“மத்திய அரசால் தமிழக நிதி நிலை பாதிப்பு” - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விவரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “மத்திய அரசு, ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதி நிலையை வெகுவாகப் பாதித்துள்ளது” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். அப்போது தமிழக அரசின் நிதிநிலை குறித்து அவர் பேசியது: “2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2,20,895 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வணிகவரிகளின் கீழ் 1,63,930 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் 26,109 கோடி ரூபாய், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் 13,441 கோடி ரூபாய் மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் 12944 கோடி ரூபாய் வரி வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும்.

மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வரி வசூல் திறனில் முன்னேற்றம் ஆகியவற்றின் பலனாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26 ஆம் ஆண்டில் 14.60 சதவீத வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 2,49,713 கோடி ரூபாய், மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும்.

அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், மத்திய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. மத்திய அரசு, ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,354 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள், திருத்த மதிப்பீடுகளில் 20,538 கோடி ரூபாயாக கணிசமான அளவுக்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் முழு பங்குத்தொகையை மத்திய அரசு வரும் நிதியாண்டில் விடுவிக்கும் என எதிர்பார்த்து, மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 49,755 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மத்திய வரிகளில் பங்கு திருத்த மதிப்பீடுகளில் 52,491 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்த மதிப்பீடுகளில் இப்பங்கு உயர்ந்திருந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து அதிக அளவில் மேல் வரிகளையும், கூடுதல் கட்டணங்களையும் விதிப்பதால் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது.

மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மத்திய வரிகளில் பங்கானது 58,022 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதத்தைக் கொண்டிருக்கும் நாம், தேசியப் பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீதப் பங்களிக்கும் அதே வேளையில், மத்திய வரிகளில் தமிழகத்துக்கான பங்கானது வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது, மாநிலத்துக்கு இழைக்கப்படும் அநீதியைத் தவிர வேறெதுவும் இல்லை.

ஒட்டுமொத்தத்தில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவிலும் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில். 2016-17 ஆம் ஆண்டில் 3.41 சதவீதத்திலிருந்து, 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டில் 1.96 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இந்த 1.45 சதவீதம் குறைவினால் மாநில அரசுக்கு ஏற்படக்கூடிய 45,182 கோடி ரூபாய் இழப்பானது. 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையில் ஏறத்தாழ 44.43 சதவீதத்துக்கு சமமாகும்.

2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3,31,569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும். 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 9.65 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்