புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் தேசிய அளவில் 2-வது இடம் பிடித்த தமிழகம்

By செய்திப்பிரிவு

சென்னை: புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், சூரியசக்தி, காற்றாலை ஆகிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அத்துடன், பொதுமக்களும் தங்கள் வீட்டு மேற்கூரைகளில் சூரியசக்தி மின்னுற்பத்தி கட்டமைப்பை நிறுவ மானியமும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலை மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 8,379.19 மில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,400.15 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் 9,171.16 மில்லியன் யூனிட்டுகள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

அதேசமயம், காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது. காற்றாலையில் இருந்து 4,114.02 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தமிழகம் உற்பத்தி செய்துள்ளது. அதேசமயம் கர்நாடகா 3,095.93 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

மேலும், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்களிடம் உள்ள நீர்வள ஆதாரத்தைப் பொருத்து சிறிய மற்றும் பெரிய நீர்மின் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதன்படி கர்நாடகாவில் 4,500 சிறிய நீர்மின் நிலையங்கள் உள்ளன.

தமிழகத்தில் 47 நீர் மின்நிலையங்கள் மட்டுமே உள்ளன. இவை 2,321.90 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்டவை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE