அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்

By செய்திப்பிரிவு

மும்பை: சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் இன்று (வியாழக்கிழமை) புதிய உச்சம் கண்டது.

இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 735.95 புள்ளிகள் ஏற்றம் கண்டது. இதன் மூலம் 83,684.18 என்று புதிய உச்சத்தை எட்டியது. இதே போல தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 209.55 புள்ளிகள் உயர்ந்து 25,587.10 என்ற உச்சத்தை எட்டியது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் 50 அடிப்படை புள்ளிகளாக சரிந்தது பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது என முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்தார்.

டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளன. மற்ற ஆசிய நாடுகளின் பங்கு சந்தை வர்த்தகமும் ஏற்றம் கண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE