சென்னையில் இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1280 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் வரும் நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (செப்.13) தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து இன்று (செப்.14) தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இந்த வகையில் இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1280 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,865-க்கு விற்பனையாகிறது. அதேபோல், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.54,920-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.97-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், திடீரென தங்கத்தின் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, வீட்டில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் பண்டிகைக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் தங்கம் விலை உயர்வைக் கண்டு கவலை அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு: இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை ரூ.2,480-ல் இருந்து ரூ.2,570 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதாலும், முகூர்த்தநாட்கள் என்பதாலும் தங்கம் விலைஅதிகரித்து வருகிறது. வரும்நாட்களிலும் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE