ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கும்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹைட்ரஜன் உற்பத்திக்கான உலகசந்தையை இந்தியாவால் கைப்பற்ற முடியும் என மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 64-ம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின் கட்கரி பேசியதாவது:

இந்திய வாகனத் துறை, மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமும், உற்பத்தி துறையில் 40 சதவீதமும் பங்களிப்பை வழங்கி வருகிறது. வரும் 2030-க்குள் 1 பில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், 2070-க்குள் கார்பன் நடுநிலையை அடைவதற்கும்தேசம் உறுதியளித்துள்ளது.

நாட்டின் காற்று மாசுபாட்டில் 30-40 சதவீதம் போக்குவரத்து துறையால் ஏற்படுகிறது. இதனைகருத்தில் கொண்டு மரபுசார் எரிபொருளின் மீதான சார்புநிலை மற்றும் செலவுகளை குறைக்க மெத்தனால், எல்என்ஜி, சிஎன்ஜிஉள்ளிட்ட மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் தற்போதைய போக்குவரத்து துறையானது 85% புதைபடிவ எரிபொருட்களை சார்ந்தேஉள்ளது. எனவே, காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டுபசுமை ஹைட்ரஜன் போன்ற புதுமையான மாற்று எரிபொருளுக்கு மாறுவதை நாம் ஆராய வேண்டிய தருணம் இது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மெட்ரிக் டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. எனவே, பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். ஹைட்ரஜன் உற்பத்தியில் ஒரு முக்கிய அங்கமான எலக்ட்ரோலைசர்களை உலகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

எனினும், ஹைட்ரஜனின் தற்போதைய விலை அதன் உற்பத்திக்கு தேவையான மின்சாரம் காரணமாக ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.300 ரூபாயாக உள்ளது. இந்தகுறையைப் போக்க கரிமக் கழிவுகளிலிருந்து பயோஹைட்ரஜனை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்ற கழிவுகளை கரிம கழிவுகளிலிருந்து பிரிப்பதன் மூலம் பயோடைஜெஸ்டர்களில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம்.

இதன் உற்பத்தி விலையை கிலோவுக்கு ஒரு அமெரிக்க டாலராக குறைக்க வேண்டும் என்பதேநமது இலக்கு. இதை அடைவதன்மூலம் உலக ஹைட்ரஜன் சந்தையை இந்தியாவால் கைப் பற்ற முடியும். இவ்வாறு கட்கரி பேசினார்.

ஒரு மணி நேரத்தில் 53 விபத்து, 19 உயிரிழப்பு: உலகிலேயே அதிகமான சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நம்நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 53 விபத்துகளும், 18 இறப்புகளும் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்களால் 45% விபத்துகளும், பாதசாரிகளால் 20% விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த எண்ணிக்கையை குறைக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல திறமையான ஓட்டுநர்களை உருவாக்க வேண்டும். அதற்கான பள்ளிகளை உருவாக்க வேண்டும். அதேபோன்று பாதுகாப்பான வாகனங்களும் அவசியம் என நிதின் கட்கரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE