ரீடிங் கிளாஸ் இல்லாமல் படிக்க உதவும் கண் சொட்டு மருந்துக்கு தடை!

By செய்திப்பிரிவு

மும்பை: ‘பிரஸ்பயோபியா’ எனப்படும் வெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள் ரீடிங் கிளாஸின்றி தங்கள் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம் என என்டாட் பார்மாடிகல்ஸ் மருந்து நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது. இது சர்ச்சையை எழுப்பிய நிலையில், இந்த சொட்டு மருந்தை தயாரிக்க, சந்தைப்படுத்த மறு உத்தரவு வரும் வரை மத்திய மருந்துகள் நிபுணர் குழு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது. அதற்கான விளக்கத்தையும் சிடிஎஸ்சிஓ கொடுத்துள்ளது.

கண்ணாடியின்றி, அறுவை சிகிச்சையின்றி தீர்வு காண என்டாட் பார்மாடிகல்ஸ் மருந்து நிறுவனத்தின் ‘பிரஸ்வியூ’ கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம் என தெரிவித்தது. இந்த சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றினால் 15 நிமிடத்தில் வெள்ளெழுத்து பிரச்சினை சரியாகி விடும். அதன்பின் ரீடிங் கிளாஸ் இன்றி பேப்பர் படிக்கலாம் என தெரிவித்தது. இது சர்ச்சைக்கு வித்திட்டது.

இந்த சொட்டு மருந்துக்கு சிடிஎஸ்சிஓ ஏற்கெனவே அனுமதி வழங்கி இருந்தது. இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் (டிசிஜிஐ) அனுமதியும் தொடர்ந்து பெறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் சிடிஎஸ்சிஓ அனுமதியை ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் சம்பந்தப்பட்ட மருந்தை மருந்து நிறுவனம் தயாரிக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், தவறாக வழிநடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ள காரணத்தால் மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக சிடிஎஸ்சிஓ தெரிவித்துள்ளது.

கடந்த 4-ம் தேதி இந்த சொட்டு மருந்து குறித்து என்டாட் பார்மாடிகல்ஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் அதீத கவனம் பெற்றது. அதே நேரத்தில் இதில் பயன்படுத்தப்பட்ட Pilocarpine என்ற மருந்து பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE