ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கோவை தொழில் துறையினரிடம் நிர்மலா சீதாராமன் உறுதி

By செய்திப்பிரிவு

கோவை: ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் பங்கேற்ற தொழில் அமைப்பினர், ஜிஎஸ்டி மற்றும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் மனுக்களை அளித்தனர். தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பேசியதாவது: கொங்கு மண்டல தொழில்முனைவோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைக் கேட்டறிய, டெல்லியில் இருந்து அரசு அதிகாரிகளை கோவைக்கு வரவழைத்து, கலந்துரையாடச் செய்துள்ளோம்.

தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏறத்தாழ 1,500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோருக்கு சிரமம் ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. 2023-ல் சிறு தொழில்களுக்கு நிதியுதவி வழங்கும் ‘சிட்பி’ கிளை கோவையில் தொடங்கப்பட்டது. 2023 அக்டோபர் முதல் கடந்தமார்ச் வரையிலான காலத்தில் ரூ.516 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை ரூ.600 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறை வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

கொங்கு மண்டலத்தில் பிரசித்திபெற்ற ஜவுளித் தொழிலை மேம்படுத்த ‘மித்ரா’ என்ற ஜவுளித் தொழில் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழில்பூங்காவில் ரூ.1,000 கோடி மதிப்பில், 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஏறத்தாழ 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விஸ்வகர்மா திட்டத்தில் பயனடைய தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஜிஎஸ்டி மற்றும் தொழில் துறை தொடர்பானகோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசியமகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் சுந்தரராமன், இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை தலைவர் ராஜேஷ் லுந்த், ‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பின் தமிழ்நாடு தலைவர் சிவக்குமார், கொடிசியா டிஃபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மைய இயக்குநர் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE