ஆன்லைன் ராஜா 31: குமிழி வெடித்தது

By எஸ்.எல்.வி மூர்த்தி

மூன்றாம் புலி மிரட்டல் கொடுத்தவர்கள் பாரன்ஸ் (Barrons), அனைவரும் மதிக்கும் அமெரிக்க நிதி ஆலோசனைப் பத்திரிகை.

மார்ச் 20, 2000. 207 இன்டர்நெட் கம்பெனிகளின் நிதி நிலைமையை ஆராய்ச்சி செய்து அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டார்கள். தலைப்பு -

எரிந்து சாம்பலாகப் போகும் இன்டர்நெட் கம்பெனிகள்.கட்டுரையின் முதல் வாக்கியம் – இன்டர்நெட் குமிழி எப்போது வெடிக்கும்?

ஆராய்ச்சி செய்த 207 நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் 12 மாதங்களில் திவாலாகும் என்று இந்தக் கட்டுரை கணித்தது.

பாரன்ஸ் சும்மா சோழி உருட்டி இந்த ஜோசியம் சொல்லவில்லை. அறிவுபூர்வ ஆராய்ச்சி, அழுத்தமான வாதங்கள், துணிச்சலான கருத்து. உண்மை நிலை அதுதான். நாஸ்டாக் (NASDAQ) என்னும் அமெரிக்கச் சந்தைப் புள்ளிக் குறியீடு 1996 – இல் 1,300 புள்ளிகளில் இருந்தது. மார்ச் 10, 2000 அன்று 5048.62 என இதுவரை காணாத உச்சம் தொட்டது. இது வளர்ச்சியல்ல, வீக்கம். இதற்குப் பல காரணங்கள்.

1996 – ஆம் ஆண்டு. இன்டர்நெட் பிசினஸின் முன்னோடியான யாஹூ தன் பங்குகளைச் சந்தைக்குக் கொண்டுவந்தது. அப்போது யாஹூவின் வருட வருமானம் 20 மில்லியன் டாலர்கள். லாபம்? ஐயய்யோ, லாபமா? நஷ்டம் 5 மில்லியன் டாலர்கள். 13 டாலர் விலையில் பங்குகளை வழங்கினார்கள். மக்களின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்று நிறுவனர் ஜெர்ரி யாங் பயந்தார். ஆனால், பங்குகளை வாங்கத் தள்ளுமுள்ளு. முதல்நாள் முடிவில் விலை 33 டாலர்கள் தொட்டது. கம்பெனியின் சந்தை மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள். 1997 – இல் மீண்டும் நஷ்டம். 1998, 1999 – இல் சுமார் 10 சதவீதம் லாபம். ஆனாலும், மக்கள் பங்குகளை வாங்கிக்கொண்டேயிருந்தார்கள். நடுவில் யாஹூவும் போனஸ் பங்குகள் வழங்கியது. 2000 – ம் ஆண்டில் பங்கு விலை 475 டாலர்கள். சந்தை மதிப்பு 125 பில்லியன். உலகத்தில் சந்தை மதிப்பில் முதல் இடம். நான்கே ஆண்டுகளில் முதலீடு 125 மடங்கு எகிறிவிட்டது.

1997. அமேசான் ஐபிஓ. அப்போது அமேசானின் வருட வருமானம் 16 மில்லியன் டாலர்கள். நஷ்டம் 6 மில்லியன் டாலர்கள். 18 டாலர் விலையில் தொடங்கியது. முதல்நாள் முடிவில் விலை 23.50 டாலர்கள். சந்தை மதிப்பு 572 மில்லியன் டாலர்கள். 1999. வருமானம் 1,640 மில்லியன். நஷ்டம் 720 மில்லியன். 1998, 1999 ஆண்டுகளில் போனஸ் ஷேர்கள். 1997 – இல் வாங்கிய ஒரு ஷேர் 12 ஆகக் குட்டி போட்டுவிட்டது. 2000 – ஆம் ஆண்டில் பங்கு விலை 75 டாலர்கள். இதனால், சந்தை மதிப்பு 22 பில்லியன் (அதாவது 21,906 மில்லியன்.) மூன்றே ஆண்டுகளில் முதலீடு 38 மடங்கு அதிகமாகிவிட்டது.

யாஹூ.காம், அமேசான்.காம் எனத் பெயருக்குப் பின்னால் ``காம்” இணைத்துக் கொண்டிருந்த எல்லா டாட்.காம் கம்பெனிகளிலும் இப்படித்தான் முதலீடு எகிறும் என்று மக்கள் நினைத்தார்கள். வாழ்நாள் சேமிப்பை, பென்ஷன் பணத்தை இந்தக் கம்பெனிகள் மீது கட்டினார்கள். போதவில்லையா? வீடுகளை அடமானம் வைத்தார்கள். இது ஒருவிதச் சூதாட்டம் என்று அவர்களுக்குத் தோன்றவேயில்லை.

இந்த அமோக வரவேற்பினால், அமேசான், செல்லப் பிராணிகளுக்கான Pets.com தொடங்கியது. வால்ட் டிஸ்னி நிறுவனம், தேடல் பொறியான Go.com அரங்கேற்றினார்கள். இதேபோல், வீட்டுக்கு வீடு மளிகை சாமான்கள் சப்ளை செய்யும் Webvan.com, பொம்மைகளுக்கான eToys.com, சமூக வலைதள முன்னோடி Globe.com என நூற்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் களத்துக்கு வந்தன. இதில் பலர் நம் ஊர் ஃபைனான்ஸ் கம்பெனிகள் போல் டுபாக்கூர்கள். கம்பெனியை தொடர்ந்து நடத்தும் எண்ணமோ, திட்டமோ கிடையாது. நாளிதழ்கள், பத்திரிகைகள், டி.வி. ஆகியவற்றில் கலர் கலர் விளம்பரங்கள் போட்டார்கள். இவற்றைப் பார்த்த மகாஜனங்கள் ஏமாந்தார்கள். எல்லா டாட்காம் கம்பெனிகளின் ஐபிஓ – க்களிலும் கண்களை மூடிக்கொண்டு பணம் போட்டார்கள்.

ஏனோ, பெரும்பாலான நிதி ஆலோசகர்களும் இதற்குத் துணை போனார்கள். பங்குகளின் விலை மதிப்பை நிர்ணயிக்க, P/E என்னும் விகிதம் பயன்படுகிறது. இதில் P என்பது பங்குவிலை. E என்பது ஒரு பங்குக்கு கம்பெனி ஈட்டியிருக்கும் நிகர லாபம். அரசாங்கத்துக்கு வருமான வரி கட்டியபின் இருக்கும் லாபம். நமக்கு ABC Limited கம்பெனியின் ஒரு பங்கை வாங்கவேண்டும். அதற்கு நியாயமான விலை என்ன தரலாம் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

ABC Limited கம்பெனியில் 1000 பங்குகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம், அவர்களின் வருடாந்தர லாபம் 10,000 ரூபாய். அதாவது, ஒரு பங்கு ஈட்டியிருக்கும் லாபம் 10,000 / 1,000 = 10 ரூபாய். கம்பெனி ஈடுபட்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப, P/E விகிதம் மாறும். குத்துமதிப்பாகச் சொன்னால், அதிக முதலீடு தேவைப்படும் தொழில்களுக்கும், தொழில் தொடங்கி உற்பத்தி / விற்பனை ஆரம்பிக்க அதிக நாட்களாகும் தொழில்களுக்கும், P/E குறைவானதாக இருக்கும். ABC Limited இத்தகைய பிசினஸில் இருந்தால், விகிதம் 10 – ஆக இருக்கும். அதாவது P/E = 10. இதில் E = 10. நீங்கள்தான் கணக்கில் புலியாச்சே? ஆகவே P எத்தனை? 10 X 10 = 100 ரூபாய். ஆகவே, ABC Limited கம்பெனியின் ஒரு பங்குக்கு 100 ரூபாய் தரலாம்.

பேராசை பிடித்த முதலீட்டாளர்கள் டாட்காம் கம்பெனிகளில் P/E விகிதமெல்லாம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், காசு போட்டிருக்கவே மாட்டார்கள். இந்தக் கம்பெனிகளில் E என்னும் லாபமே கிடையாது. கோடிக் கோடியாய் நஷ்டம்தான். பாரம்பரிய ஆராய்ச்சிப்படி, இந்தப் பங்குப் பத்திரங்கள் குப்பைக் காகிதங்கள்.

1872 முதல் 1995 வரையிலான 125 வருடங்களில் 500 கம்பெனிகளுக்கான சராசரி விகிதம் 14 – ஆக இருந்தது. 1996 – இல் யாஹூ, 1997 – இல் அமேசான், மற்றும் டாட்காம்களின் ஐ.பி.ஓ. இந்தத் தாக்கங்களால் P/E விகிதம் எப்படி எகிறியது தெரியுமா?

வருடம் P/E விகிதம்

1996 : 19.53

1997 : 24.29

1998 : 32,92

1999 : 29.04

அமெரிக்கப் பங்குச் சந்தை புள்ளிக் குறியீட்டின் வீக்கம் இதனால்தான். பல ஆன்லைன் கம்பெனிகளின் விகிதம் 200 – க்கும் அதிகமாக இருந்ததுதான் இதற்குக் காரணம்.

பாரன்ஸ் கட்டுரையின் தாக்கம், Microstrategy என்னும் சாஃப்ட்வேர் கம்பெனி தன் வருடாந்தர அறிக்கையில் லாபத்தை அதிகமாக்கித் தில்லாலங்கடி செய்திருப்பதாக ஒப்புக் கொண்டது. 333 டாலர்களாக இருந்த அதன் பங்கு விலை ஒரே நாளில் 120 டாலர்கள் குறைந்து 213 டாலர்களைத் தொட்டது.

அடுத்த சில நாட்கள். ஒரே ரணகளம். 118.75 டாலர்களுக்கு விற்ற யாஹூ பங்கு 8.11 டாலர்களுக்கு, ஆமாம், வெறும் எட்டே டாலர்களுக்குச் சறுக்கியது. 106.69 டாலர்களுக்கு விற்ற அமேசான் பங்கு 5.97 டாலர்களுக்கு சர்ர்ர்ர்..... அமேசான் தொடங்கிய Pets.com, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் Go.com ஆகிய இரு நிறுவனங்களும் பெரிய திண்டுக்கல் பூட்டு வாங்கிக் கடையை மூடினார்கள். ஆடிக்காற்றில் இந்த அம்மிகளே பறக்கும்போது. Boo.com, Broadcast.com, Den.com, eToys.com, Flooz.com, Kozmo, Pets.com, Razorfish, theGlobe.com and Webvan போன்ற பிற டாட்காம் கம்பெனிகள் என்னவாகும்?சீட்டுக்கட்டுக் கோபுரங்களாகத் தரை மட்டமாயின. முதலாளிகள் சுருட்டிய பணத்தோடு தலை மறைவானார்கள். ஒரு சிலர் அரசு விருந்தாளிகளாய்க் களி சாப்பிட்டார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய அமேசான், ஈ பே, பே பால் (Pay Pal) போன்ற சில கம்பெனிகள் விழுந்தார்கள். ஆனால், மீண்டும் எழுந்தார்கள்.

அமெரிக்காவின் பொருளாதார பலத்தால், அங்கே குளிர்காற்று அடித்தால், உலகின் அனைத்துப் பங்குச் சந்தைகளிலும் ஜூரம் வரும். வந்தது. சீனாவில் நடுக்கம். குறிப்பாக, சீனாவின் ஆன்லைன் கம்பெனிகளுக்கு யாஹூவும், அமேசானும்தான் கடவுள்கள். அவர்களோடு ஒப்பிடும்போது சுண்டைக்காய்கள். அதிலும், பிசினஸ் உலகில் கத்துக்குட்டிகள். யாஹூவும், அமேசானுமே தள்ளாடும்போது தங்கள் வருங்காலம் அதோகதிதான் என்னும் பயம். ஜாக் மாவின் கூட்டாளிகளும் இதே மனநிலையில்தான்.

ஜாக் மா தன் ஹாங்ஸெள கூட்டாளிகளுக்கு போன் செய்தார். பேசினார், ``நாஸ்டாக் நியூஸ் கேட்டிருப்பீர்கள். நான் ஒரு பாட்டில் ஷாம்பேன் வாங்கி அந்தச் சேதியைக் கொண்டாடப்போகிறேன்.”

ரோமாபுரி தீப்பிடித்து எரியும்போது வயலின் வாசித்த நீரோ மன்னர் வரலாறு சகாக்கள் நினைவுக்கு வந்தது.

நம்ம ஆளு சொன்ன காரணங்கள் அவர்கள் மனங்களை மாற்றின. அப்படி என்ன சொன்னார்?

(குகைஇன்னும்திறக்கும்)

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

மேலும்