நியூயார்க்/ புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும், இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முறைகேடாக பெற்ற இந்த ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17,000 கோடி) அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை கவுதம் அதானி பல முறை சந்தித்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சத்தை மறைத்து பெற்ற ரூ.25,000 கோடி முதலீடு: சட்டவிரோதமான லஞ்ச நடவடிக்கைகளை மறைத்து அமெரிக்காவில் அதானி நிறுவனம் 300 கோடி டாலருக்கு (ரூ.25,000 கோடி) முதலீடு பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஸுர் பவர் நிறுவனமும் இந்த லஞ்ச வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திர சட்டங்கள், விதிகளை மீறி செயல்பட்டதற்காக அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமும் கவுதம் அதானி, சாகர் அதானி, அஸுர் பவர் நிர்வாகிகள் மீது தனியாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கவுதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது, சர்வதேச சட்ட அமலாக்க துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் உள்ளதால் தமிழக அரசு விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 3 ஆண்டுகளாக வணிகரீதியில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி நிறுவனம் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஏற்கெனவே தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது சகாக்கள் மீது லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது அதானி குழுமத்துக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அதானி குழுமம் மறுப்பு: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது: சோலார் பவர் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித் துறை, பங்குச் சந்தை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை முற்றிலுமாக மறுக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை, பிரதிவாதிகள் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள். வெளிப்படைத் தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் அதானி குழுமம் எப்போதும் உறுதியுடன் செயல்படுகிறது.
நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழுமத்துடனான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில், உள்கட்டமைப்புக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago