ஓணம்: பூக்கள் விலை உயர்வால் தென்காசி விவசாயிகள் மகிழ்ச்சி!

By த.அசோக் குமார்

தென்காசி: ஓணம், முகூர்த்த நாள் காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யும் பூக்களை தென்காசி, சங்கரன்கோவில், சிவகாமிபுரம் சந்தைக்கு விவசாயிகள் கொண்டுசென்று விற்பனை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் இன்று பூக்கள் அறுவடை செய்து, சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுசென்றனர்.

தென்காசியில் நேற்று ஒரு கிலோ 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ இன்று 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆயிரம் ரூபாயாக இருந்த பிச்சிப்பூ விலை 1,800 ரூபாயாக உயர்ந்தது. மற்ற பூக்களின் விலையும் ஓரளவு உயர்ந்தது. கனகாம்பரம் ஆயிரம் ரூபாய்க்கும், கேந்தி 100 ரூபாய்க்கும், சேவல்கொண்டை பூ 70 ரூபாய்க்கும், செவ்வந்தி 350 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 300 ரூபாய்க்கும், வாடாமல்லி 100 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 100 ரூபாய்க்கும், அரளிப்பூ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, “கேரள மாநிலத்தில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அத்துடன் நாளை முகூர்த்த நாளும் ஆகும். இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE