சுகோய் விமானத்துக்கு 240 ஏரோ இன்ஜின் வாங்க எச்ஏஎல் - பாதுகாப்பு அமைச்சகம் இடையே ரூ.26 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுகோய் போர் விமானத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடியில் 240 ஏரோஇன்ஜின்களை வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் பாதுகாப்பு அமைச்சகமும் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்திய விமானப்படையில் உள்ள சுகோய்-30 போர் விமானங்களுக்கு 240 புதிய இன்ஜின்களை வாங்க பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழு கடந்த வாரம் ஒப்புதல்அளித்தது.

இந்நிலையில், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்நிறுவனமும் (எச்ஏஎல்) பாதுகாப்புஅமைச்சகமும் நேற்று ஒருஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தப்படி, இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 போர் விமானத்துக்கான 240 ஏரோ-இன்ஜின்களை எச்ஏஎல் தயாரித்து வழங்கும்.

ஒடிசா மாநிலம் கோராபுட் நகரில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள தொழிற்சாலையில் இந்த இன்ஜின்கள் தயாரிக்கப்படும். இதற்கு தேவையான தொழில்நுட்பங்களை ரஷ்யா வழங்கும். சில உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படும். எனினும் உள்நாட்டு உதிரி பாகங்களின் பங்கு 63% ஆக இருக்கும். ஆண்டுக்கு 30 இன்ஜின்கள் வீதம் 8 ஆண்டுகளில் 240 இன்ஜின்களை எச்ஏஎல் தயாரித்து வழங்கும்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “எத்தகைய சூழலையும் சமாளிக்க முப்படைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் விமானப்படையின் சுகோய்-30 உள்ளிட்ட போர் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விமானங்களின் செயல்திறனை தக்கவைக்க இந்த ஏரோ-இன்ஜின்கள் முக்கிய பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் இப்போது 260 சுகோய்-30 போர் விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் 12 விமானங்கள்விபத்தில் சேதமடைந்தன.

இதற்கு பதிலாக புதிய விமானங்கள் வாங்கப்பட உள்ளன. ரஷ்யதயாரிப்பான இந்த போர் விமானங்களில் பொதுவாக அதன் வாழ்நாளில் 3 முறை இன்ஜின்கள் மாற்றப்படும். எனவே, மொத்தமாக சுமார் 900 இன்ஜின்களே தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுகோய்-30 போர் விமானங்கள் ரூ.65 ,000 கோடி செலவில் எச்ஏஎல் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. இதில்அதிநவீன ராடார், ஆயுத கட்டுப்பாட்டு அமைப்புகள், புதிய ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE