கோவைக்கு குறிவைக்கும் கட்சிகளும், தொழில் துறையினர் எதிர்பார்ப்பும்!

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டம் ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கிரைண்டர் என உற்பத்தி பிரிவின்கீழ் பல்வேறு தொழில்களில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்று விளங்குகிறது. முன்பு தொழில்துறைக்கு மட்டுமே பெயர் பெற்ற கோவை மாவட்டம் தற்போது கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என இதர துறைகளிலும் புகழ் பெற்று திகழ்கிறது. கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை 30 லட்சத்தை கடந்துள்ளது.

ஆண்டுதோறும் அதிகரித்துவரும் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசலுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேம்பாலங்கள், சாலை புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ரயில் சேவைகள் அதிகரித்தல், விமான நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துதல் என வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படுகின்றன.

கோவை மாவட்டம் 10 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு அதிமுகதான் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. அதிமுக ஆட்சியில் பல்வேறு மேம்பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குளக்கரைகள் மேம்பாடு, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதேநேரம் கோவையில் தனது ஆதிக்கத்தை செலுத்த திமுக தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2006-ல் திமுக ஆட்சி அமைத்தபோதும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றிபெற்றிருந்தது. இதையடுத்து, கோவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தியதுடன், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அவிநாசி சாலை 6 வழிப்பாதையாக விரிவாக்கம், செம்மொழிப் பூங்கா, காந்திபுரம் நஞ்சப்பா சாலை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையிலும், கோவை மாவட்டத்தில் ஒரு எம்எல்ஏ கூட திமுக-வுக்கு இல்லை. இதை கருத்தில் கொண்டு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கோவைக்கு அடிக்கடி வருகை தருவதும், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பதும் தொடர்கிறது.

தொழிற்சங்கங்கள் நிறைந்த கோவையில் கம்யூனிஸ்ட்களும் கணிசமான செல்வாக்குடன் உள்ளனர். எனவேதான், கடந்த காலங்களில் திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலுமே கோவை மக்களவை தொகுதி கம்யூனிஸ்ட்களுக்கு ஒதுக்கப்பட்டன. கோவைக்கு தேவையான ரயில், விமான சேவைகளை பெறுவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன.

1998-க்கு பிறகு கோவையில் பாரதிய ஜனதா கட்சியும் செல்வாக்கு பெறத் தொடங்கியது. கோவை மக்களவை தொகுதியை பாஜக இருமுறை கைப்பற்றியது. தற்போது கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதிசீனிவாசன் உள்ளார். அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருடன் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, கோவை தொழில்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.

இவ்வாறு அரசியல் கட்சிகள் கோவையை தங்கள் வசப்படுத்த, அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டுவருகின்றன. இது தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளபோதிலும், மாவட்டத்தின் நீண்டகால தேவைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜேஷ் லுந்த், முன்னாள் தலைவர்கள் நந்தகுமார், வனிதா மோகன் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: கோவை மாவட்ட வளர்ச்சியில் தொழில்முனைவோரின் பங்களிப்பு அதிகம் உள்ளது. அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் இன்னும் செயல்படுத்த வேண்டியுள்ளது.

* கோவை பிரதான ரயில் நிலையம், போத்தனூர், வடகோவை, சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களை மேம்படுத்தி, பிளாட்பாரங்களின் எண்ணிக்கை மற்றும் ரயில் சேவையை அதிகரித்தல்.

* தொழிலாளர்கள் திறன் மேம்படுத்த திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் பல்கலைக்கழகம் அமைத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டியது கோவை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்