பண மோசடியை தடுக்க இந்தியாவில் வலுவான கட்டமைப்பு: நிதி நடவடிக்கை பணிக்குழு பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு ஆகும். பண மோசடி, தீவிரவாத நிதி உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு எதிரான கொள்கைகளை பரிந்துரைத்து வரும் இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிதி தொடர்பான குற்றங்களைத் தடுக்க இந்தியா நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இக்குற்றங்களை முழுமையாக தடுக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ள இந்தியா, எஃப்ஏடிஎஃப் முன்வைத்துள்ள வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி நல்ல பலனைக் கண்டுள்ளது.

இந்தியாவில் பண மோசடி என்பது பெரும்பாலும் உள்நாட்டு அளவிலேயே நடைபெறுகிறது. பணமோசடி செயல்பாடுகளைத் தடுப்பதில் அமலாக்கத் துறை முக்கிய அமைப்பாக செயல்படுகிறது. தீவிரவாதம் மற்றும் தீவிரவாத நிதி சார்ந்து இந்தியாவின் முன்பு பல்வேறு சவால்கள் உள்ளன. பண மோசடி மற்றும் தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதி வழங்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை இந்தியா இன்னும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE