனால் சுற்றுலா செல்லும் ஊரின் உண்மையான அனுபவம் கிடைக்காமல் போகும். அதற்காக நமக்கு ஏற்ற ஓட்டல்களில் தங்கினால் செலவு அதிகமாகும் என்பதில் உண்மை இல்லை. முன்கூட்டியே திட்டமிடும் பட்சத்தில் அதிகம் செலவாகாது. ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி செல்ல வேண்டிய சுற்றுலாவுக்கு இப்போது திட்டமிட்டால் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் முன்கூட்டியே திட்டமிடும் பட்சத்தில் செலவுகளை குறைக்கலாம்.
உங்களுடைய விருப்பம் என்ன, எந்த நாட்டுக்கு செல்ல இருக்கிறீர்கள் என்பதை தெரிவித்தால் உங்களுடைய வசதிக்கு ஏற்ப உங்கள் பயண திட்டத்தை நாங்கள் வடிவமைப்போம். இதில் உங்களுக்கு எதேனும் மாற்றம் தேவை என்றால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். சில ஊர்களில் கூடுதல் நாட்கள் இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். வேறு ஓட்டல் தேவை, அதே ஊரில் உள்ள சுற்றிப்பார்க்கும் இடங்களை மாற்றுவது என உங்களின் தேவைக்கு ஏற்ப இடங்களை மாற்றிக்கொள்ளலாம். விமானம், ஒட்டல், உள்ளூர் பயணம் என அனைத்து செலவுகளையும் மொத்தமாக உங்களுக்கு காண்பிப்போம். ஒரே பில்லில் உங்களது வேலை முடிந்தது, உங்கள் விருப்பப்படி.
வெளியூர் செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உணவு. ஆனால் மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. வழக்கமாக சாப்பிடும் உணவுகளை தவிர்த்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறப்பு உணவுகளை தேடி சாப்பிடுகின்றனர். உதாரணத்துக்கு வட இந்தியர்களுக்கு கடல் உணவுகள் கிடைக்காது. கடல் உணவுகளை சாப்பிடுவதற்காகவே கேரளா உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். பீட்ஸா ருசிக்காக இத்தாலி செல்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் உணவு குறித்த மக்களின் மனநிலை மாறி இருக்கிறது.
அடுத்த முக்கியமான விஷயம் புதிய ஊரில் பயணம். நாம் தனியாக செல்லும்போது, எப்படி பயணம் செய்வது என்பது குறித்த கவலை இருக்கும். முதலாவது கூகுள் மேப்ஸ் மூலமாக எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளலாம். உள்ளூரில் உபெர் போல நிறுவனங்களை பயன்படுத்தலாம். இதுதவிர எங்களுடைய செயலி மூலம் எங்களுடன் தொடர்பில் இருக்கலாம். எதேனும் பிரச்சினை ஏற்பட்டால் எங்களை தொடர்பு கொண்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் வழிகாட்டுவோம்.
இப்போதைக்கு வெளிநாட்டு சுற்றுலாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். காரணம் இந்தியாவில் இன்னும் தொழில்நுட்பம் வளரவில்லை. உதாரணத்துக்கு தாய்லாந்தை எடுத்துக்கொண்டால் 90 சதவீதத்துக்கு மேலான ஓட்டல்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் இன்னும் 30 சதவீதம் என்னும் நிலையிலே இருக்கிறது.
மேலும் எந்த ஓட்டல்களிலும் நாங்கள் மொத்தமாக அறைகளை முன்பதிவு செய்துகொள்வதில்லை. வாடிக்கையாளர் வரும்போது அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முன்பதிவு செய்கிறோம். இந்தியாவில் பெரும்பாலானவை இன்னும் ஆன்லைனில் வரவில்லை. அதேபோல ரயில் முன்பதிவும் எங்களால் பதிவு செய்ய முடியாத நிலை இருக்கிறது. இவை மாறும்போது இந்தியாவிலும் நாங்கள் செயல்படுவோம். இந்தியாவில் சுற்றுலாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடையும் பட்சத்தில் பெரிய அளவில் சுற்றுலா வளர்ச்சி அடையும்.
தற்போது நாங்களே நிறுவனத்தை நடத்தி வருகிறோம். நிதி திரட்டல் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சரியான நபர்கள் வரும்பட்சத்தில் முதலீடு குறித்து பரிசீலனை செய்வோம்.
இப்போதைய தலைமுறைக்கு வீடுவாங்குவதில் பெரிய ஆர்வம் இல்லை. அனுபவங்களை தேடுகின்றனர். அவர்களுக்கான சிறப்பான அனுபவத்தை எப்படி வழங்குவது என்பது குறித்தே எங்களுடைய திட்டம் இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆர்வத்துக்கு ஏற்ப அவர்கள் விரும்பும் இடம், சுற்றிப்பார்க்க விரும்பும் இடம் உள்ளிட்டவற்றை 60 சதவிதம் அளவுக்கு கணிக்க முடிந்தாலே இந்த துறையில் பெரிய வெற்றிமுடியும் என ஹரி தெரிவித்தார்.
v.karthikeyan@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago