ஸ்டீல் மீதான இறக்குமதி வரியை நீக்கிய முடிவை வாபஸ் பெறாதீர்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

By இல.ராஜகோபால்

கோவை: ஸ்டீல் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகுந்த பயன் பெற்று வரும் நிலையில் எக்காரணம் கொண்டும் அதை திரும்ப பெற கூடாது என, 23 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘போசியா’ கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, கோவை குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) தலைவர் மற்றும் ‘போசியா’ கூட்டமைப்பின் உறுப்பினர் சிவசண்முக குமார் கூறியதாவது: “உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களில் ஸ்டீல் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டில் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஸ்டீல் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் பட்ஜெட்டில் ஸ்டீல் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி நீக்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகளவு ஸ்டீல் இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டில் ‘எம்எஸ்எம்இ’ பிரிவை சேர்ந்த தொழில்துறையினரின் தேவைக்கு போதிய அளவு கிடைத்து வருகிறது. விலையும் குறைந்துள்ளது.

இத்தகைய சூழலில் இறக்குமதி வரி மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு எக்காரணம் கொண்டும் இறக்குமதி வரி நீக்கிய முடிவை திரும்ப பெற கூடாது. இது தொடர்பாக எங்கள் கூட்டமைப்பு சார்பில், மத்திய ஸ்டீல் மற்றும் கனரக தொழில்துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம்,” என்றார்.

‘போசியா’ தொழில் அமைப்பு சார்பில், அனுபப்பட்ட கடிதத்தில், “ஸ்டீல் மீதான இறக்குமதி வரி நீக்கிய பின் தற்போது வார்பட உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. ஏற்றுமதிக்கான பணி ஆணைகளும் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் இறக்குமதி வரி ரத்து செய்தால் எம்எஸ்எம்இ தொழில்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். எனவே அந்த முடிவை எடுக்க வேண்டாம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE