ஜா
க் மா அலிபாபாவின் பிரச்சினைகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஆராயத் தொடங்கினார்.
புதிதாகத் தொழில் தொடங்கும் எல்லோரும் சின்னச் சின்ன பணிகளைக்கூடத் தாங்கள் மட்டுமே செய்யவேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அனைத்தும் கனகச்சிதமாக நடக்கவேண்டும், மற்றவர்கள் தன்னைப்போல் அர்ப்பணிப்போடு செயல்படுவார்களா, சொதப்பிவிடக்கூடாதே என்னும் பயம். எல்லாப் பொறுப்புகளையும் தங்கள் இரும்புக் கைகளில் வைத்துக்கொள்வார்கள். ஊழியர்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக நடத்துவார்கள். இதனால், திறமைசாலிகள் நிறுவனத்தைவிட்டுப் போவார்கள். ஜால்ராக்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். ஆரம்ப நாட்களில், அத்தனை வேலைகளிலும் தலையிட முதலாளிக்கு நேரம் இருக்கும். பிசினஸ் வளரும்போது அவர் பிசாசாக உழைப்பார். அதே சமயம், தன் சிஇஓ வேலைகளைச் செய்யமுடியாமல் திணறுவார். கம்பெனி தடுமாறும். முதலாளி ஊழியர்களைப் பழி சொல்லுவார். ஊழியர்கள் முதலாளியைச் சுட்டிக் காட்டுவார்கள். மொத்தத்தில், கம்பெனி கோவிந்தா.
மிகச் சில முதலாளிகள் விழித்துக்கொள்வார்கள். சுய பரிசோதனை செய்வார்கள். தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்வார்கள். ஜாக் மா அப்படித்தான். ஒட்டுமொத்த அதிகாரமும் தன்னிடம் குவிந்து கிடப்பதால், முக்கிய முடிவுகள் தாமதமாவதையும் கூட்டாளிகள், ஊழியர்களிடம் அதிருப்தி பெருகுவதையும் உணர்ந்தார். உலகச் சந்தையில் போட்டி போட முக்கிய ஆயுதம் திறமைசாலி ஊழியர்கள். இவர்களை இழந்துவிட்டால் அலிபாபா அஸ்தமனமாகிவிடும் என்னும் பயம். தன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தார். இதற்கான முதல் படிநிலை, அலிபாபாவின் பிசினஸுக்குப் பொருத்தமான கட்டமைப்பை உருவாக்கவேண்டும். இந்தக் கட்டமைப்பில் சாதாரணமாக ஐந்து வகை இலாகாக்கள் உண்டு. அவை:
ஊழியர் நிர்வாகம் (Personnel Management அல்லது Human Resources Departmant. சுருக்கமாக HR)
மார்க்கெட்டிங் நிர்வாகம் (Marketing Management)
உற்பத்தி நிர்வாகம் (Manufacturing or Production Management)
நிதி நிர்வாகம் (Finance Management)
கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு நிர்வாகம் (Computer & Information Systems Management)
இலாகாக்களின் முக்கியத்துவம் பிசினஸுக்கு ஏற்றபடி மாறும். விற்பனைக் கடைகளில் மார்க்கெட்டிங்குக்கு நம்பர் 1 இடம்; தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு முதல் இடம்; வங்கிகளில் நிதி முந்தும்; தொழில்நுட்பக் கம்பெனிகளில் ஊழியர் நிர்வாகமும், தகவல் தொடர்பும் முக்கியம்.
அலிபாபாவின் பிசினஸுக்கு ஏற்ற நிர்வாகக் கட்டமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று ஜாக் மா ஆலோசித்தார். ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான் போன்ற தொழில்நுட்பத் திறமைசாலிகளின் கூடாரங்கள் பற்றிய விவரங்கள் சேகரித்தார். நண்பர்களோடும், மேனேஜ்மென்ட் மேதைகளோடும் கலந்துரையாடினார். இதன்படி அலிபாபாவின் உச்சிமட்டத்தில் 4 பதவிகள் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார். அவை:
சீஃப் எக்சிக்யூட்டிவ் ஆபீசர் – சுருக்கமாக சி.இ.ஓ. (Chief Executive Officer – CEO)
சீஃப் ஃபைனான்ஷியல் ஆபீசர் - சுருக்கமாக சி.எஃப்.ஓ (Chief Financial Officer- CFO)
சீஃப் டெக்னிக்கல் ஆபீசர் – சுருக்கமாக சி.டி.ஓ. (Chief Technical Officer - CTO)
சீஃப் ஆப்பரேட்டிங் ஆபீசர் – சுருக்கமாக சி.ஓ.ஓ. (Chief Operating Officer - COO)
ஒவ்வொருவர் பணியும் இதுதான்:
சி.இ.ஓ – தொலைநோக்குத் திட்டங்களும், இலக்குகளும் முடிவு செய்தல். கம்பெனியின் மொத்தச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்.
சி.எஃப்.ஓ – அன்றாட நிதி நிர்வாகம், செல வுக் கட்டுப்பாடு, வருங்கால வளர்ச்சிக்கான முதலீடுகளைத் திட்டமிடுதல், திரட்டுதல்.
சி.டி.ஓ – கம்பெனியின் தொழில்நுட்பம் குறித்த செயல்பாடுகளின் பொறுப்பாளி. ஆன்லைன் கம்பெனிகளுக்குத் தொழில்நுட்பம் முக்கிய ஆயுதம். இதை எப்போதும் பட்டைதீட்டி வைத்தல். .
சி.ஓ.ஓ – தடங்கல் இல்லாமல் பணிகள் நடத்துதல், ஊழியர் நிர்வாகம், பயிற்சி.
ஜாக் மாதான் சி.இ.ஓ. அலிபாபா கப்பலின் கேப்டன். என்ன பதவிகள் தேவை என்று முடிவு செய்துவிட்டார். அடுத்து அவற்றை நிரப்பவேண்டும்.
எந்த ஜாடிக்கு எந்த மூடி? ஜோ நிதி நிர்வாகத் துறையை அதி சாமர்த்தியமாக நடத்தி வந்தார். ஆகவே, அவர்தான் சிஎஃப்ஓ யாஹூவிலிருந்து அழைத்துவந்த ஜான் வூ கம்ப்யூட்டர் கில்லாடி. சந்தேகமே இல்லாமல் அவர்தான் சிடிஓ இன்னும் ஒரு பதவி காலி. சிஓஓ – வாக யாரைப் போடலாம்? அலிபாபாவில் யாருமில்லை. வெளிக் கம்பெனியிலிருந்துதான் கொண்டுவர வேண்டும். ஜாக் மா தேடத் தொடங்கினார். எப்படிப்பட்டவர் வேண்டும் என்பதில் அவர் மகா தெளிவு. சீன மொழியும், சீனக் கலாச்சாரமும் தெரிந்தவராக இருக்கவேண்டும்; தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கம்பெனியில் உயர்பதவி வகித்திருக்கவேண்டும்; தலைமைப் பண்புகள் கொண்டவராக இருக்கவேண்டும்; ஜெயிக்கும் வெறி வேண்டும். சம்பளம்? இப்படிப்பட்டவரால் அலிபாபாவின் தலைவிதியையே மாற்றி எழுதமுடியும். ஆகவே, அவர் ஊதியத்தில் கஞ்சத்தனம் கிடையாது.
ஜாக் மா வகுத்த அளவுகோல்களுக்குப் பல அமெரிக்கர்கள் பொருந்தினார்கள். ஆனால், அவர்களைச் சந்திக்கக்கூட ஜாக் மா முயற்சி எடுக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, `அலிபாபா அகில உலக அரங்கில் போட்டி போடும் கம்பெனியாக இருந்தாலும், சீனக் கம்பெனி. சீனக் கலாச்சாரம் சிஒஓ ரத்தத்தில் ஊறியிருக்கவேண்டும்.”
ஜாக் மா போகாத ஊருக்கு வழி தேடுகிறார் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், அவருக்குத் தான் தேடும் பட்சி நிச்சயம் கிடைக்கும் என்னும் அபார நம்பிக்கை. கிடைத்தார் ஸாவியோ க்வான் (Savio Kwan).
க்வான் ஹாங்காங்கில் பிறந்த ஜப்பானியர். ஹாங்காங்கில் பள்ளிப்படிப்பை முடித்தார். இங்கிலாந்தின் டாப் 10 பல்கலைக் கழகங்களில் ஒன்றான லோபொரோ பல்கலைக் கழகத்தில் (Loughborough University) மேற்படிப்பு. அடுத்துப் பிரபல லண்டன் பிசினஸ் ஸ்கூலில் முதுகலைப் பட்டம் எம்எஸ் சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் சரளம். படிப்பை முடித்தவுடன், அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியின் மருத்துவக் கருவிகள் பிரிவில் சேர்ந்தார். 17 வருடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள், மார்க்கெட்டிங் மேனேஜர், சிஓஓ பதவி அனுபவங்கள். இங்கிலாந்தின் ஹென்லி பிசினஸ் ஸ்கூலில் (Henley Business School) கெளரவப் பேராசிரியர். ஜாக் மா அவரைச் சந்தித்தார். அவரும் சம்மதித்தார். அலிபாபாவில் சிஓஓ அப்பாயின்ட்டெட்.
தான் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்வது அலிபாபாவில் எல்லோருக்கும் சுரீர் என உறைக்கவேண்டும் என்று ஜாக் மா நினைத்தார். ஒரு சங்கேதம் காட்டினார். தன் அறையை இரண்டாகப் பிரிக்கச் சொன்னார். ஒரு பக்கம் அவர். மறு பக்கம் க்வான். புதிய சிஓஓ முக்கியமானவர் என்பதற்கு நாசூக்கான அறிவிப்பு. . .
க்வான் எடுத்துக்கொண்ட முதல் வேலை, செலவுக் குறைப்பு. தென் கொரியாவின் ஒரு கம்பெனியோடு கை கோர்த்து கொரிய ஆன்லைன் கம்பெனி தொடங்கும் திட்டம் இருந்தது. இதைக் கடாசினார். அதிகச் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கும், ஃப்ரீமான்டில் இருந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் பலருக்கும் குட் பை. அலிபாபா இணையதளத்தில் வியாபாரம் செய்யப் பதிவுக் கட்டணம் கிடையாது. ஓசியை நிறுத்தவேண்டும், கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று க்வான் வாதாடினார். இது அலிபாபாவின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது என்று ஜாக் மா மறுத்துவிட்டார். க்வானா கொக்கா? தங்க வியாபாரிகள் (Gold Suppliers) என்னும் பதிவுமுறையை அறிமுகப்படுத்தினார். ஓசியா? சாதாரண வசதிகள். கட்டணம் கொடுத்தால், எக்கச்சக்க வசதிகளோடு தங்க வியாபாரி. பலர் இதற்கு மாறினார்கள். அதிக வருமானம்.
அலிபாபாவின் நிர்வாகத்தில் க்வான் பல ஓட்டைகள் கண்டுபிடித்தார். யாருக்கு என்ன பொறுப்பு, என்ன அதிகாரம் என்று வரையறுக்கப்படவில்லை. ஜாக் மா தவிர பதினேழு கூட்டாளிகள். கம்பெனி தங்களுடையது என்னும் உரிமையோடு முடிவுகள் எடுத்தார்கள். எல்லோருக்கும் அலிபாபா வளரவேண்டும் என்னும் நல்ல எண்ணம்தான். எல்லோருக்கும் சம உரிமை என்பதால், ஒருவர் எடுத்த முடிவை இன்னொருவர் மாற்றினார். எந்த ப்ராஜெக்ட் தொடரும், எது பாதியில் கைவிடப்படும் என்று யாருக்குமே தெரியாத நிரந்தர சஸ்பென்ஸ். உலக அரங்கில் அலிபாபா போட்டியிடவேண்டுமானால், இதை மாற்றியேயாகவேண்டும் என்று க்வான் வாதாடினார். தன் ஜெனரல் எலெக்ட்ரிக் அனுபவத்தில் நவீனமான ஹெச்.ஆர் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். ஒழுங்கும், கட்டுப்பாடும் வாடிக்கையாயின. அலிபாபாவின் பலமான அடித்தளம் உருவானது.
கேப்டன் ஜாக் மா, நிதிக்கு ஜோ, தொழில்நுட்பத்துக்கு ஜான் வூ, நிர்வாகக் கட்டமைப்புக்கு க்வான். நால்வரும் அற்புதமான கூட்டணி. நேற்றொரு தோற்றம், இன்றொரு மாற்றம் என்று புதுமைகள் அரங்கேற்றம்.
(குகைஇன்னும்திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago