கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த கட்கரிக்கு கோவை தொழில் அமைப்பினர் கோரிக்கை

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 81 கி.மீ தூரத்துக்கு 6 தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து ‘கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை’ விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் சார்பில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ், கொங்கு குளோபல் ஃபோரம் (கேஜிஎஃப்) கூட்டமைப்பின் துணை தலைவர் வனிதா மோகன், இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) ராஜேஷ் லுந்த் ஆகியோர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழகத்தின் பொருளாதாரத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் மேற்கு மண்டலம் 30 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிருந்து 1 லட்சம் கோடி மதிப்பிலான சரக்கு மற்றும் சேவைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட கோவை மாவட்டம் மேற்கு மண்டலத்தின் பெரிய நகரமாக திகழ்கிறது. கோவை - கரூர் எக்ஸ்பிரஸ் வழித்திட்டம் மற்றும் நரசிம்ம நாயக்கன் பாளையம் முதல் கணியூர் மற்றும் மதுக்கரை வரை 81 கி.மீ, ஆறு தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் இரண்டையும் ஒன்றிணைத்து மொத்தம் 200 கி.மீ தூரத்துக்கு ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலதாமதம் செய்து வருகிறது. பேஸ் 2 திட்டத்தின் கீழ் கோவை - கரூர் பசுமை நெடுஞ்சாலை 120 கி.மீ அமைப்பதால் மக்கள் ஒன்றரை மணி நேரத்தில் சென்றடைய உதவும். இதனால் இந்த வழித்தடத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு எம்எஸ்எம்இ தொழில்கள் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிக்கும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE