பங்குச் சந்தை வளர்ச்சியில் சீனாவை முந்தியது இந்தியா: மோர்கன் ஸ்டான்லி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பங்குச் சந்தை முதலீட்டு வளர்ச்சிக் குறியீட்டு அடிப்படையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமான வளர்ச்சி, அதிக அந்நிய பங்குமுதலீடு ஆகியவை காரணமாக எம்எஸ்சிஐ முதலீடு செய்யத்தக்க பங்குச் சந்தை குறியீட்டில் சீனாவை விட இந்தியா அதிக மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்திய பங்குச் சந்தை மீதான மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் மதிப்பீடு 22.27 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், சீன பங்குச் சந்தை மீதான மதிப்பீடு 21.58 சதவீதமாக குறைந்துள்ளது. உலகளாவிய வளரும் பங்குச் சந்தையைக் கொண்ட 24 நாடுகளின் பெரிய, நடுத்தர, சிறிய பங்குகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து இந்தக் குறியீட்டை மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் வழங்கியுள்ளது.

நடப்பாண்டில் இதுவரையில், இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.53,100 கோடி முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் 10 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.17,047 கோடி நிதி திரட்டியுள்ளன. இது கடந்த 27 மாதங்களில் இல்லாத உச்சம் ஆகும். இவ்வாண்டில் இதுவரையில், 56 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.65,000 கோடி நிதி திரட்டியுள்ளன. 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 20 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.15,051 நிதி திரட்டி இருந்தன. 2023 டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு 4 டிரில்லியன் டாலராக இருந்தது. 2024 மே மாதத்தில் அது 5 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. வெறும் 6 மாதங்களில் பங்குச் சந்தை 1 டிரில்லியன் டாலர் உயர்வைக் கண்டது. அதேபோல், கடந்த 3 மாதங்களில் இந்திய பங்குச் சந்தை மதிப்பு 0.5 டிரில்லியன் டாலர் அதிகரித்து 5.5 டிரில்லியன் டாலராக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE