“தமிழகத்தில் புதிதாக 33,466 தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டு உள்ளனர்” - அசோசெம் மாநாட்டில் அமைச்சர் தகவல்

By கி.கணேஷ்

சென்னை: “குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களின் கீழ் ரூ.1,104.78 கோடி மானியத்துடன் ரூ. 2,993.97 கோடி வங்கி கடனுதவி வழங்கி 33 ,466 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்” என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செப்.18), ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையான அசோசெம் சார்பில் நடத்தப்படும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: “முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டங்களாலும், சிறந்த நிர்வாகத்தாலும் தொழில் துறையில் இந்திய அளவில் தமிழகம் உள்நாட்டு உற்பத்தியில் 9.07 சதவீதம் பங்களித்து 2 -ம் இடத்திலும், ஏற்றுமதியில் 9.5 சதவீதம் பங்களித்து 3 -ம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 26.61 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி தேசிய அளவில் 2 -ம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் உற்பத்தி தரத்தினை உலக அளவில் உயர்த்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் - திருமுடிவாக்கத்தில் ரூ. 47.62 கோடியில் அமைக்கப்பட்டு வரும் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தில் தொழில்நுட்ப கருவிகளை உலகத் தரத்தில் பரிசோதிக்கும் உயர்தொழில்நுட்ப பரிசோதனை கூடம், முதல்வரால் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ. 155 கோடி மதிப்பில், மருந்தியல் பெருங் குழுமத்துக்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்று, இதுவரை, ரூ. 203.95 கோடியில் ரூ.161.38 கோடி மானியத்துடன், 43 குறுந்தொழில் குழுமங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அசோசெம் போன்ற கூட்டமைப்புகள் அரசால் முன்னெடுக்கப்படும் குறு மற்றும் பெரும் குழுமங்களுக்கு தங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு உதவ தமிழகம் முழுவதும் 8,598 ஏக்கரில் 15,171 தொழில் மனைகள், 130 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 295 கோடியில் 512 ஏக்கர் பரப்பில் 8 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களில் 248.01 ஏக்கரில் ரூ.115.53 கோடி மதிப்பில் 8 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 8 மாவட்டங்களில் 283.40 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.115.64 கோடியில் 10 புதிய தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 இடங்களில், ரூ. 208.51 கோடியில் அடுக்குமாடி தொழில் கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது.“தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் இதுவரை 38,270 தொழில் முனைவோர்களின், ரூ. 5,715 கோடி வங்கிக் கடனுக்கு, மாநில அரசின் கடன் உத்தரவாதமாக ரூ. 563.12 கோடியை அரசு வழங்கியுள்ளது .

தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் திட்டத்தின் கீழ், 1,491 நிறுவனங்களுக்கு ரூ. 2,139 கோடி மதிப்பில் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை வேலூர், தூத்துக்குடி ஆகிய 6 மண்டலங்களில் உள்ள வசதியாக்கல் மன்றங்கள் மூலம், 2,008 நிறுவனங்களுக்கு ரூ. 374.76 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களின் கீழ் ரூ.1,104.78 கோடி மானியத்துடன் ரூ. 2,993 .97 கோடி வங்கிக் கடனுதவி வழங்கி 33,466 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் 3 லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார். நிகழ்ச்சியில், துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், நபார்டு தலைமை பொது மேலாளர் ஷாஜி, தேசிய எம்எஸ்எம்இ நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சு குளோரி ஸ்வரூபா, எல்ஐசி தென்னிந்திய மண்டல மேலாளர் வெங்கடரமணன், அசோசெம் தலைவர் சுஷ்மா பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE