காப்பீட்டு பிரீமியத்துக்கு 18% ஜிஎஸ்டி ரத்து? - முடிவை அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைத்தது கவுன்சில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், “காப்பீட்டு பிரீமியம்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி தனிநபர்கள் மீது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

இதையடுத்து பேசிய, ஜிஎஸ்டிவிகித மறுசீரமைப்பு குழுவில் உள்ள பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, சுகாதார காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஒப்புக் கொண்டார்.

இருப்பினும், காப்பீட்டு பிரீமியம்குறித்து இந்த கூட்டத்தில் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. இந்தவிவகாரம், அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கேமிங் ஜிஎஸ்டி வருவாய் 412%: ஆன்லைன் கேமிங்களுக்கானவரி விகிதம் உயர்த்தப்பட்டதையடுத்து அதன் மூலமாக மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் 412 சதவீதம் அதிகரித்து கடந்த ஆறு மாதங்களில் ரூ.6,909 கோடியை எட்டியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி ரத்து முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளதால் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான தனிநபர்கள் அதிலும் குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE