சென்னை: ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார். இதனை அந்நிறுவனம் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“சிறந்த முடிவுகளை பெற அசாதாரண முயற்சி அவசியம் வேண்டும்.” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து பலரையும் கொதிப்படைய செய்துள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
“ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என ஊழியர்கள் மத்தியில் பேசிய போது எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்தார்.
தங்கள் நிறுவன தலைவர் சொல்லிய கருத்து இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக எல் அண்ட் டி தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
“நான் காலை 6.20 மணி முதல் இரவு 8.30 மணி வரை பணியாற்றுவேன். அதுபோல உழைத்தால்தான் இந்தியா முன்னேறும். தற்போது உலக அளவில் இந்தியாவின் உற்பத்தி குறியீடு பின்தங்கி உள்ளது. அதேபோல், நாட்டில் நிலவும் ஊழல், அதிகார வர்க்கம் கடமையாற்றுவதில் உள்ள தாமதம் ஆகியவை மாறினால் மட்டுமே இந்தியா வேகமான வளர்ச்சியை எட்ட முடியும்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து கடந்த நவம்பரில் சிஎன்பிசி குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் பேசிய நாராயணமூர்த்தி, “தேசத்தின் முன்னேற்றத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். நாட்டில் வலுவான பணி சார்ந்த நெறிமுறை இல்லாமல் நம்மால் உலக நாடுகளுடன் வளர்ச்சி சார்ந்து போட்டியிட முடியாது. இந்தியாவின் வளர்ச்சி நம் முயற்சியில் தான் உள்ளது. 1986-ல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் எனக்கு ஏமாற்றம் தந்தது. மேலும், வாரத்துக்கு 6 நாள் வேலை அவசியம் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன். அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன், ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை.” என்று விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
அவரது கருத்து ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றது. இந்நிலையில், அதே பாணியில், “ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.” என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 70 மணி நேர வேலை போன்ற யோசனைகள் எல்லா துறைகளுக்கும் பொருந்தக் கூடியது அல்ல என்பதோடு, ஆர்வத்தோடு உழைக்க முன்வரும் இளைஞர்களின் உற்சாகத்தைக் குறைக்கவும் ஒரு காரணியாக மாறிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago