83,000 புள்ளிகளை தொட்டு சென்செக்ஸ் புதிய சாதனை: முதலீட்டாளருக்கு ரூ.6.6 லட்சம் கோடி லாபம்

By செய்திப்பிரிவு

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சம் கண்டது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் உயர்ந்து 82,962 ஆகவும், நிஃப்டி 470 புள்ளிகள் உயர்ந்து 25,388 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 1.77%, நிஃப்டி 1.89% உயர்ந்தன. பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.467 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.6 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

வரும் 18-ம் தேதி அமெரிக்க பெடரல் ரிசர்வ், வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது. தற்போதைய பணவீக்க நிலவரப்படி வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் நீட்சியாக, நேற்று இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.

அதிகபட்சமாக ஹிண்டால்கோ 4.40%, பார்தி ஏர்டெல் 4.37%, என்டிபிசி 3.90%, ராம் பைனான்ஸ் 3.68%, எம் அண்ட் எம் 3.26%, எய்ஷர் மோட்டார்ஸ் 3.14%, ஓஎன்ஜிசி 3.07%, விப்ரோ 3.05%, அதானி போர்ட்ஸ் 2.94%, ஜேஎஸ்டபிள்யூ 2.92%, கிராசிம் 2.83%,பஜாஜ் ஆட்டோ 2.65%, ஹீரோ மோட்டாகார்ப் 2.63%, டெக் மஹிந்திரா 2.54%, எஸ்பிஐ 2.49%, கோல் இந்தியா 2.42%, டாடா ஸ்டீல் 2.41% என்ற அளவில் ஏற்றம் கண்டன.

ரூ.17,016 கோடி அந்நிய முதலீடு: அதேசமயம், மருந்துத் தயாரிப்பு நிறுவனமான கிரானுலஸ் இந்தியாவின் பங்கு மதிப்பு 16.52 %, பிரிசிம் ஜான்சன் 5.54%, ஹொனாசா கன்ஸ்யூமர் 5.39% சரிந்தன. இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு கடந்த ஜூன் மாதம் முதலாக அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இதுவரையில் ரூ.17,016 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE