புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதியன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தி உள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.8) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டுவதற்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. எனினும், சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விலைக் குறைப்புக்கு ஏற்ப இந்த அதிகரிப்பு சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்த வரி அதிகரிப்பு நாளை (ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "இன்று கலால் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன," என்று எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி அரசு தனது 11 ஆண்டு கால ஆட்சியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்த போதெல்லாம் கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை ஒன்பது முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. மொத்தத்தில், அந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11.77 ஆகவும், டீசலுக்கான வரி லிட்டருக்கு ரூ.13.47 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.99,000 கோடியாக இருந்த கலால் வரி வசூல், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.2,42,000 கோடியாக உயர்ந்தது.
2017 அக்டோபரில் கலால் வரியில் 2 ரூபாயை அரசு குறைத்தது. ஒரு வருடம் கழித்து மேலும், ரூ.1.50 குறைத்தது. அதன் பின்னர், ஜூலை 2019 இல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. மீண்டும் மார்ச் 2020 இல் லிட்டருக்கு கலால் வரியில் ரூ.3 உயர்த்தியது. மார்ச் 2020 முதல் மே 2020 வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 உயர்த்தப்பட்டது. எனினும், அந்த வரி உயர்வை திரும்பப் பெற்றது.
கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்தது. டெல்லியில் பெட்ரோலின் தற்போதைய விலை ரூ.94.77 ஆகவும், டீசலின் விலை ரூ.87.67 ஆகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago