என் மீதான குற்றச்சாட்டு பொய்யானவை: செபி தலைவர் மாதபி புரி புச் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி)தலைவர் மாதபி புரி புச் தெரிவித் துள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. மாதபி மற்றும் அவரது கணவர் தவல் புரி புச், அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பெறும் பங்குகளைக் கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே, பங்கு முறைகேடு வழக்கில் அதானி குழுமம் மீது செபி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில நாட்களாக எங்களது நேர்மை சார்ந்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அகோரா அட்வைசரி, அகோரா பாட்னர்ஸ், மஹிந்திரா குழுமம், பிடிலைட், டாக்டர் ரெட்டிஸ், மார்சல், செம்கார்ப், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடனான கோப்புகளுடன், செபியில் சேர்ந்த பிறகு மாதபி எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை. இது தொடர்பாக அந்நிறுவனங்களும் பதில் அளித்துள்ளன. அந்த வகையில் எங்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, மற்றும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலானது. எங்களது அனைத்துச் செயல்பாடுகளும் வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன. வருங்காலத்தில் எங்கள் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் வலுவான ஆதரங்களுடன் மறுக்கமுடியும். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

லோக்பாலில் புகார்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லோக்பால் அமைப்பில் புகார் அளித்துள்ளார். அதில், “மாதபி புரி புச் 2017 ஏப்ரல் மாதம் முதல் செபியின் முழு நேர உறுப்பினராக இருந்தார். 2022 மார்ச் மாதம் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். முக்கியமான அரசுப் பொறுப்பில் இருக்கும் அவர், பல்வேறு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். அவரது செயல்பாடுகளின் காரணமாக, இந்திய பங்குச் சந்தை மீதான நம்பிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ அல்லது அமலாக்கத் துறை விசாரணைக்கு லோக்பால் பரிந்துரைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE